உள்ளடக்கத்துக்குச் செல்

யாப்பருங்கலக்காரிகை

விக்கிமூலம் இலிருந்து
யாப்பருங்கலக்காரிகை (11th century)
by அமிதசாகரர்
3324யாப்பருங்கலக்காரிகைஅமிதசாகரர்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

யாப்பருங்கலக்காரிகை

[தொகு]

ஆசிரியர்: அமிதசாகரர்

[தொகு]

01. உறுப்பியல்

[தொகு]

பாயிரம்

[தொகு]

காரிகை 01 (கந்தமடிவில்)

[தொகு]
(கடவுள்வணக்கமும் பாடுபொருளும்)
கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீ கந்தம் மடிவு இல் கடி மலர்ப் பிண்டிக் கண் ஆர் நிழல் கீழ்
ழெந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர் எந்தம் அடிகள் இணை அடி ஏத்தி எழுத்து அசை சீர்
பந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின் பந்தம் அடி தொடை பா இனம் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே. (01) சந்தம் மடிய அடியான் மருட்டிய தாழ் குழலே.

காரிகை 02 (தேனார்)

[தொகு]
(அவையடக்கம்)
தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா வறிவி னவர்கட்கென் னாங்கொலென் னாதரவே. (02)
(இக்காரிகை நூலினது பெருந்தன்மையும், ஆசிரியனது
பெருந்தன்மையும் தனது உள்ளக் குறைபாடும் உணர்த்திய
முகத்தான் அவையடக்கம் உணர்த்துதல் நுதலிற்று)


காரிகை 03 (சுருக்கமில்)

[தொகு]
(இதுவுமது)


சுருக்கமில் கேள்வித் துகடீர் புலவர்முன் யான்மொழிந்த
பருப்பொரு டானும் விழுப்பொரு காம்பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே. (03)
(இக்காரிகை புலவரது சிறப்புணர்த்திய முகத்தான்
அவையடக்கம் உணர்த்துதல் நுதலிற்று.)

எழுத்து

[தொகு]

காரிகை 04 (குறினெடிலாவி)

[தொகு]
(01. எழுத்து)


குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்த மெய்யே
மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்
சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
அறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவனவே. (04)
(இக்காரிகை மேலதிகாரம் பாரித்த எட்டனுள்ளும் அசைக்கு
உறுப்பாம் எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.)


அசை

[தொகு]

காரிகை 05 (குறிலேநெடிலே)

[தொகு]
(02. அசை)


குறிலே நெடிலே குறிலிணை யேனைக் குறினெடிலே
நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென்
றறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே. (05)
(இக்காரிகை நிரனிறைப்பொருள்கோள் வகையான்
நேரசையும் நிரையசையும் ஆமாறும் அவற்றுக்கு
உதாரணம் ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.)


சீர்

[தொகு]

காரிகை 06 (ஈரசைநாற்சீர்)

[தொகு]
ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்
நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யானிறுப
வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
ஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே. (06)


(இக்காரிகை அவ்வசைகளாலாகிய சீர்களது
பெயர்வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 07 (தேமாபுளிமா)

[தொகு]
(சீர்களின் வாய்பாடு)


தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்
காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா
வாமாண் கலையல்குன் மாதே வருபவஞ் சிக்குரிச்சீர்
நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே. (07)
(இக்காரிகை முறையானே முதல் நான்குசீ்ர்க்கும்
உதாரணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 08 (தண்ணிழறண்பூ)

[தொகு]
(பொதுச்சீர்வாய்பாடும், தளைவழங்குமுறையும்)


தண்ணிழ றண்பூ நறும்பூ நறுநிழ றந்துறழ்ந்தால்
எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகுமினியவற்றுட்
கண்ணிய பூவினங் காய்சீ ரனைய கனியொடொக்கும்
ஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கு மொண்டளைக்கே. (08)
(இக்காரிகை பொதுச்சீருக்கு உதாரணம் ஆமாறும்,
அவற்றது எண்ணும், பொதுச்சீரும் அசைச்சீரும்
செய்யுளகத்து வந்தால் தளைவழங்கும்
முறைமையும் உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 09 (குன்றக்குறவன்)

[தொகு]
(சீர்கட்கு உதாரண முதற்குறிப்பு)


குன்றக் குறவ னகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்
கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப வோரசைச்சீர்
நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்
கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே. (09)


(இக்காரிகை முறையானே ஐந்துவகைப்பட்ட சீரானும் வந்த
இலக்கியங்கட்கு முதனினைப்பு உணர்த்துதல் நுதலிற்று.)


