உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்புப் பார்வை


'சோழ மன்னன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். அருகில் அமைச்சர் அமர்ந்திருந்தனர். கலைவலாளரும் புலவரும் தமக்குரிய இருக்கையில் இருந்தனர். நாட்டு வளப்பத்தைப் பற்றியும் கலைச் சிறப்பைப் பற்றியும் மன்னன் உரையாட, மந்திரிமாரும் தகுதியறிந்து பேசினர். பேச்சு மெல்ல மெல்ல வேளாளரைப் பற்றிப் படர்ந்தது.

"இந்த நாட்டின் நெல் வளத்தை உலகம் முழுவதுமே கொண்டாடுகிறது. சோணாடு சோறுடைத்து என்ற பழமொழியே இதற்கு அடையாளமாகும். இந்த நாட்டில் உள்ள வேளாளர்களின் செல்வச் சிறப்புக்கு ஈடாக வேறு எதையும் சொல்ல இயலாது. நம்முடைய களஞ்சியத்தில் செல்வம் குறையினும் வேளாளர் செல்வம் என்றும் குன்றாது" என்று மன்னன் பெருமிதத்தோடு பேசினான்.

"பரம்பரை பரம்பரையாக வேளாளர் கொடுக்க, முடியை வாங்கிச் சூட்டிக்கொள்ளும் வழக்கம் சோழ குலத்துக்கு உரியது. நாட்டின் பெருமையும், வளப்பமும் அவர்களால் அதிகமாகின்றன என்பதைத் திருவள்ளுவர் முதலிய புலவர்கள் அருமையாகச் சொல்லியிருக்கிறார்களே!” என்றார் ஓர் அமைச்சர்.

"இப்போதும் பிற நாட்டிலிருந்து வருவாருக்கும், இந்நாட்டுப் புலவருக்கும் அளவின்றி வாரி வழங்கும் வேளாண் செல்வர். பலர் இருக்கிறார்கள். நம் சடையப்ப முதலியாரைப் போன்ற செல்வரையும் வள்ளலையும் வேறு எந்த நாட்டிலே பார்க்க முடியும்?”