உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/கண்ணனின் கவலை

விக்கிமூலம் இலிருந்து
7. கண்ணனின் கவலை


கோபுர வாசலில் அழகிய அம்பாரிகளுடன் பட்டத்து யானைகள் நின்றன. அரண்மனையைச் சேர்ந்த தந்தப் பல்லக்குகளும் தங்கப் பல்லக்குகளும் பளபளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தன. சக்கரவர்த்தியின் அலங்கார வேலைப்பாடமைந்த ரதமும் இரண்டு அழகிய வெண்புரவிகள் பூட்டப் பெற்று நின்றது. குதிரைகளின் கடிவாளத்தை இழுத்துக் கொண்டு கண்ணபிரான் தன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லாத கவலை குடிகொண்டிருந்தது.

அந்த அழகிய தங்க ரதத்தையும் அழகே வடிவமாய் அமைந்த உயர் சாதிப் புரவிகளையும் பார்ப்பதற்காக ஜனங்கள் ரதத்தைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவன், "என்ன, சாரதியாரே! முகம் ஏன் வாட்டமாயிருக்கிறது?" என்று கேட்டான். கண்ணன் அந்தக் கேள்விக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அப்போது பக்கத்தில் நின்ற இன்னொருவன், "கவலைக்குக் காரணம் கேட்பானேன்? நாளைக்குப் போர்க்களத்துக்குப் புறப்பட வேண்டுமல்லவா! பெண்சாதி பிள்ளையை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான்!" என்றான். இதைக் கேட்டதும் கண்ணபிரானுடைய கண்கள் நெருப்புத் தழல் போல் சிவந்தன. கையிலிருந்த குதிரைச் சாட்டையை அந்த உயர் சாதிக் குதிரைகள் மேல் என்றும் உபயோகிக்க நேராத அலங்காரச் சாட்டையை மேற்கண்டவாறு சொன்ன ஆளின் மீது கண்ணன் வீசினான்.

நல்லவேளையாக அந்த மனிதன் சட்டென்று நகர்ந்து கொண்டபடியால் அடிபடாமல் பிழைத்தான். சற்றுத் தூரத்தில் நின்றபடியே அந்த விஷமக்காரன், "அப்பனே! ஏன் இத்தனை கோபம்? உனக்கு யுத்தகளத்துக்குப் போக விருப்பமில்லாவிட்டால் ரதத்தை என்னிடம் கொடேன்! நான் போகிறேன்!" என்றான். அதற்குள் அவன் அருகில் நின்ற இன்னொருவன், "அடே பழனியாண்டி! எதற்காகக் கண்ணபிரானின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய்? அவனைச் சக்கரவர்த்தி நாளைக்குப் புறப்படும் சேனையுடன் யுத்தகளத்துக்குப் புறப்படக் கூடாது என்று சொல்லி விட்டாராம், அது காரணமாகத்தான் அவனுக்குக் கவலை!" என்று சொல்லவும், பக்கத்தில் நின்றவர்கள் எல்லோரும் "த்ஸௌ" "த்ஸௌ" "அடடா" "ஐயோ! பாவம்!" என்று தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

ஆலயத்திலிருந்து வெளிவந்த புவனமகாதேவி முதலியவர்களைக் கண்ணபிரான் அரண்மனையிலே கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பினான். குதிரைகளைக் கொட்டடியில் விட்டுத் தட்டிக் கொடுத்து விட்டு கண்ணன் தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த போது, அங்கே விநோதமான ஒரு காட்சியைக் கண்டான். கண்ணனுடைய மகன் பத்து வயதுச் சிறுவன், கையில் ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியும் சுழற்றிக் கொண்டிருந்தான். அவ்விதம் அவன் கத்தியைச் சுழற்றியபோது, ஒவ்வொரு சமயம் அவனுடைய முகமானது ஒவ்வொரு தோற்றத்தைக் காட்டியது. சில சமயம் அந்தப் பால்வடியும் முகத்தில் கோபம் கொதித்தது. சில சமயம் அந்த முகம் நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்படுவதைக் காட்டியது. சில சமயம் எதிரியை வெட்டி வீழ்த்தியதனால் ஏற்பட்ட குதூகலத்தை அந்த முகம் உணர்த்தியது!

இவ்விதம் அந்தச் சிறுவன் கத்தியைச் சுழற்றி யுத்த விளையாட்டு விளையாடுவதைச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த கமலி வெகு உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியாதபடி சப்தமின்றி வீட்டுக்குள்ளே வந்த கண்ணபிரான் மேற்படி காட்சியைப் பார்த்ததும் முதலில் அவனுடைய முகத்தில் சந்தோஷப் புன்னகை உண்டாயிற்று. புன்னகை ஒரு கணத்தில் மாறி முகச் சுணுக்கம் ஏற்பட்டது. கோபமான குரலில், "முருகையா! நிறுத்து இந்த விளையாட்டை!" என்று கண்ணபிரான் அதட்டியதைக் கேட்டதும் சிறுவன் பிரமித்துப் போய் நின்றான். கமலியும், வியப்பும் திகைப்புமாகக் கண்ணனைப் பார்த்தாள்.

