அலை ஓசை/பூகம்பம்/கதவு திறந்தது
வாசலில் வந்து நின்றவர்கள் யாசகர்கள் அல்ல, சந்தா வசூலிக்க வந்தவர்கள் அல்ல, பொங்கல் இனாம் கேட்க வந்தவர்களும் அல்ல என்பது நிச்சயமான பின், 'தேவி ஸதனத்'தின் வாசற் கதவு திறக்கப்பட்டது. "வாருங்கள், ஐயா! வாருங்கள், நீங்கள்தானா? யாரோ என்று பார்த்தேன். இந்தக் காலத்தில் வாசற் கதவைத் திறந்து வைக்க முடியவில்லை. திறந்தால் போச்சு! யாராவது வீண் ஆட்கள் திறந்த வீட்டில் நாய் நுழைகிறதுபோல நுழைந்து விடுகிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே பத்மலோசன சாஸ்திரி வந்தவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.
"உட்காருங்கள்! ஏன் நிற்க வேண்டும்?... பாதகமில்லை சுப்பய்யரே! சோபாவிலேயே தாராளமாக உட்காருங்கள். நீங்கள் உட்கார்ந்ததினால் சோபா தேய்ந்தா போய்விடும்? அந்த மாதிரி 'நாஸுக்கு' ஆசாமிகளைக் கண்டால் எனக்குப் பிடிக்கிறதேயில்லை. தரையில் ஆயிரம் ரூபாய் ரத்தினக் கம்பளத்தை விரிப்பார்கள். அப்புறம் யாராவது அதில் கால் வைத்து நடந்துவிட்டால், 'ஐயையோ! அழுக்காய்ப் போகிறதே!' என்று அவஸ்தைப் படுவார்கள். இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்து ஸோபா வாங்கிப் போட்டுவிட்டு அதன் மேலே அழுக்கும் சிக்கும் பிடித்த உறையைப்போட்டு மூடி வைப்பார்கள்: உங்களுக்குத் தெரியுமா? நான் ராமநாதபுரம் ஜில்லாவிலே ஸப்ஜட்ஜ் உத்தியோகம் பார்த்தபோது ஒரு தனிகர் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டின் தூணுக்கு உறை போட்டு வைத்திருந்தது. ஸார்! தூணுக்கு உறை போட்டு வைத்திருந்தது! கரும் சலவைக் கல்லில் தூண்! ஒவ்வொரு தூணுக்கு செலவு ஐயாயிரம் ரூபாய்! அவ்வளவு வேலைப்பாடான தூணைச் செய்துவிட்டு அதை உறையைப் போட்டு மூடி வைத்து விடுகிறார்கள்! எப்படியிருக்கிறது கதை? பரவாயில்லை, "நீங்கள் உட்காருங்கள்" என்று பத்மலோசன சாஸ்திரியர் மூச்சு விடாமல் பேசிக் கொண்டேயிருந்தார். சுப்பய்யரும் கிட்டாவய்யரும் இடம் பார்த்து மெதுவாக உட்கார்ந்து கொண்டார்கள்.
சாஸ்திரிகள் சிறிது மூச்சுவிட்ட சமயம் பார்த்துச் சுப்பய்யர் "போன ஞாயிற்றுக்கிழமை சர்வக்ஞ சங்கத்தின் பாகவத உபந்நியாசம் நடந்ததே? அதில், ரொம்ப ரஸமான கட்டம் எது தெரியுமா? தாங்கள் பாகவதருக்கு உபசாரம் சொன்ன கட்டந்தான். ஆஹா! எவ்வளவு கச்சிதமாய் பேசினார்கள், போங்கள்! பேசினால் அப்படி அழகாகப் பேசவேண்டும்; இல்லாவிட்டால் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்! எல்லாரும் பேசுகிறார்களே!" என்றார். சுப்பய்யருக்கு இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டு உத்தியோகம். யாராயிருந்தாலும் சமயம் கிடைத்தபோது ஒரு நல்ல வார்த்தை சொல்லி வைத்தால் எப்போதாவது பயன்படும் என்பது அவருடைய நம்பிக்கை. இந்தக் கல்யாணம் மாத்திரம் நிச்சயமானால் மாப்பிள்ளைப் பிள்ளையாண்டானைப் பத்தாயிரம் ரூபாய்க்கு இன்ஷியூர் செய்து விடுவது என்று மனதிற்குள் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், சாஸ்திரிகள் இலேசான ஆள் அல்ல; முகஸ்துதிக்கு மசிந்து ஏமாந்து போகிறவரும் அல்ல. "ஆமாம் ஐயா" ஆமாம்! உம்மைப் போல இதுவரை தொண்ணூறு பேர் இப்படி என்னை ஸ்தோத்திரம் செய்து விட்டார்கள். அபாரமாய்ப் பேசி விட்டேன் என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டார்கள். ஆனால், நான் பேசியதன் தாத்பரியம் யாருடைய மனதிலாவது பதிந்ததோ என்றால், கிடையவே கிடையாது!...." என்று சாஸ்திரிகள் கூறி வந்தபோது, "அது என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று சுப்பய்யர் குறுக்கிட்டுக் கேட்டார்.