தளை

[தொகு]

காரிகை 10 (தண்சீர்தன)

[தொகு]
தண்சீ்ர் தனதொன்றிற் றன்றளை யாந்தண வாதவஞ்சி
வண்சீ்ர் விகற்பமும் வஞ்சிக் குரித்துவல் லோர்வகுத்த
வெண்சீ்ர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்டளையாம்
ஒண்சீ ரகவ லுரிச்சீர் விகற்பமு மொண்ணுதலே. (10)
(இக்காரிகை நின்ற சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின்
முதலசையும் தம்முள் ஒன்றுதலும் ஒன்றாமையுமாகிய
ஏழுதளையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 11 (திருமழை)

[தொகு]
(தளைகட்கு உதாரண முதனினைப்பு)


திருமழை யுள்ளா ரகவல் சிலைவிலங் காகும்வெள்ளை
மருளறு வஞ்சிமந் தாநில மென்பமை தீர்கலியின்
தெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப
துரிமையின் கண்ணின்மை யோரசைச் சீருக் குதாரணமே. (11)


(இக்காரிகை அத்தளைகளான் வந்த இலக்கியங்களுக்கு
முதனினைப்பு உணர்த்துதல் நுதலிற்று.)


அடி

[தொகு]

காரிகை 12 (குறளிரு)

[தொகு]
(5. அடி)
குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர்
அறைதரு காலை யளவொடு நேரடி யையொருசீர்
நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோட்
கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே. (12)
(இக்காரிகை அத்தளைகளான் வந்த அடிகளது பெயர்
வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 13 (திரைத்தவிருது)

[தொகு]
(அடிகளுக்கு உதாரண முதனினைப்பு)


திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து
விரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின்
இரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றுங்
கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே. (13)
(இக்காரிகை அவ்வடிகளான் வந்த இலக்கியங்கட்கு

முதனினைப்புணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 14 (வெள்ளைக்கிரண்)

[தொகு]
(பாவின் அடிவரையறை)


வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற்
கெள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகு மிழிபுரைப்போர்
உள்ளக் கருத்தி னளவே பெருமையொண் போதலைத்த
கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே. (14)
(இக்காரிகை, அவ்வடி வரையறையான் வந்த நான்கு

பாவிற்கும் சிறுமை பெருமை உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 15 (அறத்தாறிது)

[தொகு]
(அடிவரையறை உதாரண முதற்குறிப்பு)


அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு
குறித்தாங் குரைப்பின் முதுக்குறைந் தாங்குறை யாக்கலியின்
திறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை
புறத்தாழ் கருமென் குழற்றிரு வேயன்ன பூங்கொடியே. (15)


(இக்காரிகை, அவ்வடி வரையறையான் வந்த இலக்கியங்கட்கு
முதனினைப்புணர்த்துதல் நுதலிற்று.)


தொடை

[தொகு]

காரிகை 16 (எழுவாயெழுத்)

[தொகு]
எழுவா யெழுத்தொன்றின் மோனை யிறுதி யியைபிரண்டாம்
வழுவா வெழுத்தொன்றின் மாதே யெதுகை மறுதலைத்த
மொழியான் வரினு முரணடி தோறு மொழிமுதற்கண்
அழியா தளபெடுத் தொன்றுவ தாகு மளபெடையே. (16)
(இக்காரிகை, அடிமோனையும், அடியியைபும்,
அடியெதுகையும், அடிமுரணும், அடியளபெடையும்
ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 17 (அந்தமுதலாத்)

[தொகு]
(அந்தாதி, இரட்டை, செந்தொடை)


அந்த முதலாத் தொடுப்ப தந்தாதி யடிமுழுதும்
வந்தமொழியே வருவ திரட்டை வரன்முறையான்
முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டாற்
செந்தொடை நாமம் பெறுநறு மென்குழற் றேமொழியே. (17)


(இக்காரிகை, அந்தாதித் தொடையும், இரட்டைத்
தொடையும் செந்தொடையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 18 (மாவும்புண்)

[தொகு]
(தொடை விகற்பங்களுக்கு முதனினைப்பு)


மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்
கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய
ஓவிலந் தாதி யுலகுட னாமொக்கு மேயிரட்டை
பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே. (18)


(இக்காரிகை, அடிமோனை முதலாகிய தொடைகளான்
வந்த இலக்கியங்கட்கு முதனினைப்புணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 19 (இருசீர்)

[தொகு]
(முப்பத்தைந்து தொடைவிகற்பம்)


இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீ ரயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவது மொன்றின்முற் றாமென்ப மற்றவையே. (19)


(இக்காரிகை, இணைமோனை முதலாகிய முப்பத்தைந்து
தொடை விகற்பமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 20 (மோனைவிகற்)

[தொகு]
(தொடைவிகற்பங்கட்கு உதாரண முதனினைப்பு)


மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற்
கேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன வினிமுரணிற்
கான விகற்பமுஞ் சீறடிப் பேர தளபெடையின்
றான விகற்பமுந் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே. (20)


(இக்காரிகை, இணைமோனை முதலாகிய
முப்பைந்து தொடை விகற்பங்களான் வந்த
இலக்கியங்கட்கு முதனினைப்புணர்த்துதல் நுதலிற்று.)


யாப்பருங்கலக்காரிகை முதலாவது உறுப்பியல் முற்றும்

[தொகு]

உறுப்பியல் முதனினைப்பு/உரைச்சூத்திரக் காரிகை

கந்தமுந் தேனார் சுருக்கமுங் காதற் குறில்குறிலே
தந்தன வீரசை தேமாவுந் தண்குன்றத் தன்றிருவுங்
கொந்தவிழ் கோதாய் குறடிரை வெள்ளை யறவெழுவாய்
அந்தமு மாவு மிருசீரு மோனையு மாமுறுப்பே.
(இந்த முதனினைப்புக் காரிகையை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை)


இரண்டாவது, செய்யுளியல்

[தொகு]

பாக்களின் ஓசை

[தொகு]

காரிகை 21 (வெண்பாவகவ)

(பாவுக்குரிய அடியும் ஓசையும்)
வெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும்
ஒண்பா வடிகுறள் சிந்தென் றுரைப்ப வொலிமுறையே
திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல்
நண்பா வமைந்த நலமிகு தூங்க னறுநுதலே. (01)


(இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோவெனின், வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்னும் நான்கு பாவிற்கும் அடியும் :

ஓசையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 22 (வளம்பட)


(உதாரண முதனினைப்பு)


வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங்
களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோற்
றுளங்கிடை மாதே சுறமறி தொன்னலத் தின்புலம்பென்
றுளங்கொடு நாவல ரோதினர் வஞ்சிக் குதாரணமே. (02)
(இக்காரிகை அவ்வடியானும் ஓசையானும் வந்த இலக்கியங்கட்கு முதனினைப்புணர்த்துதல் நுதலிற்று.)


வெண்பா

[தொகு]

காரிகை 23 (ஈரடி)

(குறள்வெண்பா, நேரிசைவெண்பா)


ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா
தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்
நேரிசை யாகு நெரிசுரி பூங்குழ னேரிழையே. (03)
(இக்காரிகை, குறள்வெண்பாவும், இருகுறள் நேரிசைவெண்பாவும், ஆசிடை நேரிசை வெண்பாவும் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 24 (ஒன்றும்பல)

(இன்னிசைவெண்பா, பஃறொடைவெண்பா)


ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னு மடிபலவாய்ச்
சென்று நிகழ்வது பஃறொடை யாஞ்சிறை வண்டினங்கள்
துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே. (04)


(இக்காரிகை, இன்னிசைவெண்பாவும், பஃறொடைவெண்பாவும் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 25 (நேரிசையின்)

(சிந்தியல்வெண்பா, வெண்பாவின் ஈற்றடி)


நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்
நேரிசை யி்ன்னிசைச் சிந்திய லாகு நிகரில்வெள்ளைக்
கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற
சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே. (05)


(இக்காரிகை, நேரிசைச்சிந்தியல் வெண்பாவும், இன்னிசைச் சிந்தியல்வெண்பாவும் ஆமாறும், எல்லா வெண்பாவிற்கும் ஈற்றடி ஆமாறுமுணர்த்துதல் நுதலிற்று.)


