பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

63

 கடிதம் பற்றி அவன் எவ்வாறு அறிய முடிந்தது?’ என்று அவள் வினவினாள்.

'அவனிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்லவா இது!' - மீண்டும் அதே அலட்சியம்! குத்தும் பார்வை! குறும்புச் சிரிப்பு! பெருமூச்செறிந்தாள் ஒய்யாரி.

'உனது பணிப்பெண்ணா - யாரது? அன்னமா கிளியா? அவள் அந்த ஆந்தைக்கு விவரம் தந்திருக்கலாம்!” என்றான் பெரியவன்.

'இருக்க முடியாது. அன்னக்கிளி ஆந்தையிடம் ஏன் தொடர்பு கொள்ளப்போகிறாள்?

'யாரையும் நம்பக்கூடாது, அமுதவல்லி! யாரையுமே நம்பக்கூடாது’ என்ற மாறன், தனக்குரிய தனிச் சிரிப்பை உதிர்த்து வைத்தான்.

இரவில் நடந்ததை விளக்கமாக எடுத்துரைத்தாள் அமுதம்.

'உனது இல்லம் திடீரென்று அற்புத நிகழ்ச்சிகள் நடைபெறும் அவைக்களம் ஆகிவிட்டது போலும்! பள பளா!' என்று உற்சாகத்தோடு கூறிக் கைகளைத் தேய்த்துக் கொண்டான் அவன். 'அப்புறம் ஆக்தை என்ன ஆனான்?' என்றான்.

'எனக்கென்ன தெரியும்? தோப்பில் யாரோ பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது. அது ஆந்தைதானோ என்னவோ! இன்று இரவு அச்சம் தரும் நிகழ்ச்சி எதுவேனும் நிகழாமல் இருக்க வேண்டுமே என்று என் மனம் அடித்துக்கொள்கிறது..