பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

ஆழ்கடலில்


சிறப்புகளை இயற்றியிருப்பர். பின்பு எப்போதும் அப்பெரியாரைப் பல்லக்கில் ஏற்றிச் சுமப்பது தம்மால் முடியாது ஆதலின், அதற்கெனக் கூலியாள் வைத்திருப்பர். எனவே, பெரியாரைச் சிறப்பிக்கச் செய்யத் தொடங்கிய இப்பழக்கம். பின்பு அரசர்களையும் பெருஞ் செல்வர்களையும் அடைந்திருக்கலாம். நாளடைவில், நல்லவரோ கெட்டவரோ - செல்வமும் செல்வாக்கும் உடையோர் பலரும் பல்லக்கு ஏறத் தொடங்கிவிட்டார்கள். இக்கொள்ளையால், இக்காலத்தில் பல்லக்கு என்னும் ஊர்தியின் பயனே பிழையாகக் கருதப்பட்டுவிட்டது. இயற்கைதானே!

ஒத்துக்கொண்டிருந்தால், காந்தியடிகளாரை நடக்க விட்டிருப்பார்களா இவ்விருபதாம் நூற்றாண்டில்? அல்லது ஊர்தியில் ஏறத்தான் விட்டிருப்பார்களா? சிற்றூர்தோறும் தாமே சுமந்து செல்வதைப் பெரும் பேறாகக் கருதியிருப்பார்களே பல்லாயிர மக்கள்! அக்காலத்தில் அரசர் பலர், புலவர்களுக்கு அணுக்கத் தொண்டு (விசிறுதல் முதலியன) செய்ததாக அறிவிக்கின்றனவே சங்க இலக்கியங்கள்! எனவே, சுமப்பவர் எல்லோரும் பாவிகளே என்றோ, அல்லது ஊர்பவர் எல்லோரும் பாவிகளே என்றோ இயம்புவது முறையா? இக்காலத்திய கை வண்டியை (ரிக்ஷா) எடுத்துக் கொள்வோம். இழுப்பவர் எல்லோரும் பாவிகளா? நல்லவரும் பலர் உளர். உட்கார்ந்து செல்பவர் எல்லோரும் பாவிகளா? நல்லவரும் பலர் உளர். இல்லாதவன் இழுக்கின்றான். சோம்பேறி ஏறிச் செல்கின்றான். ஒருவன் வாங்கிய ஒரு வண்டி விறகை மற்றொருவன் கோடாரி கொண்டு பிளக்கவில்லையா? இது மட்டும் நீதியா? இது மட்டும் பிளப்பவனுக்கு இன்பமாகவா தோன்றும்? இல்லையே! எனவே இவையெல்லாம் வயிற்றுக்காகச் செய்யும் ஒருவித வாணிகம் (வியாபாரம்) ஆகும்.