வெண்பா இனம்

[தொகு]

காரிகை 26 (அந்தமில்)


(வெண்செந்துறை, குறட்டாழிசை)


அந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்
செந்துறை யாகுந் திருவே யதன்பெயர் சீர்பலவாய்
அந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ்
சந்தஞ் சிதைந்த குறளுங் குறளினத் தாழிசையே. (06)
(இக்காரிகை, குறள்வெண்பாவிற்கு இனமாகிய துறையுந் தாழிசையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை 27 (மூன்றடி)


(வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்)


மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத்
தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண் டாழிசையே
மூன்றடி யாய்வெள்ளை போன்றிறு மூன்றிழி பேழுயர்பா
ஆன்றடி தாஞ்சில வந்தங் குறைந்திறும் வெண்டுறையே. (07)


(இக்காரிகை, வெளிவிருத்தமும், வெண்டாழிசையும், வெண்டுறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


(உதாரண முதனினைப்பு)
கொண்டன் முழங்கின வாவா விருத்தங் குழலிசைய
வண்டினம் வெண்டுறை தாளாண் முழங்கொடு தாழிசையே
நண்பிதென் றார்கலி கொன்றைவெண் செந்துறை நீலநண்ணு
பிண்டி யறுவர்வண் டார்குறட் டாழிசை பெய்வளையே. /01/


(இவ்வுரைச்சூத்திரக்காரிகை வழியே வெண்பாவினங்கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக்கொள்க.)


ஆசிரியப்பா

[தொகு]

காரிகை 28 (கடையயற்)

கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்
இடைபல குன்றி னிணைக்குற ளெல்லா வடியுமொத்து
நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்
தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே. (08)


இக்காரிகை, நேரிசையாசிரியப்பாவும், இணைக்குறளாசிரியப்பாவும், நிலைமண்டிலவாசிரியப்பாவும், அடிமறிமண்டில வாசிரியப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


ஆசிரியப்பாவின் இனம்

[தொகு]

காரிகை 29 (தருக்கிய)


தருக்கிய றாழிசை மூன்றடி யொப்பன நான்கடியாய்
எருத்தடி நைந்து மிடைமடக் காயு மிடையிடையே
சுருக்கடி யாயுந் துறையாங் குறிவிறொல் சீரகவல்
விருத்தங் கழிநெடி னான்கொத் திறுவது மெல்லியலே. (09)


(இக்காரிகை, ஆசிரியத்தாழிசையும், ஆசிரியத்துறையும் ஆசிரியவிருத்தமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


கலிப்பா

[தொகு]

காரிகை 30 (தரவொன்று)


(நேரிசையொத்தாழிசைக்கலிப்பா, அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)


தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்
நிரலொன்றி னேரிசை யொத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோன்
மரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின்
அரவொன்று மல்கு லம்போ தரங்கவொத் தாழிசையே. (10)


(இக்காரிகை நேரிசையொத்தாழிசைக் கலிப்பாவும், அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


(உதாரண முதனினைப்பு/உரைச்சூத்திரக் காரிகை)
வாணெடுங் கண்பனி நேரிசை யாகும் மதர்த்திருண்டு
சேணுற வோடிக் குழையிட றிச்செருச் செய்யும்விழி
நாணுந் திருவு மறிவுஞ் செறிவு முடையநல்லாய்
ஏணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்னே.
(இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே முன்வந்த இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)


காரிகை 31 (அசையடி)


(வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா)


அசையடி முன்ன ரராகம்வந் தெல்லா வுறுப்புமுண்டேல்
வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்
டிசைதன தாகியும் வெண்பா வியைந்துமின் பான்மொழியாய்
விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே. (11)
(இக்காரிகை வண்ணகவொத்தாழிசைக் கலிப்பாவும், வெண்கலிப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


(உதாரண முதனினைப்பு/உரைச்சூத்திரக்காரிகை)
நின்று விளங்கு மணிப்பசும் பொன்னிற மாறுறுப்பும்
ஒன்றிய வண்ணக வொத்தா ழிசைக்கலி யோசைகுன்றாத்
துன்றிய வாளார் மழையுஞ் சுடர்த்தொடீஇ யேர்மலரும்
என்றிவை வெண்கலிப் பாவுக் கிலக்கிய மேந்திழையே.
(இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே வண்ணகவொ்த்தாழிசைக்கலிப்பாவுக்கும், வெண்கலிப்பாவுக்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)

