உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/அரண்மனைப் பூங்கா

விக்கிமூலம் இலிருந்து
16. அரண்மனைப் பூங்கா


திருநாவுக்கரசரின் மடத்தில் குலச்சிறையாரை மங்கையர்க்கரசி பார்த்து ஏறக்குறைய ஒரு வாரம் ஆயிற்று. இந்த ஒரு வாரம் செம்பியன் வளவனுடைய மகளுக்கு ஒரு யுகமாகச் சென்றது. பாண்டிய குமாரர் இன்று வருவார்; நாளை வருவார் என்று அரண்மனையில் பேச்சாயிருந்தது. நெடுமாற பாண்டியன் வரவைக் குறித்து மங்கையர்க்கரசிக்கு எவ்வித ஆவலும் ஏற்படவில்லை என்றாலும், பாண்டியனோடு அன்று தான் மடத்தில் பார்த்த வாலிபனும் வருவான், அவனிடம் அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரிக்கலாம் என்ற ஆவல் அவள் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு வருஷத்துக்கு முன்னால் கார்காலத்தில் விடா மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் மாலை நடந்த சம்பவமும் மங்கையர்க்கரசியின் மனத்தில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அன்று இந்தப் பாண்டிய வாலிபனும் இவனுடைய சிநேகிதன் ஒருவனும் மழையில் சொட்ட நனைந்த வண்ணம் செம்பியன் வளவனின் அரண்மனை வாசலில் வந்து நின்று இரவு தங்க இடம் கேட்டார்கள். விருந்தோம்புவதில் இணையற்ற செம்பியன் வளவனும் அவர்களை ஆதரவுடன் வரவேற்று உபசரித்தான். வந்த இளைஞர்கள் இருவரும் தங்களை வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். சிரிக்கச் சிரிக்கக் குதூகலமாய்ப் பேசினார்கள். அப்புராதன சோழ அரண்மனையில் அன்று வெகு நேரம் வரை ஒரே கோலாகலமாயிருந்தது.

மங்கையர்க்கரசியின் தந்தை அவளிடம் இரகசியமாக, "இவர்கள் வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் அல்லவா? வெறும் பொய்! நான் சொல்கிறேன், கேள்! இவர்கள் மாறுவேடம் பூண்ட பெரிய குலத்து இராஜகுமாரர்கள்!" என்று சொன்னார். இது மங்கையர்க்கரசிக்கும் மகிழ்ச்சி தந்தது. ஏனெனில், அந்த இளைஞர்களிலே ஒருவன் தன்னுடைய உள்ளத்தை எப்படியோ மெள்ள மெள்ளக் கவர்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். மறுநாள் உதயமானதும் இளைஞர் இருவரும் பிரயாணமாயினர். ஆனால், போவதற்கு முன்னால் அவர்களில் ஒருவன், அதாவது குலச்சிறையின் சிநேகிதன், "மீண்டும் ஒருநாள் திரும்பி வருவோம்" என்று உறுதி கூறியதோடு, மங்கையர்க்கரசியிடம் நயன பாஷையில் அந்தரங்கமாகவும் சில விஷயங்களைச் சொன்னான். இந்தச் சம்பவத்தைப் பற்றிச் சில நாள் வரையில் தந்தையும் மகளும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு வெறும் கனவு என்று எண்ணி மறந்தார்கள். அப்போது மங்கையர்க்கரசியின் மனம் கவர்ந்த அதே சுந்தர புருஷன்தான் இப்போது சில நாளாக அவளுடைய பயங்கரக் கனவுகளிலே தோன்றிக் கொண்டிருந்தவன். எனவே, தாய் தந்தையின் பாதுகாப்பற்ற அந்த அனாதைப் பெண் இப்போது பெரிதும் பரபரப்புக் கொண்டிருந்ததில் வியப்பு ஒன்றுமில்லையல்லவா?

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் காஞ்சி அரண்மனை அல்லோலகல்லோலப்பட்டது. நெடுமாற பாண்டியன் அவனுடைய பரிவாரங்களுடன் காஞ்சிக்கு வந்து விட்டதாக மங்கையர்க்கரசி அறிந்தாள். வானமாதேவியின் நடுமாளிகையில் நெடுமாறன் தங்கியிருப்பதாகவும், அவனுக்கு இன்னும் உடம்பு பூரணமாகக் குணமாகவில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். ஆனால், குலச்சிறையைத் தனிமையில் சந்தித்து விசாரிக்க வேண்டுமென்னும் மங்கையர்க்கரசியின் மனோரதம் நிறைவேறும் என்பதாக மட்டும் காணப்படவில்லை.

