பக்கம்:வைணமும் தமிழும்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ திவ்விய தேசங்கள்

341


வைணவ திவ்விய தேசங்கள் 108. இவை யாவும் ஆழ்வார் பாசுரங்களால் மங்களாசாசனம் பெற்றவை. சைவர்கள் ஒரு பதிகம் முழுவதும் ஒரு திருத்தலத்தைப்பற்றி இருந்தால்தான் அதனைப் பாடல் பெற்ற தலம் எனக்குறிப்பிடுவர். ஏதாவது ஒரு பாடலில் தலங்களில் பெயர்கள் அமைந்தால் அவற்றை 'வைப்புத் தலங்கள்' என்று தனியாகப் பிரித்துக் காட்டுவர். ஆனால் வைணவர்கள் பாசுரங்களில் திருத்தலங்களின் பெயர்கள் அமைந்த நிலையிலேயே அவற்றை மங்களாசாசனம் பெற்ற தலங்களாகக் கொள்வர். .

திருப்பதிகளின் வகை : இதனைத் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்,

          ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
          ஓர்பதின்மூன்றாம் மலை நாடு ஒரிரண்டாம்- சீர்நடுநாடு
          ஆறோடு எட்டுத்தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு
          கூறுதிரு நாடொன்றாக் கொள்.

என்று வகைப்படுத்திக் காட்டுவர்.

சோணாட்டுத் திருப்பதிகள்-40

          கடல் கிழக்குத் தெற்குக் கரையொரு வெள்ளாறு
          குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
          ஏனாட்டுப் பெண்ணை இருபத்து நான்காம்
          சோணாட்டுக்கு எல்லை எனச் செப்பு.[1]

என்பது சோழ நாட்டு எல்லைகளைக் குறிப்பிடும் வெண்பா.


  1. ஒரு பழம் பாடல்.