கொச்சகக்கலிப்பாவின் வகை

[தொகு]

காரிகை 32 (தரவேதர)


தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்
மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைத்தோள்
அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்
குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே. (12)


(இக்காரிகை, தரவு கொச்சகக்கலிப்பாவும், தரவிணைக் கொச்சகக் கலிப்பாவும், சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பாவும், பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


கலிப்பாவின் இனம்

[தொகு]

காரிகை 33 (அடிவரை)


அடிவரை யின்றி அளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே
நெடிலடி நான்கா நிகழ்வது நேரடி யீரிரண்டாய்
விடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே. (13)
(இக்காரிகை, கலித்தாழிசையும் கலித்துறையும் கலிவிருத்தமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


(உதாரணமுதனினைப்பு/உரைச்சூத்திரக்காரிகை)


கொய்தினை யாய்தினை மென்றினை வாள்வரி பூண்டபறை
எய்திய தாழிசை யானும்வென் றானுங் கலித்துறையே
மைதிக ழோதி வடிவே னெடுங்கண் வனமுலையாய்
மெய்திகழ் வேய்தலை தேம்பழுத் தென்ப விருத்தங்களே.
(இவ்வுரைச்சூத்திரக்காரிகையின் வழியே கலித்தாழிசை, கலி்த்துறை, கலிவிருத்தங்கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)


வஞ்சிப்பாவும் அதன் இனமும்

[தொகு]

காரிகை 34 (குறளடி நான்கின)


குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்
துறையொரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான்
கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து
மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே. (14)
(இக்காரிகை, வஞ்சித்தாழிசையும், வஞ்சி்த்துறையும், வஞ்சிவிருத்தமும் வஞ்சிப்பாவுக்கு ஈறு ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.)


(உதாரணமுதனினைப்பு/உரைச்சூத்திரக்காரிகை)


மடப்பிடி பேடை யிரும்பிடி தாழிசை வாய்ந்ததுறை
வடுப்புரை கண்மட வாய்மை சிறந்த திரைத்தவுமாம்
மடற்றிகழ் சோலை யிருதுவு மாகும் விருத்தம் வஞ்சிக்
கொடித்திகழ் பூந்தா மரைகொடி வாலன தொன்னலமே.
(இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே வஞ்சிப்பாவுக்கும், இனங்கட்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)


மருட்பா

[தொகு]

(காரிகை 35 (பண்பார்புற)


பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த்
தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா
வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்
வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே. (15)
(இக்காரிகை, புறநிலைவாழ்த்து மருட்பாவும், கைக்கிளை மருட்பாவும், வாயுறைவாழ்த்து மருட்பாவும், செவியறிவுறூஉ மருட்பாவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


(உதாரணமுதனினைப்பு/உரைச்சூத்திரக்காரிகை)


தென்ற லிடையுந் திருநுதல் வேர்வும் பலமுறையென்
றொன்றிய பாவும்பல் யானையு மென்பவொண் போதமர்ந்த
பொன்றிக ழோதி புறநிலை கைக்கிளை வாயுறைவாழ்த்
தென்றிவற் றிற்குஞ் செவியறி விற்கு மிலக்கியமே.
(இவ்வுரைச்சூத்திரக்காரிகையின் வழியே மருட்பா நான்கிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.)


செய்யுளியல்ஓத்து முற்றும்

[தொகு]

(செய்யுளியல் முதனினைப்புக்காரிகை)


வெண்பா வளம்பட வீரடி யொன்றுட னேரிசையே
கண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி
நண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள்
பண்பார் புறநிலை செய்யு ளியலென்ப பாவலரே.


மூன்றாவது, ஒழிபியல்

[தொகு]
(உறுப்பியல் ஓத்தினுள்ளும், செய்யுளியல் ஓத்தினுள்ளும் சொல்லாதொழிந்த பொருளின் இயல்புகளை உணர்த்திற்றாதலால் ஒழிபியல்ஓத்து என்னும் பெயர்த்து.)