புவனமகாதேவி தினந்தோறும் சிவபூஜை செய்த பிறகு தன் மருமகள் வானமாதேவிக்குப் பிரசாதம் அனுப்புவதுண்டு. மங்கையர்க்கரசி தானே பிரசாதம் எடுத்துக் கொண்டு போவதாகச் சொன்னாள். அம்மாளிகையில் இருக்கும் போது மங்கையர்க்கரசியின் கண்கள் நாற்புறமும் சுழன்று சுழன்று தேடியும் அந்த வாலிபன் காணப்படவில்லை. ஒருநாள் மனத்துணிவை வரவழைத்துக் கொண்டு புவனமகாதேவியையே கேட்டாள். "அம்மா! அன்று சைவத் திருமடத்தில் ஓர் இளைஞரைப் பார்த்தோமே? அவர் பாண்டிய குமாரரோடு வந்திருப்பதாகத் தெரியவில்லையே?" என்றாள். அதற்குப் புவனமகாதேவி, "அதை ஏன் கேட்கிறாய், குழந்தாய்! பாண்டிய குமாரன் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிருக்கிறது..." என்பதற்குள், "அடடா! அப்படியா? அவருக்கு உடம்பு இன்னும் குணமாகவில்லையா? அதனால்தான் வானமாதேவி எப்போதும் ஒரே கவலையாயிருக்கிறார் போலிருக்கிறது. முன்னேயெல்லாம் நான் சிவபூஜைப் பிரசாதம் கொண்டு போனால் முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு என்னிடமும் அன்பாக வார்த்தையாடுவார். இப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை!" என்றாள்.

"ஆமாம், குழந்தாய்! வானமாதேவி கவலைப்படுவதற்கு ரொம்பவும் காரணமிருக்கிறது. நெடுமாறனுக்கு உடம்பு இப்போது சௌக்கியமாகி விட்டது. ஆனால், அவனுடைய மனத்தைச் சமணர்கள் ரொம்பவும் கெடுத்திருக்கிறார்கள். அவனோடு பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற வீரமறவர் சைனியம் வந்திருக்கிறது. அந்தச் சைனியத்தைத் திருக்கழுக்குன்றத்தில் தங்கச் செய்திருக்கிறார்கள். இலங்கை இளவரசனும் நாம் அன்று பார்த்த குலச்சிறை என்ற வாலிபனும் திருக்கழுக்குன்றத்திலேதான் இருக்கிறார்களாம். குழந்தாய்! விபரீதம் ஒன்றும் நேராதிருக்க வேண்டுமே என்று அம்பிகைபாகனை அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். என்னைக் காட்டிலும் வானமாதேவியின் தலையில் பெரிய பாரம் சுமந்திருக்கிறது. பாவம்! அவள் ஒரு வாரமாய்த் தூங்கவில்லையாம்!" என்றாள் மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி.

பாண்டிய குமாரனுடைய வரவினால் என்ன விபரீதம் ஏற்படக்கூடும், எதற்காக எல்லோரும் இவ்வளவு கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் மங்கையர்க்கரசிக்குத் தெளிவாக விளங்கவில்லை. அதைப் பற்றி அவ்வளவாக அவள் கவனம் செலுத்தவும் இல்லை. அவளுக்குத் தன்னுடைய கவலையே பெரிதாக இருந்தது. குலச்சிறை என்று பெயர் சொன்ன வாலிபனை ஒருவேளை தான் பார்க்க முடியாமலே போய் விடுமோ, அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியாமற் போய் விடுமோ என்ற ஏக்கம் அவள் உள்ளத்தில் குடிகொண்டு, வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் செய்தது.

