பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

61

 'என் வண்டியா? இங்கு ஏன் வரப்போகிறது!’ என அவன் அலட்சியமாகக் கூறினான்.

'உங்கள் வண்டியேதான் என்று அன்னம் சொன்னாளே?'

'அவளுக்கு என்ன தெரியும்? மேலும், இரவு நேரத்தில், தூக்கக் கலக்கத்தோடு எதையாவது பார்த்திருப்பாள்!’ என்று கேலியாகக் குறிப்பிட்டான் அவன்.

அமுதவல்லி இரவு நடந்த நிகழ்ச்சிகளை அவனுக்குச் சொல்லவும், இருட்டில் உலகம் தூங்குகிறது என்றுதான் எல்லோரும் எண்ணுகிறார்கள். ஆனால், இருட்டில்தான் எவ்வளவோ செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேடிக்கையான நிலைதான்' என்றான் அவன்.

'உங்களுக்கு ஆந்தையைப் பற்றி என்ன தெரியும்?' என்று திடீரென்று அவள் கேட்டாள்.

சிறுபிள்ளைத்தனமான கேள்வி என எண்ணியவன்போல் அவன் முகத்தில் வியப்பு காட்டி இருட்டை விரும்புகிற பிராணிகளில் அதுவும் ஒன்று. பிறர் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அலறும். விழித்திருப்போரின் அமைதியைக் கெடுக்கும்’ என்றான்.

'ஆந்தை எனும் பறவையைப் பற்றி நான் கேட்க வில்லை. எயில் ஊர் ஆந்தை என்கிற ஆள்...'

'ஒகோகோ! அப்படி ஒரு ஆள் இருக்கிறானா? எனக்குத் தெரியாதே!' என்று கனைப்பும் பேச்சும் கலந்து சிதறினான் மாறன்.