எழுத்துக்களின் புறனடை

[தொகு]

காரிகை 36 (சீருந்தளை)

[தொகு]
சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉ அளபோ
டாரு மறிவ ரலகு பெறாமையை காரநைவேல்
ஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்
வாரும் வடமுந் திகழு முகிண்முலை வாணுதலே. (01)


(இக்காரிகை ஒருசார் எழுத்துக்கட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)


அசையின் புறனடை

[தொகு]

காரிகை 37 (விட்டிசைத்)

[தொகு]
விட்டிசைத் தல்லான் முதற்கட் டனிக்குறி னேரசையென்
றொட்டப் படாததற் குண்ணா னுதாரண மோசைகுன்றா
நெட்டள பாய்விடி னேர்நேர் நிரையொடு நேரசையாம்
இட்டத்தி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே. (02)
(இக்காரிகை, ஒருசார் அசைகட்கு எய்தியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.)

சீர்க்கும் தளைக்கும் புறனடை

[தொகு]

காரிகை 38 (மாஞ்சீர்)

[தொகு]
மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்
தாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந்
தாஞ்சீர் மயங்குந் தளையுமஃ தேவெள்ளைத் தன்மைகுன்றிப்
போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே. (03)


(இக்காரிகை, சீருந் தளையும் செய்யுளகத்து நிற்பதோர் முறைமையுணர்த்துதல் நுதலிற்று.)


அடிமயக்கம்

[தொகு]

காரிகை 39 (இயற்றளை)

[தொகு]
இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்
மயக்கப்படா வல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல்
கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான்
முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே. (04)
(இக்காரிகை, அடிமயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


அடிக்கும் தொடைக்கும் புறனடை

[தொகு]

காரிகை 40 (அருகிக்கலியோ)

[தொகு]
அருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும்
வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார்
கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென்
றிரணத் தொடைக்கு மொழிவ ரிடைப்புண ரென்பதுவே. (05)


(இக்காரிகை, ஒருசார் அடிக்கும் தொடைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)


எதுகை மோனைகளுக்குப் புறனடை

[தொகு]

காரிகை 41 (வருக்கநெடிலினம்)

[தொகு]
வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மோனையுமென்
றொருக்கப் பெயரா லுரைக்கப் படுமுயி ராசியிடையிட்
டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி
நிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே. (06)


(இக்காரிகை ஒருசார் எதுகைக்கும் மோனைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)


தரவு தாழிசைகட்கு அடிவரையறை

[தொகு]

காரிகை 42 (சுருங்கிற்று)

[தொகு]
சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே
தரங்கக்கும் வண்ணகக் குந்தர வாவது தாழிசைப்பாச்
சுருங்கிற் றிரண்டடி யோக்க மிரட்டி சுரும்பிமிரும்
தரங்கக் குழலாய் சுருங்குந் தரவினிற் றாழிசையே. (07)


(இக்காரிகை, தரவு தாழிசைகட்கு அடியளவு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.)


பாக்களுக்குரிய சிலஇயல்புகள்

[தொகு]

காரிகை 43 (பொருளோடடி)

[தொகு]
பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி
இருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியொழிந்த
மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப்
பொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங்கொடியே.(08)
(இக்காரிகை, மேற்சொல்லப்பட்ட பாக்கட்கு எல்லாம் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.)


காரிகை நுதலிய பொருளும் தொகையும்

[தொகு]

காரிகை 44 (எழுத்துப்பதின்)

[தொகு]
எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந்
திழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமூன்
றொழுக்கிய வண்ணங்க ணூறொன்ப தொண்பொருள் கோளிருமூ
வழுக்கில் விகாரம் வனப்பெட்டி யாப்புள் வகுத்தனவே. (09)
(இக்காரிகை, இந்நூல் வகுத்த பொருளெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.)


ஒழிபியலோத்து முற்றும்

[தொகு]

ஒழிபியலொத்து முதனினைப்புக்காரிகை

[தொகு]
(உரைச்சூத்திரக் காரிகை)
சீருந் தளையுடன் விட்டிசை மாஞ்சீ ரியற்றளைதேர்
வாரு மருகிக் கலியே வருக்க நெடில்சுருங்கிற்
றோரும் பொருளோ டடிமுத லாவெழுத் தொன்பதுவென்
றாருந் தெளிந்த வொழிபியற் சூத்திர மாகியதே.

அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை முற்றும்

[தொகு]
"https://ta.wikisource.org/w/index.php?title=யாப்பருங்கலக்காரிகை&oldid=1526097" இலிருந்து மீள்விக்கப்பட்டது