77
நேராது என்று தம் மனைவிக்குச் சமாதானம் கூறினர். ஒரு வழியாகத் துணிந்து இருவரும் சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடந்து வந்தவர்களாதலின் வேகமாக நடக்க முடியவில்லை. அன்றியும் மெல்லியலாகிய புலவர் மனைவி மெல்லவே நடந்தாள். சற்று விரைவாக நடந்திருந்தால் சூரியன் மலைவாயில் விழுந்த சிறிது நேரத்துக்குள் சிவகங்கையை அடைந்திருக்கலாம். அவர்களால் அப்படிச் செய்ய இயலவில்லை.
முக்காற்பங்கு வழி கடந்தபோது கதிரவன் மறைந்தான். நிலாப் புறப்பட்டது. அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். உடன் யாரேனும் துணையாக வந்திருந்தால் அவர்கள் ஊக்கத்தோடு நடப்பார்கள். முன் பழக்கம் இல்லாத இடத்தில் இரவில் துணையின்றி நடந்தமையின் இருவருக்கும் மனத்துக்குள் அச்சம் உண்டாயிற்று.
அப்போது ஆளரவம் கேட்டது. "முருகா, எங்களுக்குத் துணையாக யாரேனும் வந்தால் நல்லது" என்று புலவர் வேண்டிக்கொண்டார். யாரோ இரண்டு மூன்று பேர்கள் வந்தார்கள். "யார் அது?" என்று கடுமையான குரலில் கேட்டார்கள். அந்தக் குரலே அவர்கள் பொல்லாதவர்கள் என்பதைப் புலப் படுத்தியது.
புலவர் மனைவி அவரோடு ஒட்டிக்கொண்டாள். அவர், "நான் புலவன். மருத பாண்டியரைப் பார்க்கப் போகிறேன்" என்றார்.
"புலவனா? அப்படியானுல் உன்னிடம் பரிசுப் பொருள் இருக்குமே; அவற்றை எடுத்து வை” என்று மிரட்டினார்கள். .இ, கதை-6