இத்தகைய மனோநிலைமையில் ஒருநாள் மாலை நேரத்தில் அரண்மனைப் பூங்காவனத்தில் புவனமகாதேவியின் சிவபூஜைக்காக மங்கையர்க்கரசி மலர் பறித்துக் கொண்டிருந்தாள். பன்னீர் மந்தாரை, பொன்னரளி, செவ்வரளி முதலிய செடிகளிலிருந்தும், சம்பங்கி, சாதி, மல்லிகைக் கொடிகளிலிருந்தும் அவளுடைய மலர்க்கரங்கள் புஷ்பங்களைப் பறித்துப் பூக்கூடையில் போட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அவளுடைய உள்ளமோ இரண்டு வருஷங்களுக்கு முன்பு விடாமழை பெய்த ஒருநாள் சாயங்காலம் தன் தந்தையின் புராதன மாளிகையைத் தேடி வந்த இளைஞர்களைப் பற்றியும் அவர்களில் ஒருவன் தன் உள்ளத்தைக் கொண்டு போனதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தது. 'ஒரு நாள் உன்னைத் தேடிக் கொண்டு மறுபடியும் வருவேன்' என்று அவன் கூறிய வாக்குறுதி, நீரின் மேல் எழுதிய எழுத்துதான் போலும்! 'இந்த உலகில் எனக்கு ஒரே துணையாக இருந்த தந்தையும் போர்க்களத்துக்குப் போய் விட்டார். இனிமேல் என் கதி என்ன ஆகப் போகிறது?' என்று எண்ணிய போது மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் துளித்தது.

செடி கொடிகளின் வழியாக யாரோ புகுந்து வருவது போன்ற சலசலப்புச் சப்தம் கேட்டு, மங்கையர்க்கரசி சப்தம் வந்த திசையை நோக்கினாள். ஆம்; யாரோ ஒரு மனிதர் அந்த அடர்ந்த பூங்காவின் செடிகளினூடே நுழைந்து வந்து கொண்டிருந்தார். ஆனால், அவருடைய முகம் தெரியவில்லை. அந்தப்புரத்துப் பூந்தோட்டத்தில் அவ்விதம் அலட்சியமாக வரும் மனிதர் யாராயிருக்கும்? மாமல்ல சக்கரவர்த்தியைத் தவிர வேறு ஆண்மக்கள் யாரும் அந்தத் தோட்டத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று மங்கையர்க்கரசி கேள்விப்பட்டிருந்தாள். பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி அந்தப் பூங்காவனத்தைப் பராமரிப்பதற்குக் கூட ஸ்திரீகளே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, இவ்வளவு துணிச்சலாக அந்தத் தோட்டத்தில் நுழைந்து வரும் அந்நிய மனிதர் யார்? யாராயிருந்தாலும் இருக்கட்டும், நாம் திரும்பிப் புவனமகாதேவியின் அரண்மனைக்குப் போய் விடலாம் என்ற எண்ணத்தோடு மங்கையர்க்கரசி சட்டென்று திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

அதே சமயத்தில், "யார் அம்மா, அது? இந்தப் பூந்தோட்டத்துக்குள் தெரியாத்தனமாகப் புகுந்து விட்டேன். திரும்பிப் போக வழி தெரியவில்லை. வானமாதேவியின் அரண்மனைக்கு எப்படிப் போக வேண்டும்? கொஞ்சம் வழி சொல்லு, அம்மா!" என்று யாரோ சொல்லுவது கேட்டது. அவ்விதம் சொல்லிய குரலானது மங்கையர்க்கரசியின் தேகம் முழுவதையும் ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. அவளுடைய காலடியிலிருந்த தரை திடீரென்று நழுவிப் போவது போல் இருந்தது. அந்தப் பூங்காவனத்திலுள்ள செடி கொடிகள் எல்லாம் அவளைச் சுற்றி வருவதாகத் தோன்றியது. பக்கத்திலிருந்த மந்தார மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் சமாளித்தாள். அவளுடைய இடக்கையில் பிடித்திருந்த வெள்ளிப் பூங்கூடை மட்டும் நழுவிக் கீழே விழ, அதிலிருந்து பல நிறப் புஷ்பங்கள் தரையில் சிதறின.