"தலையைச் சுற்றிக் கத்தியை வீசி எறி! குதிரை ஓட்டும் சாரதியின் மகனுக்குப் பட்டாக்கத்தி என்ன வந்தது கேடு? வேண்டுமானால் குதிரைச் சாட்டையை வைத்துக் கொண்டு விளையாடு! கத்தியை மட்டும் கையினால் தொடாதே! தெரியுமா?" என்று கண்ணன் கர்ஜனை புரிந்தான். இதைக் கேட்ட சிறுவன் கத்தியை இலேசாகத் தரையில் நழுவ விட்டுக் கமலியை அணுகி வந்து அவளுடைய மடியில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். கமலி, "இது என்ன கண்ணா! குழந்தையை எதற்காக இப்படி அழச் செய்கிறாய்? நாளைக்கு நீ யுத்தகளத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். திரும்பி வர எத்தனை நாள் ஆகுமோ, என்னவோ?" என்றாள்.

"கமலி! அந்த ஆசையை விட்டு விடு! உன் புருஷன் போர்க்களத்துக்குப் போகப் போவதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு நான் காஞ்சி நகரத்திலேதான் இருக்கப் போகிறேன். சக்கரவர்த்தியின் கட்டளை அப்படி!" என்றான் கண்ணன். கமலியின் முகத்தில் அப்போது சொல்லி முடியாத ஏமாற்றத்தின் அறிகுறி காணப்பட்டது. "இது ஏன் கண்ணா? சக்கரவர்த்தி எதற்காக உன்னை இப்படி வஞ்சனை செய்தார்? கால் ஒடிந்த ஆயனச் சிற்பியைக் கூடப் போர்க்களத்துக்கு அழைத்துப் போகிறாராமே?" என்று கேட்டாள். "இராமர் வானர சைனியத்தோடு இலங்கைக்குப் போனாரே, அப்போது அந்த இலங்கைத் தீவைச் சமுத்திரத்தில் அமிழ்த்தி விட்டு வந்திருக்கக் கூடாதா?" என்றான் கண்ணபிரான்.

"என்ன இப்படிப் புதிர் போடுகிறாய்? இராமர் இலங்கையைச் சமுத்திரத்தில் அமிழ்த்தாததற்கும் நீ போருக்குப் போகாததற்கும் என்ன சம்பந்தம்?" என்றாள் கமலி. "சம்பந்தம் இருக்கிறது; இலங்கை அப்போது சமுத்திரத்தில் மூழ்கியிருந்தால், அந்த ஊர் இளவரசர் இப்போது இங்கே வந்திருக்க மாட்டார் அல்லவா? அவருக்கு ரதம் ஓட்டுவதற்காக நான் இங்கே இருக்க வேண்டுமாம்! சக்கரவர்த்தியின் கட்டளை!" "ஆஹா! அப்படியானால் மானவன்மரும் யுத்தத்துக்குப் போகப் போவதில்லையா? நமது சக்கரவர்த்தியும் அவரும் சிநேகிதம் என்று சொல்கிறார்களே?" "பிராண சிநேகிதன்தான், அதனாலேதான் இந்தத் தொல்லை நேர்ந்தது. மானவன்மர் போர்க்களத்துக்கு வந்து அவருடைய உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், இலங்கையின் இராஜவம்சம் நசித்துப் போய் விடுமாம். மானவன்மருக்கு இன்னும் சந்ததி ஏற்படவில்லையாம். ஆகையால், இலங்கை இளவரசர் போருக்கு வரக்கூடாதென்று சக்கரவர்த்தியின் கட்டளை; அவருக்காக என்னையும் நிறுத்தி விட்டார்!"

"இதுதானே காரணம்? அப்படியானால், நீ கவலைப்பட வேண்டாம், கண்ணா! கூடிய சீக்கிரத்தில் இலங்கை இளவரசரும் நீயும் போருக்குப் புறப்படலாம்!" என்றாள் கமலி. "அது என்னமாய்ச் சொல்லுகிறாய்? என்று கண்ணபிரான் சந்தேகக் குரலில் கேட்டான். "காரணத்தோடுதான் சொல்லுகிறேன், இலங்கை இராணிக்குச் சீக்கிரத்தில் குழந்தை பிறக்கப் போகிறது." "ஓகோ! இலங்கை இளவரசிக்கு உடம்பு சௌக்கியமில்லை என்று சொன்னதெல்லாம் இதுதானா? "ஏகாம்பரேசுவரா! இலங்கை இளவரசிக்குப் பிறக்கும் குழந்தை, ஆண் குழந்தையாய்ப் பிறக்கட்டும்!" என்று கண்ணன் ஏகாம்பரர் ஆலயம் இருந்த திக்கு நோக்கிக் கைகூப்பி வணங்கினான்.