பக்கம்:இன்னமுதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 ●

இன்னமுதம்


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்று
அருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே

“சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்து புலன்களும் கலங்கிப் போய்த் தம்முடைய பொறிகளை விட்டுவிட்டு வழிமாறி, அறிவும் அழிந்து, கபம் கட்டிக்கொண்டு அறிவு கலங்கி மயங்கிய காலத்தில் “அஞ்சாதே” என்று அருள் செய்கின்ற இறைவன் தங்கியுள்ள கோயில் (எதுவெனில்) கோயிலை வலம் வருகின்ற இளம் பெண்கள் நடனம் செய்ய, அதற்குப் பக்க வாத்தியமாக மத்தளங்கள் ஒலிக்க, அதைக் கேட்டு இடி ஓசை என்று பயந்து சில மந்திக்குரங்குகள் மரத்தில் ஏறிக் கருமேகம் சூழ்ந்துள்ளதோ என்று அண்ணாந்து பார்க்கின்ற திருவையாறே யாகும்.”

(ஐந்து புலன்கள்-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்;பொறி- மெய்,வாய்,கண், மூக்கு, செவி; ஐ மேல் உந்தி-கபம்(சளி) மேலிட்டு; அலமந்தபோது- என் செய்வோம் என கலங்கிய போது; முழவு - மத்தளம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/20&oldid=1550833" இலிருந்து மீள்விக்கப்பட்டது