பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

19

வலுப்படுத்தும் எல்லா அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் துணையாக நிற்கும் ஒரு சட்டம், வெளி நாட்டுத் தொடர்பில் நாட்டின் பொதுக்கருத்துக்கு மாறாக எவரேனும் நாட்டை எதிரி நாட்டுக்குக் காட்டிக் கொடுக்க முற்படின், அவர் தம்மை நாட்டின் உட்பகையாகக் கருதுவது இயற்கையே. அப்படி உட்பகையாகக் கருதப்பெறுவார் மேல் தண்டம், சிறை முதலிய கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதும் இயற்கையே! ஆனால் அத்தகையதொரு சட்டத்தை வைத்துக் கொண்டு இந்திய நாட்டை வேட்டெஃகத்தால் ஒற்றுமைப்படுத்த நினைப்பதும், அவ்வாறு ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் தலையாயதாக இந்திமொழியை நாடு முழுவதும் ஆட்சி மொழியாகச் செய்ய முற்படுவதும், அதன் பொருட்டுப் பிறமொழிகளின் இயற்கை உரிமையைப் பறிப்பதும், பிறமொழிகள் பேசும் மக்களின் தன்னுரிமையான எண்ணங்கட்கு மாறாக நடப்பதும், மீறினால் அடக்க நினைப்பதும், அதையும் மீறுவராயின் சிறைப்படுத்திக் கடுங்காவல் தண்டங்களை வழங்குவதும் மக்களுரிமை அரசாட்சி அமைப்புக்கே மாறான செயல்களாகும். இத்தகைய செயல்களால் அரசினர் எதிர்பார்க்கும் நாட்டு ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மாறாக உள்நாட்டுக் குழப்பங்களும் ஒற்றுமைக் குலைவுந்தாம் ஏற்படும் என்பதைத் தொடக்க நிலை அரசியலறிவு வாய்ந்தவன்கூட எளிதில் புரிந்து கொள்ளுவான்.

இந்நிலையில் அரசினர் தாம் கொண்ட விடாப்பிடியான நடவடிக்கைகளை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை, ஆங்காங்கே மேற்கொள்ளப்பெறும் கடுமையான அடக்குமுறைகளைக் கொண்டு திட்டவட்டமாக உறுதிப்படுத்தலாம். இந் நடவடிக்கைகளுக்கு முதற்படியாக மக்களின் மொழி உரிமைகளைப் பற்றிப் பேசும்தாளிகைகள் கட்டுப்படுத்தப் பெற்று வருகின்றன. மக்களின் கருத்துகளைத் தெளிவாக உணர்த்தும் செய்தித்தாள்கள் ஒருநாட்டின் அரசியல் அமைப்புகளை விளக்கிக் காட்டும் காலக்கண்ணாடிகள் ஆகும். செய்தித்தாள்கள் அவ்வப்பொழுது அரசினரின் உள்நாட்டு நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசுவது, விளையப் போகும் விளைவுகளை ஆட்சிப் பித்தம் தலைக்கேறிய அரசினர்க்கு எதிர்காலத்தை உணர்த்தும் முன்னறிவிப்பாகும். அதற்காக அச் செய்தித்தாள்களின் மேல் அடக்கு முறைகளைப் பாய்ச்சுவது அந்த உண்மையாக ஏற்பட்டிருக்கும் மக்களின் உள்ளக் கிளர்ச்சிகளைப் புதைத்து விடுவதாகாது. அடக்கு முறைகளாலும் கடுந்தண்டங்களாலும் உரிமையுணர்வு மேன் மேலும் கிளர்ந்தெழுமே யொழிய என்றும் அடங்கிவிடாது. இதனை மக்களின் வரலாறு அறிந்த யாவரும் தெள்ளிதின் உணர்வர். வெளிநாட்டு அரசியல் போக்கிற்காக உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளைத் தடுத்துவிட