"ஓஹோ! பயந்து போய் விட்டாயா என்ன? ஏதும் தவறாக எண்ணிக் கொள்ளாதே, அம்மா! உண்மையாகவே வழி தெரியாததனால்தான் கேட்டேன். நான் இந்த ஊர்க்காரன் அல்ல; பாண்டிய நாட்டான். வானமாதேவியின் மாளிகை எந்தத் திசையிலிருக்கிறது என்று சொன்னால் போதும்; போய் விடுகிறேன். இந்தத் தோட்டத்தில் வேறு யாருமே காணப்படாமையால் உன்னைக் கேட்கும்படி நேர்ந்தது. நீ யார் என்று கூட எனக்குத் தெரியாது" என்று அந்த மனிதன் சொல்லி வந்த போது மங்கையர்க்கரசிக்குப் பூரண தைரியம் வந்து விட்டது. சட்டென்று தான் பிடித்திருந்த செடியின் கிளையை விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் நினைத்தது தவறாகப் போகவில்லை. ஆம், அவன்தான்! அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவு தன் தந்தையின் வீட்டுக்கு அதிதியாக வந்து தன் உள்ளங்கவர்ந்து சென்ற கள்வன்தான்!

மங்கையர்க்கரசியின் அதிசயத்தைக் காட்டிலும் பாண்டிய குமாரனுடைய அதிசயம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. "ஆ!" என்ற சப்தத்தைத் தவிர வேறொரு வார்த்தையும் அவன் வாயிலிருந்து வரவில்லை. பேச நா எழாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அடங்கா அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டு கைதேர்ந்த சிற்பி அமைத்த கற்சிலைகளைப் போல் சற்று நேரம் நின்று கொண்டிருந்தார்கள். கடைசியாக, பாண்டிய குமாரன், உணர்ச்சியாலும் வியப்பாலும் கம்மிய குரலில், "பெண்ணே! உண்மையாக நீதானா! செம்பியன் வளவன் மகள் மங்கையர்க்கரசிதானா? அல்லது இதுவும் என் சித்தப்பிரமையா?" என்றான். மங்கையர்க்கரசி மறுமொழி சொல்ல விரும்பினாள். ஆனால் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர்தான் வந்தது. உடனே பாண்டிய குமாரன் அளவில்லாத ஆர்வத்துடன் அவள் அருகில் வந்து, "பெண்ணே! இது என்ன? ஏன், உன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது? ஏதேனும் நான் பெரிய பிசகு செய்து விட்டேனா? என்ன செய்து விட்டேன்?" என்று பரபரப்புடன் வினவினான்.

மங்கையர்க்கரசி, விம்மலுக்கிடையில், "ஐயா! அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த மங்கையர்க்கரசி நான்தான்!" என்றாள். "ஏன் இப்படி மனம் நொந்து பேசுகிறாய்? ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறாய்? கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் உன்னை இங்கே பார்த்ததும், எனக்குச் சொல்லி முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. பிறவிக் குருடன் கண் பெற்றது போன்ற மகிழ்ச்சியடைந்தேன். கடல் கடைந்த தேவர்கள் அமிர்தம் எழக் கண்டதும் அடைந்த ஆனந்தத்தை நானும் அடைந்தேன். எவ்வளவோ மனக் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருந்தவன் உன்னைக் கண்டதும் அவையெல்லாம் மறந்து ஒருகணம் எல்லையற்ற குதூகலம் அடைந்தேன்! ஆனால், உன்னுடைய விம்மலும் கண்ணீரும் அந்த மகிழ்ச்சியையெல்லாம் போக்கி என்னை மறுபடியும் சோகக் கடலில் மூழ்க அடித்து விட்டது. உனக்கு என்ன துயரம் நேர்ந்தது? ஏன் உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொள்கிறாய்? உன் துயரத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் நான் எந்த விதத்திலாவது காரணம் ஆனேனா? ஏற்கெனவே நான் பெரிய மனத் தொல்லைகளுக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகியிருக்கிறேன். அவ்வளவுக்கும் மேலே உனக்கு எவ்விதத்திலாவது துன்பம் கொடுத்திருப்பேனானால், இந்த வாழ்க்கைதான் என்னத்திற்கு? உயிரையே விட்டு விடலாம் என்று தோன்றுகிறது."

