பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

71

இனங்களோ ஒன்றோடு ஒன்றை இணைப்புச் செய்து கொள்ள விரும்புவதால் எப்படிச் சிலர்க்கு சில நன்மைகள் விளையத்தான் செய்யுமோ, அப்படியே அவை இரண்டும் தம்முள் தனித்தனிப் போக்குகளை ஏற்படுத்திக்கொள்ள முனைவதாலும் சில நன்மைகள் விளையத்தான் செய்யும். முன்னைய நன்மைகளைக் காட்டிப் பின்னைய நன்மைகளை மறுப்பது அறியாமையாகும். அவ்வறியாமை நல்ல அரசியல் அறிவாகாது; மாந்த மெய்ப்பாட்டியலுக்கு ஒத்ததாகவும் கருதப்பெறாது.

பெரும்பாலும், இரு வேறு நிலப்பகுதிகளின் இணைப்பு நிலைக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ, அப்படியே பிரிவு நிலைக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்யும். இதில், இரு நிலைகளையும் நன்கு விளங்கிக் கொண்டு செயலாற்றுவதில்தான் அறிவு துணைநிற்க வேண்டுமே தவிர, மட்டையடித்தனமாக ஒன்றிற்காக ஒன்றைத் தவிர்த்து விட முயற்சி செய்வதற்கு அறிவுத் துணை தேவையே இல்லை. குருட்டுத்தன்மை என்பது அறிவு நிலையில் இருசாரார்க்கும் பொதுவே! ஆள்பவனுக்கு அந்நிலை குறைவாக இருக்குமென்றோ, ஆளப்பெறுவோர்க்கு அது மிகுந்திருக்கு மென்றோ கருதுகின்றவன் காலப்போக்கில் புறந்தள்ளப் பட்டு விடுவது இயற்கை. பிரிவு என்பது பகையாகாது: இணைப்பு என்பது நட்பும் ஆகிவிடாது. எனவே பிரிவு என்றவுடன் வெகுண்டெழுக் கூடியவனோ, முகத்தைச் சுளிப்பவனோ, இணைப்பு நிலைபற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவனாவான். தாயை மகள் பிரிவதற்கும் காலம் ஒன்று உண்டு என்பதையும், குஞ்சைத் தாய் தனித்து வாழ விடுவதற்கும் அடிப்படை உண்டு என்பதையும் அரசியல் மூடர்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிரிந்து போவதைத் தடுப்பவன் ஒருகால் இணைந்திருக்கும் நிலையினால் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ அந்நிலையினால் ஊதியம் பெறுவோனாகத்தான் இருக்க வேண்டும், தாய்மைப் பாசத்துடன் பிரிவைத் தடுப்பவன் ஓரின மக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அறியாமையைச் செய்கின்றான். தனி மாந்த நிலையிலும் பொதுமாந்த அல்லது குமுகாய நிலையிலும் பிரிவு என்பதையும் 'இணைப்பு’ என்பதையும் ஒரே பொருளுடைய சொற்களாகக் கருதிக்கொள்ளக் கூடாது. அதனால் பிழைகளும் கடுமையான விளைவுகளுமே எஞ்சும்.

இவ்வுலகம் தோன்றியதிலிருந்து தன்னுடன் இணைந்துள்ள ஒரு நாட்டைப் பிரிந்து போவதற்கு மன நிறைவோடு இசை