பக்கம்:வைணமும் தமிழும்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. வைணவ திவ்விய
தேசங்கள்

வைணவ திவ்வியதேசங்கள் என்பன திருமால் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்கள். இவை யாவும் பருப்பொருள் நிலையில் வைணவத்துவத்தை விளக்கிக்கொண்டிருப்பன போல காட்சியளிக்கின்றன. வைணவ தத்துவம் சித்து, அசித்து, ஈசுவரன் என்பதை நாம் அறிவோம். ஒரு திவ்விய தேசத்தில் வாழும் மக்கள் யாவரும் 'சித்து’ என்ற தத்துவத்தைக் குறிக்கின்றனர். 'அசித்து' என்பது திருக்கோயில் இருப்பிடம் அதன் சுற்றுப்புறச் சூழ்நிலையாக தோட்டம், தோப்பு முதலியவைகளைக் குறிப்பிடுவதாக கொள்ளலாம். ஈசுவரன் என்பது அங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானைக் குறிக்கின்றது.இதனால் திருத்தலப்பயனம் செய்வோர் ஒருவித பக்தி நிலையை அநுபவிப்பதோடு வைணவ தத்துவத்திலும் ஆழங்கால்படுவது என்ற ஐதிகமாகவும் அமைகின்றது.

          கடலலைகள் தோற்கும் கடும்பிறவி வெள்ளத்
          துடல்நரகத் துள்நின் றுழலா-தடைநெஞ்சே!
          ஆழ்வார்கள் பாட்டால் அலங்கரித்த லால்பதிகள்
          மூவாறு முப்பத்து முன்று.

          அறனளிக்கும் ஆன்ற பொருளளிக்கும் வீட்டின்
          திறனளிக்கும் வேறென்ன செய்ய? - பிற உரைக்கு
          நூலா யிரம்கற்பின் நோக்குங்கால் யாதுபயன்
          நாலாயிரத்தின் நலம்.

என்ற வெண்பாக்கள் திருத்தலங்களையும் அவற்றிற்குப் பயணம் செய்வோர் அடையும் பலனையும் தெரிவிக்கின்றன.