இவ்வாறு நெடுமாறன் உண்மையான உருக்கத்தோடு சொல்லி வந்த போது, பேதைப் பெண்ணாகிய மங்கையர்க்கரசி பலமுறை குறுக்கிட்டுப் பேச விரும்பினாள். என்றாலும், அதற்கு வேண்டிய தைரியம் இல்லாதபடியால் விம்மிக் கொண்டே சும்மா நிற்க வேண்டியதாயிற்று. கடைசியில், பாண்டிய குமாரன் உயிர் விடுவதைப் பற்றிப் பேசியதும் அவளுக்கு எப்படியோ பேசுவதற்குத் தைரியம் ஏற்பட்டு, "ஐயோ! தங்களால் எனக்கு எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை!" என்றாள். "அப்படியானால் என்னைப் பார்த்ததும் நீ கண்ணீர் விடுவதற்கும் விம்மி அழுவதற்கும் காரணம் என்ன? இரண்டு வருஷ காலமாக உன்னை மறுபடி எப்போது பார்க்கப் போகிறோம் என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் உன்னைச் சந்திக்கும் போது சந்தோஷத்தினால் உன் முகம் எப்படிச் சூரியனைக் கண்ட செந்தாமரையைப் போல் மலரும் என்று கற்பனை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக என்னைப் பார்த்ததும் உன் முகம் அஸ்தமன அரக்கனைக் கண்ட தாமரையைப் போல் வாடிக் குவிந்தது. உன் கண்களும் கண்ணீர் பெருக்கின ஏன் அப்படி?"

பாண்டிய குமாரனுடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் மங்கையர்க்கரசி, "ஐயா! தாங்கள் சொன்னது உண்மைதானா? என்னைத் தாங்கள் அடியோடு மறந்து விடவில்லையா? என்னை மறுபடியும் சந்திக்கும் உத்தேசம் தங்களுக்கு இருந்ததா?" என்று கேட்டாள். "அதைப் பற்றி உனக்கு ஏன் சந்தேகம் ஏற்பட்டது? மீண்டும் உன்னைச் சந்திப்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஓயாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. மதுரையிலிருந்து இந்த நகரத்துக்கு வரும் வழியில் அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவில் எனக்கு அடைக்கலம் தந்த செம்பியன் வளவன் மாளிகையை அடைந்தேன். அந்த மாளிகை பூட்டிக் கிடந்ததைப் பார்த்ழூததும் எனக்குண்டான ஏமாற்றத்தைச் சொல்லி முடியாது. உலகமே இருளடைந்து விட்டதாக எனக்குத் தோன்றியது. அப்புறம் குலச்சிறை உன்னை இந்த நகரில் பார்த்ததாகச் சொன்ன பிறகு கொஞ்சம் மன அமைதி உண்டாயிற்று" என்றான் நெடுமாறன். "ஆகா! அவர் வந்து சொன்னாரா? அப்படியானால், தாங்களும் பாண்டிய குமாரரிடம் உத்தியோகத்தில் இருக்கிறீர்களா? என்று மங்கையர்க்கரசி கேட்டாள்.

நெடுமாறனுடைய முகத்தில் ஒருகணம் மர்மமான புன்னகை தோன்றி மறைந்தது. தான் இன்னான் என்பதை மங்கையர்க்கரசி இன்னமும் தெரிந்து கொள்ளாமலே பேசுகிறாள் என்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். அந்தத் தவறுதலை இன்னமும் நீடிக்கச் செய்வதில் அவனுக்குப் பிரியம் ஏற்பட்டது. "ஆம்! பாண்டிய குமாரரிடந்தான் நானும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி உனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே?" என்று கேட்டான். மங்கையர்க்கரசி, "எனக்கு என்ன ஆட்சேபம்? தாங்கள் நல்ல பதவியில் இருந்தால் எனக்குச் சந்தோஷந்தானே? தங்களுடைய சிநேகிதரைத் திருநாவுக்கரசர் மடத்தில் பார்த்த போது என் மனத்திலும் அம்மாதிரி எண்ணம் உண்டாயிற்று. ஆனால், அதையெல்லாம் பற்றி இனி என்ன? என் குலதெய்வம் தங்களையேதான் என் முன் கொண்டு வந்து விட்டதே?" என்று ஆர்வம் பொங்கக் கூறினாள். "ஆனாலும் உன் தெய்வம் என்னை உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய போது நீ சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லையே! உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டாயே?" என்று நெடுமாறன் விஷமப் புன்னகையுடன் கேட்டான்.

