உள்ளடக்கத்துக்குச் செல்

முஸ்லீம்களும் தமிழகமும்/தக்கானிகள் பட்டாணிகள்

விக்கிமூலம் இலிருந்து
437582முஸ்லீம்களும் தமிழகமும் — தக்கானிகள் பட்டாணிகள்எஸ். எம். கமால்

8

தக்கானிகள்-பட்டாணிகள்


இதுவரை அரபு நாடுகளில் கடல்வழியாக தமிழகம் போந்த இஸ்லாமியர்களைப் பற்றிய விபரங்களைக் கண்டோம். இவர்களைப் போன்றே அரபு நாடுகளில் இருந்தும். ஆப்பிரிக்கா, அபிஸீனியா, பாரசீகம், மத்ய ஆசியா, ஆகிய பிற நாடுகளில் இருந்தும், கடல் வழியாகவும், நிலம் வழியாகவும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்குள் புகுந்து குடியேறியவர்களும் உண்டு. குறிப்பாக சிந்து, குஜராத், மராட்டம், உத்தரப் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் படையெடுப்புகளின் மூலமும் சமயப் பணியின் நிமித்தமும், இஸ்லாமியர் வந்து தங்கி, இந்தியப் பெண்களை மணந்து நிலைத்து நின்றனர்.[1] அரேபியாவில் இருந்து சமயப் பிரச்சாரம் செய்வதற்காக ஹிஜிரி 160ல் அல் அஸதி அல்பஸ்ரி வந்து சிந்துவில் தங்கினர். கி.பி. 1067 ல் யமன் நாட்டில் இருந்து போரா முஸ்லீம்களின் தலைவரான பாபா சத்ருதீன் குஜராத்தில் தங்கி மார்க்கப்பணியில் ஈடுபட்டார். மத்ய ஆசியாவில் இருந்து வந்த புனித காஜா முயினுத்தீன் ஷிஸ்தி கி.பி. 1197 ல் ஆஜ்மீருக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார்கள். இன்னும், சையித் ஜலாலுத்தின் புகாரி கி.பி. 1244 ல் வடநாட்டிலும், சையித் முகம்மது கேகுதரால் பதினான்காம் நூற்றாண்டில் பூனா-பெல்காம் பகுதியிலும், அதே சமயம் - கட்ச் குஜராத் பகுதியில் இமாம் ஷ வும், வந்து தங்கி சமயப்பணில் ஈடுபட்டனர். அரபுத் தளபதியான முகம்மதுபின்-காசிமின் முதலாவது இந்தியப் படையெடுப்பை (கி.பி.712ல்) தொடர்ந்து தில்லியில் கஜினிமுகம்மது, அடிமை வம்சத்தினர், கில்ஜிகள், துக்ளக், முகலாயர், பாமனி சுல்தான்கள் என பல்வேறு இஸ்லாமிய மன்னர்களது ஆட்சி, பல நூற்றாண்டு கால இந்திய வரலாற்றுக்குள் இடம் பெற்றுள்ளது. ஆனால், இறுதியாக முகலாய மன்னரான அவுரங்க ஜேப்பின் தென்னிந்திய படையெடுப்பின் பொழுதும் அதனைத் தொடர்ந்து அவரது அரசப் பிரதிநிதிகளான நிஜாம், நவாப்களின் காலத்தில் வடக்கே வாழ்ந்த இவர்களில் ஒரு பகுதியினர் தமிழகத்திற்கு வந்து நிலையாகத் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெரும்பாலும் அரசுப்பணி (போர்ப்பணி)யை மேற்கொண்டிருந்த அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு அதிகமாக நீடித்த செஞ்சிப் போர் போன்று (கி பி. 1689–1697) பல போர்கள், அரசிறை வசூல் போன்ற காரணங்களினால்-தமிழகத்தில் நிலைத்து, நாளடைவில் இந்த சமுதாயத்தில் கலந்து விட்டனர். அன்று இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருந்த பார்ஸி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளின் கலப்பினால் தோன்றிய உருது மொழியை அவர்கள் தாய் மொழியாகக் கொண்டிருந்த போழ்தும், தமிழக மக்களின் பொது மொழியான தமிழை விழைந்து கற்கவும், தமிழில் புலமை பெறவும் அவர்கள் தயங்கவில்லை.

