பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

83

பணம் பண்ணிக் கொண்டு வாழ்கின்றார். இப்படி எல்லாரும் ஏதோ ஒரு வகையில் அல்லது சிலவகையில் உயர்ந்தும், பிறிதொன்றில் அல்லது பலவகையில் தாழ்ந்துமே என் கண்களில் படுகின்றனர். இனி என்னைப் பொறுத்தவகையிலும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் இருக்கத்தானே செய்யும் என்று நானே என்னைக் கேட்காமவில்லை. ஏற்றத் தாழ்வுகள் என்பன பலவகைப்பட்டன. என் மூக்கு நீளமாக இருக்கலாம். அதனால் என் பார்வை கோளாறு உள்ளதாகக் கூற முடியாது. என்நாக்கு நீளமென்று சிலர் கூறலாம். அதனால் என் கருத்தில் கூனல் விழுந்து விட்டது என்று எவரும் கூறிவிட முடியாது. இதுவரை எவரையும் எதற்காகவும் நான் வஞ்சித்ததில்லை. எவர்க்காகவும் எதற்காகவும் நான் என் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை. முன்னொன்று பேசி அதனைத் தவறு என்று உணர்ந்ததாக இதுவரை எனக்கு நினைவில்லை. அவ்வாறு உணரும் பொழுது அதைத் திருத்திக் கொள்ளவும் நான் அணியமாகவே இருக்கின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் குணங்கள் மாறுபட்டதில்லை. எதற்காகவும் என்னை நான் பணித்துக் கொண்டதில்லை. கட்டுப்படுத்திக் கொண்டவனும் இல்லை. பதவியையும் செல்வத்தையும் தானே என் காலில் வந்து ஒட்டிக் கொள்ளும் தூசைவிடக் கீழானவையாகவே என் மனம் நினைக்கின்றது பணம் என் வினைபடு கருவி; வழிபடுகருவியன்று.

என்னை என்றும் தலைவன் என்ற சொல்லுக்கு அணிமைப்படுத்திக் கொண்டதே இல்லை. என்னை விட, இங்குள்ள யாவரையும் விட ஒரு பேராற்றல் இவ்வுலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக நான் என்று மெய்யறிவால் கண்டு கொண்டேனோ, அன்றிலிருந்தே என்னை ஒரு கருவிப் பொருளாகக் கருதிக் கொண்டிருகின்றேனேயன்றி, ஒரு கருத்தா அஃதாவது ஒரு தலைமைப் பொருளாக என்னை ஒரு நொடிப் பொழுதேனும் நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னை அப்படிக் கூறுபவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு அப்படியொரு தலைவன் தேவையாக இருக்கின்றது போலும் என்று கருதிக் கொண்டு இருக்கின்றேனே தவிர, என்னையே அவர்களின் விளிப் பொருளுக்கு உகந்தவனாகக் கருதிக் கொள்ளவில்லை. இவ் வகையில் எனக்கு நேர்மாறான பொருளைக் கற்பித்துக் கூறிக்கொண்டிருப்பவர்கள் மேல் எனக்கு அவர்களின் அறியாமையைப் பற்றி இரக்கமே ஏற்பட்டுள்ளது.

எனவே, எதைப்பற்றியுமே எண்ணிச் செருக்குறாத நினைவுடன், தமிழர்களின் இயற்கை மெய்ப்பாட்டியலுக்கு மாறுபடாத விடுதலை