"சுவாமி! எதிர்பாராதபோது தங்களைத் திடீரென்று பார்த்ததில் பேசத் தெரியாமல் திகைத்து நின்றேன். தாங்களும் என்னைத் தெரிந்து கொள்ளாதது போல் ஒரு மாதிரியாகப் பேசவே, எனக்குக் கண்ணீர் வந்து விட்டது! என்னுடைய பேதைமையைப் பற்றிச் சொல்லிக் காட்டாதீர்கள்!" என்று மங்கையர்க்கரசி கூறிய போது அவளுடைய கண்களில் மறுபடியும் கண்ணீர் துளித்தது. "என் கண்ணே! என்னை மன்னித்து விடு! இந்த மூர்க்கன் உன் கண்களில் மறுபடியும் கண்ணீர் வரச் செய்தேனே?" என்று சொல்லிக் கொண்டு நெடுமாறன் தன் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்ணீரைத் துடைத்தான்.

சற்றுப் பொறுத்து மங்கையர்க்கரசி, "சுவாமி! வெகு நேரம் ஆகி விட்டது. பூஜை நேரம் நெருங்கி விட்டது; நான் போக வேண்டும்" என்றாள். "கட்டாயம் போகத்தான் வேண்டுமா?" என்று நெடுமாறன் விருப்பமில்லாத குரலில் கேட்டான். "ஆம், போக வேண்டும், புவனமகாதேவி காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை நான் வரவில்லையேயென்று தாதியை அனுப்பினாலும் அனுப்புவார்கள்." "அப்படியானால் நாளைய தினம் இதே நேரத்தில் இங்கு நீ வர வேண்டும்; தவறக் கூடாது. மேலே நம்முடைய காரியங்களைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே?" என்றான் நெடுமாறன்.

மங்கையர்க்கரசி திடுக்கிட்டவளாய் நெடுமாறனை நிமிர்ந்து பார்த்து, "பாண்டிய குமாரர் வாதாபி யுத்தத்துக்குப் போனால் நீங்களும் அவரோடு போவீர்களா?" என்று கேட்டாள். "ஆமாம், போக வேண்டியதுதானே? ஏன் கேட்கிறாய்? நான் போருக்குப் போவது உனக்குப் பிடிக்கவில்லையா?" என்றான் நெடுமாறன். "எனக்குப் பிடிக்கத்தான் இல்லை; யுத்தம், சண்டை என்பதே எனக்குப் பிடிக்கவில்லை. எதற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் துவேஷிக்க வேண்டும்? ஏன் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாக வேண்டும்? ஏன் எல்லாரும் சந்தோஷமாகவும் சிநேகமாகவும் இருக்கக் கூடாது?" என்றாள் மங்கையர்க்கரசி.

நெடுமாறன் மீண்டும் மர்மமான புன்னகை புரிந்து, "யுத்தத்தைப் பற்றி உன்னுடைய அபிப்பிராயத்தைப் பாண்டிய குமாரரிடம் சொல்லிப் பார்க்கிறேன். ஒருவேளை அவருடைய மனம் மாறினாலும் மாறலாம். எல்லாவற்றிற்கும் நாளை மாலை இதே நேரத்துக்கு இங்கு நீ கட்டாயம் வரவேண்டும்; வருவாயல்லவா?" என்றான். "அவசியம் வருகிறேன்; இப்போது ரொம்ப நேரமாகி விட்டது உடனே போக வேண்டும்" என்று கூறி மங்கையர்க்கரசி கீழே கிடந்த புஷ்பக் கூடையை எடுப்பதற்குக் குனிந்தாள். நெடுமாறனும் குனிந்து தரையில் சிதறிக் கிடந்த புஷ்பங்களைக் கூடையில் எடுத்துப் போட்டு, மங்கையர்க்கரசியின் கையில் அதைக் கொடுத்தான். அப்படிக் கொடுக்கும் போது பயபக்தியுடன் பகவானுடைய நிருமால்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் அவளுடைய மலர்க் கரத்தைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். மெய்சிலிர்ப்பு அடைந்த மங்கையர்க்கரசி பலவந்தமாகத் தன் கையை நெடுமாறனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு புவனமகாதேவியின் அரண்மனையை நோக்கி விரைந்து நடந்தாள்.