புலவர் என்.வி. கலைமணி
பாரதியாரைப் பொறுத்தவரை, எழிலான புதுக் கருத்துக்கள் பூக்கின்ற செடிகளை - அவர், சிந்தனையிலே பாத்திக் கட்டி வளர்த்தவர்.
கவிதை மலர்கள் பூக்கும் பூந்தோட்டமாகத் திகழ்ந்தவர்!
புதுமை என்றால் போதும், பழமையிலே ஊறியவர்கள், பவனியே வந்தார்கள்- அவர் மீது போர் தொடுத்திட!
'எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை' என்று சமுதாயத்தை - அவர் எடை போட்டார்.
மலைக்குப் பக்கத்தில் மடு இருக்கும்போது, இறைவன் படைப்பில் ஏற்றத் தாழ்வு இயற்கை என்று - அவருக்கு எதிர்ப்பாட்டு பாட ஆரம்பித்தார்கள் - பலர்!
'ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்!' என்று, பாரதியார் குன்றேறி நின்று மீசையை முறுக்கிக் கொண்டே கூவிக் கூவிப் பாடினார்!
கோழையானால் கூடப் பரவாயில்லை, கொடுமையான கொள்கைகளைப் பெற்றிருந்தவரெல்லாம் - நெடுமலை போல நிமிர்ந்து அவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள்!
புதிய காற்றை மூக்கிலே இழுக்கின்ற மனிதா-
புதிய உணவைச் சுவைக்கின்ற மனிதா-
புதிய நாதத்தைக் கேட்க விரும்புகின்ற மனிதா -
புதிய உடைகளை உடுத்தி அழகு பார்க்கின்ற மனிதா
புது வாழ்வைத் தேட கால் கடுக்க ஓடுகின்ற மனிதா -
ஒரு புதிய கருத்தை - ஒரு புதிய திருப்பத்தை -
ஒரு புதிய உலகத்தை ஏற்றுக் கொள்ள - ஏனடா
மறுக்கின்றாய்? கேட்டார் பாரதியார் தனிமனிதனை-தமிழ்ச் சமுதாயத்தை!
எவரும் பதில் கூறாமல் நாணத் தீயால் சூடுபட்ட
ஊமையாக - ஆமையாக - நத்தையாக -
நகர்ந்து கொண்டே இருந்தார்கள்!
99