பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

63

முதலமைச்சரின் தன்னாட்சிக் கொள்கையைப் பகடி செய்வதுடன், நீறு பூத்தநெருப்பாய்க் கனன்றுக் கொண்டிருக்கும் தமிழக விடுதலையுணர்வையே இழித்தும் பழித்தும் பேசி வரத் தலைப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மொழியடிப்படையில் தனித்தமிழ்க் கொள்கையையும் அரசியல் அடிப்படையில் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையையுமே தன் தலையாய கொள்கைகளாக கொண்டுள்ள தென்மொழி, மக்களின் கொள்கைக் குழப்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய ஓர் உயர்ந்த மாந்த உரிமைக் கோட்பாட்டை விளக்கத் தன்னை அணியப்படுத்திக்கொண்டு முன்வர வேண்டியுள்ளது.

தமிழகத்தின் பிரிவினை எண்ணம் இன்று நேற்று ஏற்பட்டதன்று; ஏறத்தாழ கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாகவே, தமிழ் நலமும், தமிழர் நலமும் கருதி வருகின்ற தமிழகத் தலைவர்களிடையில் அரசியல் முறைப்படி தமிழகத்தை வடஇந்திய ஆட்சித் தொடர்புகளின்று துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அரசியல் கருத்துப்படியும். பொருளியல் அடிப்படையிலும், குமுகாய அமைப்பு படியும் அதற்குப் பெருத்த வலிவான கரணியங்கள் பல இருந்தன. இன்னும் இருந்து வருகின்றன. ஆனால் நாடு அப்போது வெள்ளைக்காரனின் கையில் இருந்ததாலும் ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கே விடுதலை வேண்டும் என்ற வேட்கை நாடு முழுவதும் பரந்துபட்டிருந்ததாலும், தென்னிந்தியா வடவர் தொடர்பின்று தனியே பிரிக்கபட வேண்டுமென்ற கோரிக்கை வலியுறுத்தப்பெறாமல் வெறும் கருத்தளவிலே மட்டும் ஒப்புக்கொள்ளப் பெற்ற கொள்கையாக இருந்துவந்தது. அக்கொள்கைக்கு அரணாக நின்ற தூண்கள் தமிழகத்தும், ஆந்திரத்தும் கேரளத்தும் கன்னடத்தும் தம் கால்களை ஊன்றிக்கொண்டு நின்றன. அவை அனைத்தும் தங்கள் ஒட்டுமொத்த கொள்கைக்கு இட்டுக் கொண்ட பெயர் திராவிட நாட்டுப் பிரிவினை என்பதே ஆகும். ஆனால் காலச் சிதைவினாலும், காந்தியின் சூழ்ச்சியினாலும் வெள்ளைக்காரன் வடவர்களிடத்தும், முசுலீம்களிடத்தும் இந்தியாவையும் பாக்கித்தானையும் ஒப்படைத்து விட்டுப்போக வேண்டியானது. இதன் பின்னும் இக்கொள்கை மேலும் வலுப்பெற்றுத் தீப்பற்றி எரியலானது. தென்னாட்டு மக்களிடையே குறிப்பாகத் தமிழரிடையே இவ்வெண்ணம் பெரியார் ஈ.வே.இரா. அவர்களாலும் நெய்யூட்டி வளர்க்கப் பெற்றது. பாவேந்தரால் நாட்டுப் பண்ணும் முழங்கப்பெற்றது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்துச் சிதைவாலும், கட்சிக் குலைப்பாலும், திராவிட நாட்டுப் போர் முழக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து போனது,