பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

69

வழக்க ஆட்சியினின்று என்னையும் நான் பிறந்த மொழி வழங்கும் இந்நாட்டையும் வேறு பிரித்து, அரசியல் பொருளியல், ஆகியவற்றில் சமத்துவம் வாய்ந்ததும், குமுகாயவியலில் சாதி, சமய, வேறுபாடற்ற பொதுமை நிறைந்ததும், மொழியுரிமை பெற்றதும் பண்பாட்டில் தலைசிறந்ததுமான ஓர் ஆட்சியை நிறுவிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏழாவதாக, ஒரு பெரிய நிலமாக இருப்பதாலும், இந்தியா விடுதலை பெற்று இருபத்தைந்து ஆண்டுகளாக, பெரும்பாலும் வடவர்களே ஆட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைக்கொண்டு வருவதாலும், ஆட்சி வரலாற்றில் சிறந்ததும், மூத்த நாகரிகம் உடையதும் முதன்மையான மொழிச்சிறப்புடையதும் ஆகிய என் தமிழினத்திலிருந்து ஒருவருக்கும் இதுவரை ஆட்சியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாலும், பொருளியல் நிலையில் இன்னும் என் தாய் மாநிலம் முன்னேறாது இடருற்று வருகின்ற இந்த அவல நிலையை மாற்ற, இவ்விந்திய நாட்டினின்று நாங்கள் விடுதலை பெற்றேயாக வேண்டும் என்ற முழக்கத்தை எப்பொழுதும் வற்புறுத்த அணியமாக உள்ளோம் என்பதை யாவர்க்கும் வெளிப்படையாக மிக மிகப் பச்சையாகக் கூறிக்கொள்கின்றேன். இக்கோரிக்கை வங்காள தேசம் போல் போராடித்தான் நிறைவேற்றப் படவேண்டும் என்பதும், வழக்காடியும் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் இவ்விந்திய ஆட்சியினரையும், காலத்தையும், இடத்தையும் பொறுத்ததாகும் என்று கூறி முடிக்கிறேன். அதுவரை என் தோள்கள் அமைந்திருக்குமாக!

- தென்மொழி, சுவடி :9, ஓலை 9-10, 1972