பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

267


 
தமிழ்நாட்டை முழு இறைமையுடைய
தனிநாடாகப் பிரித்துத்
தமிழரே ஆளுமை செய்வது

— என தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு
உறுதியாகவும் இறுதியாகவும் தீர்மானிக்கிறது !


டந்த திசம்பர் 27, 28-இல், சென்னை மாநகரில், பெரியார் திடலில், நாம் அனைவரும் மிக்க ஆர்வத்துடனும், அழிக்கவொண்ணாத் தேவையுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு இறுதியில் நடந்தே முடிந்தது.

காலம் இக் கருத்துக்கு இயைபாக இருக்கவில்லையானாலும், காவல்துறை கட்டவிழ்த்து விடப் பெற்றுக் கையில் பை வைத்துக் கொண்டு, வண்டியிலிருந்து இறங்கி நடந்து வந்தவர்களெல்லாம், தடுத்து நிறுத்தப் பெற்று, ஆய்வு செய்யப்பெற்று, உசாவலுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்னும் அஞ்சத்தகுந்த நடுநடுக்கும் அரசியல் சூழலிலும், தமிழுக்கு ஆதரவாகவும் இந்திக்கு எதிராகவும் குரல் கொடுத்த தமிழின வீரர்கள் இருபத்தையாயிரவர்க்கு மேல் கடுஞ்சிறை புகுந்த நேரத்திலும் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு யார் வரப் போகிறார்கள் என்று எண்ணியிருந்த வேளையிலும், நூற்றுக்கணக்கான வீரத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் முதலிய அனைவரும் கருத்தரங்கில் மிகத் துணிவுடன் கலந்துகொண்டனர்!