அவர்களின் வழியினர் இன்றும் செங்கல்பட்டு, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம், மாவட்டங்களில் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். இவர்களைப் பட்டாணியர் என்றும் தக்கனிகள் என்றும் பிற்கால இலக்கியங்களிலும் வழக்கிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக "சீதக்காதி நொண்டி நாடகம்" "இராமப்பையன் அம்மானை" ஆகிய நூல்களில் பட்டாணியர் என்ற சொல் பலயிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக இஸ்லாமியரின் ஒரு பிரிவினரைக் குறிக்க இந்த சொல்லைப் பயன்படுத்தி இருப்பது பொருத்தமற்றதாகும். காரணம் முந்தைய இந்தியாவின் (தற்பொழுது பாகிஸ்தான்) வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் புஷ்த்து மொழி பேசும் இந்து முஸ்லீம் இரு சமயத்தவரை குறிப்பது பதான் (Pathan) என்ற இனச் சொல்[2]. அந்த "பதான்” என்ற சொல்லின் திரிபுதான் பட்டாணி என்பதாகும். உடல் வாகிலும், செயல் திறத்திலும் சிறந்தவர்களைக் குறிக்க எழுந்த சொல் போலத் தோற்றுகிறது. தமிழ்நாட்டின் வணிக குலமான ஆயிர வைசியரில் சிலர் கூட, இந்தப் பெயரினால் பட்டாணிச் செட்டியார் என அழைக்கப்படுகின்றனர். மேலும் இன்னொரு பிரிவினரான வாணியச் செட்டியார் குலத்திலும் “பட்டாணி” என்ற பெயர் இணைத்து வழங்கப்படுகிறது. இவர்கள் காமராசர் (ராஜபாளையம்) மதுரை (பெரியகுளம்) நெல்லை (கம்பங்குளம்) ஆகிய மாவட்டங்களில் தொகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குல தெய்வம் குதிரையில் அமர்ந்த வீர உருவம், கொடி பச்சை இளம் பிறைக் கொடியாகவும் இருந்து வருகிறது. மேலும் அந்த தெய்வத்தின் கோயிலை “பட்டாணி” கோவில் என வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டில் பல ஊர்களில் "பட்டாணி (வலி)" "பட்டாணி சாயபு" என்று இறை நேசர்கள் சிலரது அடக்கவிடங்களும் உள்ளன. அவைகள் இஸ்லாமியரது கபுறுஸ்தான் போன்ற வடிவில் உள்ளன.

தக்னி என்பது டெக்கானிஸ் (Deccanese) என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு, பீஜப்பூர், பீடார், பேரார், பாமினி, கோல் கொண்டா என்ற ஐந்து தக்கணப்பகுதி இஸ்லாமியத் தன்னரககளின் பணியில் இருந்து அவை சிதைந்த பிறகு தெற்கே தமிழகத்தில் குடி புகுந்தவர் என்ற கருத்தில் அவர் தம் தொன்மையை சுட்டும் சொல்லாக அமைந்துள்ளது பொருத்தமானதாகும். அவர்கள் அனைவரும் ஆற்காட்டு நவாப்புகளின் ஆட்சியில், அரசியல் சலுகைகளும், வாழ்க்கை வசதிகளும், பெற்று பயனடைந்தவர்கள். ஆனால், கால மாறுதலினால் இவர்களில் பெரும்பாலோர் பொருளாதார வீழ்ச்சியுற்து தோல் பதனிடும், பிடி, சுருட்டு. ரொட்டி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களிலும் விவசாயத்திலும் காவல் துறை போன்ற அரசுப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களும், இன்றைய தமிழ்ச் சமுதாயம் என்ற பேரணியில் உள்ள சிறுபான்மையினராக, தமிழக இஸ்லாமியர் என்ற சிறுபிரிவிற்குள் அடங்கியவர்கள். அவர்களது தாய் மொழி, தமிழ் - உருது என வேறுபட்டு இருந்தாலும், இவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு, கல்வி, பொருளாதார நிலைகளில் பின்னடைந்துள்ள "பிற்பட்டவர்" என பாகுபாடு செய்துள்ளது.[3] தமிழக இசுலாமியர் என்ற பெருநட்டத்தில் இவர்களும் அடங்கியவராவர்.

  1. Eswari Prasad – A. Short History of Muslims Rule in India (1939) р. 37
  2. Oxford English Dictionary (1944) p. 581
  3. G.o. Ms. No. 1298 (Pub) 17-12-1975