பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 96



இரக்கமெனும் கிணறு கண்ணீரெனும் ஊற்றைப் பெருக்கக் கூடுமெனினும், பெரும்பாலும் அவ் ஊற்று தன் தேவையைத் தன்னலமெனும் இருண்ட மடுவிலிருந்தே பெறுகின்றது. ஏனெனில், தன்னலம் தடைப்படும்போது, அது கண்ணீராகத் தன்னைக் கரைத்துவிடுகின்றது.

சிணுக்கத்திலும், தீய தன்மையுடைய ஏளனத்திலும், வெறுப்பான பழிப்பிலும், வசையிலும், வக்கணையிலும், சினத்திலும், கண்டனத்திலும், அதே போன்று, நடைமுறை ஆதாரம் எதுவுமின்றிக் கொள்கை அளவினதான, பாவனை செய்து கொள்ளப்படுவதான மெய்ப்பாட்டிலுமே இரக்கமின்மை காணக்கிடக்கின்றது.

தன்னலத்திலிருந்தே இரக்கமின்மை தோன்றுகின்றது. அன்பிலிருந்து இரக்கம் தோன்றுகின்றது. தன்னலம் அறியாமையில் அமிழ்ந்திருப்பது; அன்பு அறிவுடன் தொடர்புற்றிருப்பது. தமக்கெனத் தாம், தனிப்பட்ட குறிக்கோள்களும் அக்கறைகளும் கொண்டவராகவும், தம்மைத் தம் தோழர்களிடமிருந்து தனிப்பட்டவராகக் கற்பனை செய்து கொள்வதும், அவரவர் பின்பற்றும் வழிகளில் தாம் நேரான போக்குடையவராகவும், பிறர் தவறான போக்குடையவராகவும் இருப்பதாகக் கருதிக் கொள்வதும் மக்களிடையே காணப்படும் பொது நிலையாகும். தனிப்பட்ட, தன் காரியத்தில் ஈடுபாடுடைய இத்தகைய வாழ்வினின்றும் மனிதனை உயர்வடையச் செய்து அவன் தன் கூட்டாளிகளின் உள்ளங்களில் அவர்களுடன் ஒன்றுபட்டு எண்ணவும், உணரவும் இரக்கம் வகை செய்கின்றது.