உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


'ஸார், என் பெயர் செல்வா. குமாரி செல்வா. எனக்கு வயது பதினெட்டு. நான் இன்டர் படிக்க ஆரம்பித்து, அப்புறம் வேண்டாமென்று விட்டுவிட்டேன். ஸ்கூல் டிராமாக்களில் அடிக்கடி ஆக்ட் பண்ணியிருக்கிறேன். டான்ஸ் தெரியும். பாட்டு கொஞ்சம் கொஞ்சம் வரும். பிளேபாக் ஸிஸ்டம் மிகுந்துவிட்ட இக்காலத்திலே ஸ்டார்களுக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது, இல்லையா ஸார்?'

'நீங்கள் சொல்வது ரொம்ப நியாயமானதே என்றேன்.

'சினிமாக் கலை வளரவேணுமானால் என்னைப் போன்ற நட்சத்திரங்களைத் தேடிப் பிடித்துப் போட வேண்டும். ராணிகுமாரியும், சந்திரமதியும், ரோஜாம்பாவும், அவளும் இவளும் நடிக்கிறதைவிட நான் பிரமாதமாக நடிக்க முடியும். உங்கள் வால் நகூடித்திரம் பத்திரிகையில் இந்த நட்சத்திரங்களை நீங்கள் பேட்டி கண்டு எழுதிய கதையை நான் மிகவும் ரசித்தேன். எல்லாரும் ரொம்பப் பாராட்டுறாங்க ஸார். அதனாலேதான் நானே வந்து உங்களைப் பேட்டி காண நினைத்தேன். எதிர்பாராதவிதமாகப் பேட்டியே பேட்டிக்கு ஏற்பாடு செய்துகொண்டுவிட்டது. எப்படி ஸார்! இந்தப் பிரயோகம் நயமாக யில்லே? பேட்டியே பேட்டிக்கு வகை செய்தது..... ஹஹஹா, ஹிஹிஹி!'

ஒரு டஜன் பேர்வழிகள் ஒரே சமயத்தில் ஜலதரங்கம் வாசித்து, சட்டென நிறுத்திவிட்டது போலிருந்தது அவள் பேச்சை நிறுத்தியதும்!

'இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?' என்று கேட்டு வைத்தேன்.

'செத்துக்கொண்டிருக்கிற படஉலகம் உருப்பட வேண்டுமானால் என்னை மாதிரி வருங்கால நட்சத்திரங்கள் ஒரு டஜன் பேர் உடனடிப் படையெடுப்பு நடத்த வேண்டும். எனது பிரண்ட்ஸ் சில பேரு இருக்கிறாங்க-அனுராதா, சியாமளா, ஜோதி, ஜவந்தி, முத்தம்மா, கெளஸல்யா. இன்னும் நாலஞ்சு பேரு சேருவாங்க. ஸார், நீங்ககூட நடிக்கலாம் ஸார். அருமையான ஸோஷல் பிக்சர் ஒன்று தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள். அழியாப் புகழ்பெறும் அற்புதத் தயாரிப்பாக இருக்கும் நம்ம நட்சத்திர சித்திரம், இல்லையா ஸார்?'