"எது என்ன எப்படிச் சொல்கிறீர்கள் - எல்லாம் சரியாய்த் தான் சொல்கிறேன். ஏதடா, காவேரி நதி தீரத்திலிருந்து ஒரு பௌராணிகரை அழைத்திருக்கிறோமே, அவருக்கு ஏதாவது மரியாதை செய்து அனுப்ப வேணுமென்று யாருக்காவது தோன்றுகிறதோ? - தானாகத் தோன்றாவிட்டாலும் நான் சொன்ன பிறகாவது தோன்ற வேண்டாமா? ஊஹூம். இன்று வரையில் ஒரு காலணா ஒருவரும் கொடுத்தபாடில்லை. பட்டணவாசம் அப்படியாக ஜனங்களின் மனதைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டது ஏதோ நம்முடைய கிராமாந்தரங்களிலே மட்டுந்தான் இன்னமும் தான தர்மம் என்பது கொஞ்சம் இருந்து வருகிறது. பட்டணங்களிலே தர்மம் அடியோடு பாழ்த்துப் போய்விட்டது. ஒரு சமாச்சாரம் சொல்கிறேன், கேளுங்கள். ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்காரைத் தெரியுமோ இல்லையோ?... சொல்லும் சுப்பய்யரே? ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்காரை உமக்குத் தெரியுமா என்று கேட்கிறேன்..."
'பேஷாகத் தெரியும். ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்காரைத் தெரியாமலிருக்குமா?" என்று பெரிய போடாகப் போட்டார் சுப்பய்யர். "ஓய் சுப்பய்யரே! உம்முடைய குட்டு வெளியாகிவிட்டது பார்த்தீரா? - சுந்தரம் அய்யங்கார் என்று ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு எந்தக் காலத்திலும் இருந்தது கிடையாது. நான் சொல்லுகிற ஜட்ஜின் பெயர் வேறே ஒன்று. 'பகலிலே பக்கம் பார்த்துப் பேசு, இராத்திரியிலே அதுவும் பேசாதே' என்று பழமொழி இருக்கிறதோ, இல்லையோ? அதனாலேதான் ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்று அசல் பெயருக்குப் பதிலாக ஒரு புனைப் பெயரைக் கற்பனை செய்து சொன்னேன். நீரும் ஏமாந்து போனீர் இருக்கட்டும்; ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்கார் ஒரு தர்மப் பள்ளிக் கூடத்துக்கு ஐயாயிரம் ரூபாய் நன்கொடை தருவதாக ஒப்புக்கொண்டார், கையெழுத்தும் போட்டார். பத்திரிகைகளிலே பெயரும் வெளியாகிவிட்டது ஆசாமி என்ன செய்தார் தெரியுமோ?... நான் சொல்கிறேன், சுப்பய்யரே? நல்ல காரியங்களுக்குப் பணம் கொடுக்காதவன் நீசன்! ஆனால் அவனையாவது ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
பணம் கொடுப்பதாகக் கையெழுத்துப் போட்டு விட்டுக் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கிறவன் பெரிய சண்டாளன். அவனையும், போனால், போகிறதென்று சேர்த்துக் கொள்ளலாம். நன்கொடை கொடுப்பதாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு நல்ல பெயரை வாங்கிக் கொண்ட பிறகு பணத்தைக் கொடுக்காமல் செத்துப் போய் விடுகிறானே, அவன் அதமாதமன்! அவன் இந்த உலகத்தையும் ஏமாற்றிவிட்டுச் சொர்க்க லோகத்தையும் ஏமாற்றப் பார்க்கிறான். இந்த ஹைகோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்கார் அந்த மாதிரி செய்துவிட்டார். நன்கொடைப் பணத்தைக் கொடுக்காமல் ஆசாமி வைகுண்டத்துக்கே போய்விட்டார்! கொஞ்ச நாள் கழித்து அவருடைய அருமைப் புதல்வனிடம் மேற்படி நன்கொடை விஷயமாகப் போயிருந்தோம். தகப்பனார் இருபது லட்ச ரூபாய்க்கு மேல் இந்தப் பையனுக்கு ஆஸ்தி சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். தகப்பனார் கொடுத்த வாக்கைப் பிள்ளையாண்டான் நிறைவேற்றக் கூடாதோ? 'அதெல்லாம் முடியவே முடியாது' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். பணம் கேட்கப் போன எங்களுக்கு ஒரேயடியாகக் கோபம் வந்து விட்டது. 'அப்பா! லக்ஷ்மணா! நீ இப்படிக் கண்டிப்பாகச் சொல்வதாயிருந்தால் ஓர் ஏற்பாடு செய்கிறோம். 'ஹைகோர்ட் ஜட்ஜ் சுந்தரமய்யங்கார் வாக்குப் பரிபாலன நிதி' என்பதாக ஒரு நிதி ஆரம்பிக்கிறோம். உன் தகப்பனாரிடம் நாங்கள் ரொம்ப மரியாதை உள்ளவர்கள்.
அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது நாங்கள் முயற்சி செய்தாக வேண்டும்!" என்றோம். அதற்கு அந்தப் பிள்ளையாண்டான் என்ன சொன்னான் தெரியுமா? 'பேஷான ஏற்பாடு! அப்படியே செய்யுங்கள் அதற்கு என்னுடைய பூரண சம்மதத்தையும் அநுமதியையும் கொடுக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை; அந்த நிதிக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே வசூலானால் அதிகப்படி தொகையை என்னிடம் சேர்ப்பித்துவிட வேணும், தெரியுமா? என் தகப்பனாருக்கு நான் ஏக புத்திரன். வேறு வாரிசு கிடையாது!' என்றான் அந்தக் கருமியின் மகன்! நாங்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினோம். நான் சொல்கிறேன் சுப்பய்யர்வாள்! "நிறையப் பணம் சம்பாதித்துத் தான தர்மம் செய்யாமல் அப்படியே பணத்தை வைத்துவிட்டுப் போகிறார்களே, அவர்களுக்கெல்லாம், நிறைய மரண வரி போட்டுச் சொத்தைச் சர்க்காரே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேலே உள்ள சொத்துக்களுக்கெல்லாம் முக்கால் பங்குக்குக் குறையாமல் வரிபோட்டுச் சர்க்கார் எடுத்துக் கொண்டு விட வேண்டும்!" என்று சொல்லிச் சாஸ்திரியார் கொஞ்சம் மூச்சுவிட நிறுத்தினார்.
சாஸ்திரியார் கடைசியில் சொன்ன வார்த்தைகளிலிருந்து, அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சொத்து இருக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட சுப்பய்யர் அர்த்த புஷ்டியுடன் கிட்டாவய்யரை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கவனித்த சாஸ்திரியார் உடனே "அதெல்லாம் இருக்கட்டும், சுப்பய்யரே! யாரையோ நீர் அழைத்து வந்திருக்கிறீர்; நான் வேறு என்னமோ பேசிக் கொண்டிருக்கிறேனே? இவர் யார், சொல்லவில்லையே? பார்த்தால் பெரிய மனுஷராகத் தோன்றுகிறது. காவேரி ஜலம் சாப்பிட்டு வளர்ந்தவர் என்று முகத்திலே எழுதி ஒட்டியிருக்கிறது உண்டாம், இல்லையா?" என்று கேட்டார்.
"முன்னமே தங்களுக்குச் சொல்லியிருந்தேனே, ராஜம்பேட்டை பட்டாமணியம் என்று, அந்தக் கிட்டாவய்யர்தான் இவர்! நேரில் ஒருதடவை வந்துவிட்டுப் போகும்படி கடிதம் எழுதியிருந்தேன், வந்திருக்கிறார்!" என்றார் சுப்பய்யர். "சுப்பய்யரே! நன்றாயிருக்கிறது! இவர் இன்னார் என்று முன்னமே சொல்லியிருக்கக் கூடாதோ? காரியமாக ஒருவரை அழைத்துக் கொண்டு வந்துவிட்டு இத்தனை நேரம் வெறும் வம்புப் பேச்சுப் பேசிக் கொண்டிருந்து விட்டிரே! போகட்டும், இவர்தான் ராஜம்பேட்டை பட்டாமணியமோ? நான் சொன்னேனே பார்த்தீரா? முகத்தில் காவேரி தீரத்தின் களை பிரகாசிக்கிறது என்று சொன்னேனோ இல்லையோ? ரொம்ப சந்தோஷம்! இவர்தான் கிட்டாவய்யராக்கும்! பட்டாமணியம் உத்தியோகம் மட்டுந்தானா? அதற்கு மேலே நிலம் நீச்சு, கொடுக்கல், வாங்கல் ஏதாவது உண்டோ ?"
