பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 129 வணங்கிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டான். ஆண்டவனே அவதரித்ததுபோல் காட்சியளிக்கும் ஞானச் செம்மலே. நான் ஆண்டவனை மறக்காமலிருக்கவும், உமது ஞான சாகரத்தில் ஒரு ஒளித்துளி என் மீது படவும் அருளும் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு கண்களைத் திறந்தான். சாமியார் கிழக்குத் திக்கை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிள்ளை பெண்டாட்டி உத்தியோக விவகாரங்களையே கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட சாமியார், தன்னைப் புரிந்து கொண்ட அடையாளச் சின்னமாக புன்னகைப்பார் என்று நினைத்திருந்த கார்த்திக்கு, அவர், அவனோடு சம்பந்தப் படாதவர்போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ போலிருந்தது. மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, கையில் இருந்த வாழைப் பழத்தை அவரிடம் நீட்டினான். மற்றவர்களிடம் வாங்கிக் கொண்டு அருகே வைத்துக்கொள்ளும் அவர், இப்போது கார்த்தியிடம் வாங்கிய பழத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தார். இது போதாதென்று சாமியார், இன்னோர் அடி கொடுத்தார். எல்லோருக்கும் நெற்றியில் திருநீறிட்ட அவர், கார்த்தியை விபூதி எடுத்துக்கொள்ளுமாறு சைகை செய்தார். கார்த்தி செயலற்று நின்றபோது, பின்னால் வந்தவர்கள் நகரச் சொன்னார்கள். கார்த்தி வரிசையில் இருந்து வெளியே வந்தான். பின்னால் வந்தவர்களுக்கு சாமியார் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டிருந்தார். கார்த்திக்கு உடலெல்லாம் ஆடியது. பாவிகளை ரட்சிக்க இயேசுவைப் போல் உட்கார்ந்து உட்கார்ந்து இரண்டு கால்களும் செயலி யக்கம் இல்லாமல் கிடக்க, உலகத்திற்காகத் தன்னையே பலி கொடுக்கும் இந்த மகான், ஏன் அவனை மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்துகிறார்? எப்படியாவது சாமியாரின் கையாலேயே விபூதி வாங்கி விடுவது என்ற வைராக்கியத்துடன் மீண்டும் வரிசையில் வந்து நின்றான். பழைய தெம்போ, தன்னம்பிக்கையோ இல்லை சாமியாரின் போக்கு, அவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.