பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

275

வெறுத்து இகழ்கின்றனர். இதை எங்கே போய்ச் சொல்லி முறையிடுவது? எந்த வழக்கு மன்றத்தில் எடுத்துக் கூறி ஞாயம் கேட்பது?

அவரவர் தாய் மொழியில் பேசுவது தவறா? அவரவர் தாய் மொழியைப் பேணுவது குற்றமா? இந்தியத் தேசியம் என்னும் முரண்பாடான கொள்கைக்காக இந்தி மொழியில் பேசுவதுதான். சரியா? இந்தி மொழி வளர்ச்சிக்காகப் பல்லாயிரங் கோடி உருபாவை நம் வரிப் பணத்தில் செலவிடுவதா? தாய் பசித்திருக்க, நம் பிள்ளை பாலுக்கு ஏங்க வேற்றுத் தாய்க்கு விருந்து வைப்பதா? வேறு பிள்ளைக்குப் பாற் சோறு ஊட்டுவதா? எங்கு அடுக்கும் இக்கொடுமை? யாருக்கு நிறைவு தரும் இம் மாற்றாந்தாய் மனப்பான்மை?

எனவே, எத்துணைத் துயர் அடுக்கடுக்காக வந்தாலும் நம் தாய்மொழியான தமிழை நாம் வளர்த்தே ஆக வேண்டும். அது தான் நமது கடமை. தாய்மொழி வழியாகத்தான் நாம் கல்வி கற்றாக வேண்டும். அதன் வழியாக நாம் அறிவு பெறுவதுதான் நமக்கு ஏற்றது; இயல்வது. என்ன மொழியாயினும் நமக்குப் பிறர்மொழி பிறமொழிதான். ஆகவே நம் தாய் மொழியை நாம் விரும்ப வேண்டும்; விரும்பிப் படிக்க வேண்டும். அதைக் கண்ணும் கருத்துமாக நாம் பேணிக் காக்க வேண்டும். அதுவே நமக்கு வாழ்வியலைக் கற்பிக்கும்மொழி; அறிவை, அறிவியலைக் கற்பிக்கும் மொழி. அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில வகையில் அது வளர்ச்சி குன்றியிருக்கலாம். அவ்வவ்வகை யிலெல்லாம் அதை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் இலக்கிய வளமையைப் போலவே, வாழ்வியல் சிறப்பைப் போலவே, இஃது அறிவியல் வளம் பெற்றதாகவும் வேண்டும். பல்வேறு அறிவியல் கூறுகளை யெல்லாம் நம் மொழியில் வளர்த்தெடுக்க வேண்டும்.இதற்கு நம் அரு முயற்சி. வேண்டும். பெரிதும் உழைக்க வேண்டும்.

நம்மிடையே வேறு பல மொழி பேசுபவர்கள் இருக்கலாம். அவர்களுள் தெலுங்கு பேசுபவர் இருக்கலாம்; கன்னடம் பேசுபவர் இருக்கலாம்; மலையாள மொழி பேசுபவர் இருக்கலாம். அவர்களெல்லாரும் நம் தாய் நாட்டில் வாழலாம். அவர்களும் நம் தாய்மொழியாகிய தமிழைத் தங்கள் தாய்மொழிகளுடன் படிக்கலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. பார்க்கப் போனால் தமிழ் மொழி அவர்களுக்கும் தாய்மொழி போன்றதுதான், தமிழ் மொழியிலிருந்தே அவர்களின் தாய்மொழியாகிய தெலுங்கு,