"எல்லாம் உண்டு; அய்யர்வாளுக்கு அகண்ட காவேரிப் பாசனத்தில் அறுபது ஏக்கரா நன்செய் நிலம் இருக்கிறது; அவ்வளவும் இரு போகம்." "ரொம்ப சந்தோஷம். பண்ணையார் இவ்விடம் வந்த காரியம் என்னமோ? பட்டணம் பார்ப்பதற்காக வந்திருக்கிறாரோ?" "பண்ணையார் முன்னமேயே பட்டணம் பார்த்திருக்கிறார். பம்பாய்கூடப் பார்த்திருக்கிறார். இப்போது வந்திருப்பது மாப்பிள்ளைப் பார்ப்பதற்காக!"
"ஓகோகோ! மாப்பிள்ளை பார்ப்பதற்காக வந்திருக்கிறாரா? பலே பலே! இன்ஷியூரன்ஸ் வேலையோடே இந்த வேலையும் வைத்துக் கொண்டிருக்கிறீரா? இதுவரையில் எத்தனை வீட்டுக்கு அழைத்துப் போனீர்? எத்தனை மாப்பிள்ளைகளைக் காட்டினீர்? இந்த நவநாகரிக காலத்திலே 'மாப்பிள்ளை பீரோ' என்றும் 'கல்யாணக் கம்பெனி' என்றும் ஏற்படுத்தியிருக்கிறார்களாமே? நீரும் அப்படி ஏதாவது கம்பெனி வைத்திருக்கிறீரோ?" "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஐயர்வாள்! எனக்குத் தெரிந்தது இந்த ஒரே இடந்தான்! நேரே இவ்விடத்துக்குத் தான் இவரை அழைத்து வந்தேன். போன தடவை இந்த விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தபோது தாங்களும் வீட்டிலே அம்மாளும் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து பையனுக்குக் காட்டி விட்டால் தேவலை என்று சொன்னீர்கள், ஞாபகம் இருக்கிறதல்லவா?"
"ரொம்ப சரி, ஞாபகம் வருகிறது, இரைந்து பேசாதீர். மாடியிலே பையன் இருக்கிறான், அவன் காதிலே விழுந்து வைக்கப் போகிறது!... என்னுடைய அபிப்ராயம் அதுதான். இந்த விஷயத்திலே நான் கூடக் கொஞ்சம் 'மாடர்ன்' ஆசாமியென்றே வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்க வேணும், பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடித்திருக்க வேணும். அப்புறம் பையனாவது பெண்ணாவது, 'இப்படி என்னைக் கெடுத்து விட்டிர்களே!' என்று கேட்பதற்கு இடம் இருக்கக் கூடாது. பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கக்கூடாது. பிள்ளை முகத்தைத் துருத்திக்கொண்டு நிற்கக் கூடாது. சாஸ்திரமும் இதைத்தான் சொல்கிறது. இந்தக் காலத்திலே வரதட்சணை கிரதட்சணை என்று சொல்கிறார்களே, அதெல்லாம் சுத்த 'நான்ஸென்ஸ்!' எனக்குப் பிடிக்கிறதேயில்லை. சாஸ்திரத்துக்கு சர்வ விரோதம். நான்கூடப் பையனுக்கு வரதட்சணை கேட்கிறதாயிருந்தால், 'முப்பதினாயிரத்தைக் கொண்டுவா!' 'ஐம்பதினாயிரத்தைக் கொண்டுவா!' என்று கேட்கலாம்.
