பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

19

அவள் அவனிடம் எதிர்பார்ப்பதை மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அலுத்துப்போனவளாக “மணி ரொம்ப இருக்குமே...” என்று அவனிடம் மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள்.

அப்போது பட்டப்பா கண்களில் நீர் ததும்ப அவளை இரக்கத்துடன் பார்த்தான். அவளே அப்படியே இறுக அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போலத் தேம்பித் தேம்பி அழுதான்.

“நர்மதா! நீ ஏமாந்துட்டே. எனக்கிருக்கிற பலஹனத்தைப்பத்தி உங்கிட்ட சொல்லவே வெக்கமா இருக்கு. பணத்தைப்பாத்து மயங்கி உங்கம்மா உன்னை என் கழுத்தில் கட்டிட்டாங்க. நீ எங்கேயோ எப்படியோ வாழவேண்டியவ. இதைக் காலையிலே எடுத்துப்போய்படி. ராத்திரி ராத்திரி இந்த அறைக்குள்ளே பல ஆசைகளோட வராதே.”

அவள் முன்பாகக் கிடந்த அந்தக் கடிதத்தை அவள் வெறுப்புடன் பார்த்தாள். கணவனும், மனைவியும் முதன் முதலில் சந்திக்கும்போது கடிதம் என்ன வேண்டிக்கிடக்கிறது?

மறுபடியும் அவள் அடுத்த வீட்டு மாடியைப்பார்த்தாள்.

பூரணியும், பாலுவும் அறையில் மங்கிய ஒளியில் படுத்திருப்பது தெரிந்தது. எத்தனை நெருக்கம்? முடிவற்ற குழப்பமான சிந்தனைகள் அவளை வாட்டி எடுத்தன. என்ன கடிதமாக இருக்கும்? ஒரு வேளை அவன் யாரையாவது காதலித்து இருக்கலாம்.

நீண்டு கொண்டே வந்த இரவு எப்போது தொலைந்தது என்பது தெரியாமல் அவள் தூங்கிவிட்டாள். விழித்தபோது பட்டப்பா அறையில் இல்லை.

முதல்நாள் ஸ்வப்பனபுரியாகக் காட்சிதந்த வீடு இன்று அவள் வரைக்கும் வெறுமையாக இருந்தது.