பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 31 வாதாட வேண்டும் போலிருந்தது. வண்டி இழுத்துக் கஷ்டப்பட்ட அப்பாவும், வடை விற்றுப் பிழைப்பு நடத்தும் அம்மாவும், பள்ளிக்கூடத்திற்குப் போகும் தம்பி, தங்கைகளும்தான் வேலையின் சேர்ந்ததன் மூலம், வீட்டில் பாலும் தேனும் ஆறாய் ஒடப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அந்த எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட வேண்டாம் என்றும் மன்றாட வேண்டும் போலிருந்தது. 'விசுவாசம் இருந்தால், எந்த வேலையையும் கற்றுக் கொள்ளலாம் என்றும், தனக்குத் திறமை இல்லையென்றாலும் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விசுவாசம் இருக்கிறது என்றும், அவரிடம் அடித்துச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் வாயைத் திறக்க முடியவில்லை. அப்படித் திறந்தால் கண்களில் முட்டி நிற்கும் நீர் கன்னங்களில் விழுந்து காட்டிக் கொடுத்துவிடும் போலிருந்தது. பேசாமல் தலையைக் குனிந்துகொண்டே திரும்பினாள். ஒருசில நாட்கள் ஓடின. அன்றும் வசந்தி, வழக்கம்போல், அலுவலகத்திற்கு, மற்றவர்கள் வருவதற்கு முன்னதாக வந்துவிட்டாள். அவள் நாற்காலியில் ஒர் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவள் லேசாகத் தயங்கினாள். அவன் சகஜமாகப் பேசினான். 'நான்தான் பிரகாஷ், லீவில் போயிருந்தேன். இன்னைக்குத்தான் டியூட்டியில் சேரப் போறேன். நீங்கதான் மிஸ் வசந்தின்னு நினைக்கிறேன். 'அம் ஐ கரெக்ட்? வசந்திக்கு, மற்றப் பெண்களைப்போல், யு ஆர் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவன் மிஸ் என்று சொன்னது அவளுக்குப் பெருமையாகத் தோன்றியது. இதுவரைக்கும் எவரும் அவளை அப்படி அழைத்ததில்லை. அவள், அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவன் மீண்டும் பேசினான்.