ஒன்றுமில்லாத வறட்சிப் பயல்கள் எல்லாம் இந்தக் காலத்தில் அப்படிக் கேட்கிறார்கள். நம்முடைய யோக்யதைக்கு அதெல்லாம் சரிக்கட்டி வருமா? என்னுடைய சமாசாரமே ஒரு தனி மாதிரி. எனக்குத் தர்மந்தான் பெரிது; பணம் பெரிதல்ல. இல்லாவிட்டால் இவ்வளவு காலம் உத்தியோகம் பார்த்துவிட்டு இப்போது இப்படிக் கடனாளியாக இருப்பேனா? என்னைப் போல உத்தியோகம் பார்த்தவர்கள் இரண்டு கையையும் நீட்டி லஞ்சம் வாங்கி ஒவ்வொருவரும் நாலு வீடு ஐந்து வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். நான் இந்த ஒரே ஒரு வீடுதான் கட்டியிருக்கிறேன். இதற்கும் கடன் வாங்க வேண்டி யிருந்தது. கோ ஆபரேடிவ் சொஸைடிக்குக் கொடுக்க வேண்டிய கடன் பதினையாயிரம் ரூபாய் இன்னும் கொடுக்கப் படவில்லை. யாராவது பெண்ணைக் கொடுக்க வருகிறவர்கள் அந்தக் கடனை அடைத்து வீட்டை மீட்டால், அவர்களுடைய பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நல்ல வீடாயிற்று! ஆனால், அது அவர்களுடைய இஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் வரதட்சணை என்று காலணா கை நீட்டி வாங்க மாட்டேன்..."
சுப்பய்யர் குறுக்கிட்டு, "ஐயர்வாள்! அதைப்பற்றியெல்லாம் நீங்கள் பேச வேண்டியதேயில்லை. பெண்ணின் கல்யாணத்துக்கென்று கிட்டாவய்யர் முப்பதினாயிரம் ரூபாய் எடுத்து வைத்து விட்டார். லௌகிக விஷயங்கள் எல்லாம் ஒரு குறைவும் இல்லாமல் திருப்திகரமாய் நடந்துவிடும்" என்றார். "லௌகிகம் கிடக்கட்டும், ஐயா, லௌகிகம்! கல்யாணம் என்பது பரமவைதிக விஷயம், அக்கினி சாட்சியாக விவாகம் செய்து கொண்ட பிறகுதான் பிராமணனுக்கு வைதிக கிரியைகள் செய்ய உரிமை ஏற்படுகிறது. ஆனால், பிள்ளையையும் பெண்ணையும் கேட்காமல் கலியாணம் நிச்சயம் செய்யும் காலம் போய் விட்டது. பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்க வேண்டும்; பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடித்திருக்க வேண்டும்; அதுதான் முக்கியமான விஷயம். பண்ணையார் கல்யாணப் பெண்ணையும் அழைத்து வந்திருக்கிறாரோ?..."
இத்தனை நேரமும் வாய் திறக்க வழியில்லாமல் உட்கார்ந்திருந்த கிட்டாவய்யர் இப்போது கொஞ்சம் தைரியம் அடைந்து, "அழைத்து வரலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். அதற்கு இந்தத் தடவை சௌகரியமில்லாமல் போய்விட்டது. என்னுடைய தங்கை பம்பாயில் இருக்கிறாள். அவளுக்குக் கொஞ்சம் உடம்பு அசௌகரியம் என்று கடிதம் வந்தது. அவளைப் பார்ப்பதற்காகப் பம்பாய் போகிறேன். தாங்கள் சொன்னால், பம்பாயிலிருந்து திரும்பி வந்ததும் கிராமத்துக்குப் போய்க் குழந்தையை அழைத்து வருகிறேன்!" என்றார்.
"அதற்கென்ன, சௌகரியம்போல் செய்யுங்கள்! அவசரம் ஒன்றுமில்லை. இப்போதுதானே தை பிறந்திருக்கிறது? ஆனால் பிள்ளையாண்டானுக்கு ரஜா முடிவதற்குள் கல்யாணம் நடந்தாக வேண்டும். அதிகமாய்த் தாமதிக்க இடமில்லை. பையனுடைய தாயார் வேறு ரொம்ப அவசரப்படுகிறாள்! கையிலே முப்பது ஜாதகம் வைத்துக்கொண்டிருக்கிறாள். தினம் ஜோசியரை வரவழைப்பதும் பொருத்தம் பார்ப்பதுந்தான் அவளுக்கு இரண்டு மாதமாக வேலை. காமாட்சி! இங்கே கொஞ்சம் வந்துவிட்டுப்போ!" என்று சாஸ்திரிகள் சத்தம் போட்டுக் கூவினார்.