பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

வேண்டும் விடுதலை

வளர்ச்சியுற்று தேசிய மாநிலங்கள் பிரிக்கப் பெறும்பொழுது அவை சரியான மொழி, இன, வரலாற்றோடும், கலை, பண்பாட்டு நிலைகளோடும் பொருந்தும்படியாக அமைக்கப் பெறும்.

அடுத்து, இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் அனைத்துமே இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போகும் நோக்கத்தை இக்கால் கொண்டிருக்கவில்லை. ஒரு சில மாநிலங்களே அந்நோக்கத்தைக் கொண்டுள்ளனவாக அவற்றின் அரசியல், பொருளியல், இனவியல் செயற்பாடுகளிலிருந்து தெரிய வருகிறது. அதற்குத் தலையாய காரணம், இந்திய மாநிலங்கள் பலவும், இந்தியாவினின்று பிரிந்து தனியே முழு இறைமை பொருந்திய தனியரசை அமைத்துக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவிற்கு, மொழி, இனம், கலை, பண்பாடு, வரலாறு, பொருளியல் ஆகிய நிலைகளில் தனித்தன்மைகளும் வலிவும் கொண்டன அல்ல. எனவே, அவை இந்தியாவுடன் தங்களை இணைவித்துக் கொண்டு ஒன்றாயிருக்க விரும்புவதில் வியப்பில்லை. இன்னும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் பச்சையாகவும் சொல்வதானால், இந்திய ஒன்றியத்திலிருந்து, இக்கால் முழு இறைமையுடன் பிரிந்துபோய்த் தனி நாடாக இயங்குவதற்குரிய முழுத் தகுதியும் முழு விருப்பமும் கொண்ட ஒரே நாடு தமிழ் நாடேயாகும். ஏனெனில் இஃது ஒன்றுதான் தனித்தேசிய இன ஆளுமைக்குப் பொருத்தமானதாக உள்ளது. அதற்கு முழுமையான அடிப்படைக் காரணம், தமிழ்நாடு ஒன்றுதான், இந்தியத் தேசிய இனங்களுக்குள்ளேயே, மொழி, இன, நிலம், கலை, பண்பாடு, அரசியல், பொருளியல், வரலாற்று நிலைகளில் முழுத் தனித்தன்மையும், முழு வலிமையும் கொண்ட ஒரு நாடாக உள்ளது. இதை ஒப்பவைத்துப் பார்க்கும் பொழுது இங்குள்ள வேறு எந்தத் தேசிய இனத்திற்கும் இத்தகுதிகள் குறைவாகவே உள்ளதை ஆய்ந்து உணரலாம். பின்னர் ஏன் அவற்றுள் ஒரு சில இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்துபோய்த் தனித்தேசிய இன நாட்டை உருவாக்க விரும்புகின்றன என்றால், அது, இன்று இந்தியாவை ஆட்சி செய்யும் பார்ப்பணிய வணிக முதலாளிகளின் ஓரினச் சார்பான கொடுங்கோலான ஆட்சித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாததால்தான் என்க.

இத்தகைய ஆட்சிக் கொடுமை நிலை, இப்பொழுதுள்ள ஆட்சியமைப்பில் என்றுமே மாறாத மாற்றமுற விரும்பாத தன்மையில் என்றென்றுமே நிலைத்திருக்கும் வலிமைபெற்றதாகும். அவ்வாறு வலிமை குன்றுகிற நேரம் ஒருவேளை எதிர்காலத்தில் வந்தாலும்,