சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/கொந்தளிப்பு

விக்கிமூலம் இலிருந்து
40. கொந்தளிப்பு


பல்லவ சேனா வீரர்கள் வாதாபிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்ட நாளிலிருந்து சிவகாமியின் உள்ளம் எரிமலையின் கர்ப்பப் பிரதேசத்தைப் போல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கோட்டைச் சுவருக்கு அப்பால் வெகு சமீபத்தில் மாமல்லரும் ஆயனரும் இருந்த போதிலும் அவர்களைத் தான் பார்க்க முடியவில்லையே என்ற ஆத்திரமும், யுத்தத்தின் விளைவாக என்ன ஏற்படுமோ என்ற கவலையும், எல்லாம் நன்றாக முடிந்து மாமல்லரைத் தான் சந்திக்கும் போது அவரிடம் என்ன பேசுவது, எப்படி நடந்து கொள்ளுவது என்ற சிந்தனையும் அவளை வாட்டிக் கொண்டிருந்தன. வாதாபிக்கு வடதிசையில் நடந்த பெரும் போரில் பல்லவ சைனியம் வெற்றியடைந்து புலிகேசி மாண்ட செய்தி சிவகாமியின் காதுக்கு எட்டிய போது, அவளுடைய இதயம் பெருமையினால் வெடித்துப் போய்விடும் போலிருந்தது. அதோடு அந்த வெற்றியின் காரணமாகத் தன்னுடைய நிலைமையில் என்ன மாறுதல் ஏற்படுமோ என்ற கவலையும் உண்டாயிற்று.

கோட்டைத் தளபதி பீமசேனன் அவளிடம் வந்து மாமல்லருக்கு ஓலை எழுதித் தரும்படி கேட்ட போது சிவகாமி தன்னுடைய வாழ்க்கையில் என்றும் அடையாத பெருமிதத்தை அடைந்தாள். அவ்விதமே சேனாதிபதிக்கு ஓலையும் எழுதித் தந்தாள். அதிலே தன்னுடைய அறிவினால் சிந்தித்து என்ன முடிவுகளுக்கு வந்திருந்தாளோ அந்த முடிவுகளையெல்லாம் எழுதியிருந்தாள். அவற்றையொட்டி வேண்டுகோளும் செய்திருந்தாள். ஆனால், அவளுடைய இதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருந்த உணர்ச்சியை அந்த ஓலை பிரதிபலித்ததாகச் சொல்ல முடியாது. தன்னையும் தன் கலையையும் அவமதித்து அவமானப்படுத்திய அந்த நகரத்து மக்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் ஆசை அவளுடைய உள்ளத்தின் அடிவாரத்தில் இன்னும் இருக்கத்தான் செய்தது. எனவே, ஓலை எழுதி அனுப்பிய பிறகு சிவகாமி ஒவ்வொரு சமயம், 'ஏன் அந்த ஓலையை எழுதி அனுப்பினோம்? அவ்வாறு எழுதி அனுப்ப நமக்கு என்ன உரிமை? இவ்வளவு பெரும் பிரயத்தனங்களுடனே படையெடுத்து வந்திருக்கும் மாமல்லரும் சேனாரனுபதியும் அதைக் குறித்து என்ன எண்ணுவார்களோ? பெண் புத்தியின் பேதைமையைக் குறித்துப் பரிகசித்து இகழ்வார்களோ? ஒருவேளை அதை ஒப்புக் கொண்டு காரியம் நடத்திய பிறகு என்னை ஏசிக் காட்டுவார்களோ?' என்றெல்லாம் எண்ணமிட்டாள்.

அவ்விதம் தான் ஓலை எழுதி அனுப்பியது குறித்து அவளைப் பச்சாத்தாபம் கொள்ளச் செய்த சம்பவங்கள் சிலவும் பிற்பாடு ஏற்பட்டன. கோட்டைத் தளபதி சிவகாமியின் மாளிகைக்கு வந்து விட்டுப் போனதிலிருந்து அவளுடைய மாளிகை வாசலில் அடிக்கடி கூட்டம் சேர ஆரம்பித்தது. அநேகமாகச் சிவகாமியை மறந்து விட்டிருந்த வாதாபி மக்கள் அப்போது தங்களுக்கு நேர்ந்திருக்கும் பெரும் விபத்துக்குக் காரணம் சிவகாமிதான் என்பதை நினைவுகூர்ந்து அவள் வசித்த வீதியில் கூட்டம் போடவும், அவளைப் பற்றி இகழ்ந்து பேசவும் ஏசவும் ஆரம்பித்தார்கள். கூட்டத்தின் இரைச்சலைக் கேட்டுச் சிவகாமி அதன் காரணத்தை அறிந்து கொள்ளுவதற்காகப் பலகணியின் வழியாக எட்டிப் பார்த்த போது அந்த ஜனங்கள் 'ஓஹோ' என்று சப்தமிட்டும் சிரித்தும் கோரணி காட்டியும் ஏளனம் செய்தார்கள்.

விஷயம் இன்னதென்பதை ஏற்கெனவேயே அறிந்திருந்த சிவகாமியின் தோழிப் பெண் அவளைப் பலகணியின் பக்கத்திலிருந்து பலாத்காரமாக இழுத்துச் சென்றாள். அப்போது மறுபடியும் அந்த ஜனக் கூட்டம் விகாரமாகக் கூச்சலிட்டுக் கேலிச் சிரிப்பு சிரித்த சப்தம் சிவகாமியின் காதில் விழுந்தது. அவளுடைய இருதயத்தில் வெகு காலத்துக்கு முன்பு எரிந்து அடங்கி மேலே சாம்பல் பூத்துக் கிடந்த குரோதத் தீயானது அந்த நிமிஷத்தில் மறுபடியும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. 'மாமல்லர் மட்டும் உண்மையான வீரமுள்ள ஆண் மகனாயிருந்தால் நான் பேதைமையினால் எழுதிய ஓலையைக் கிழித்து எறிந்து விட்டு இந்த நகரத்துக்குள்ளே படையுடன் பிரவேசிப்பார்; என்னுடைய பழைய சபதத்தை நிறைவேற்றுவார்; இந்த நகரத்தை நரகமாக்கி நாகரிகம் சிறிதுமற்ற மிருகப் பிராயமான இந்த மக்கள் ஓலமிட்டு அலறி ஓடும்படிச் செய்வார். அந்தக் காட்சியைப் பார்த்தால்தான் என் உள்ளம் குளிரும்!" என்று எண்ணிக் கொண்டாள். அந்தக் காட்சியைத் தன் மானசிக திருஷ்டியில் பார்த்து மகிழவும் தொடங்கினாள்.

நேரமாக ஆகத் தெருவில் கூட்டமும் கூச்சலும் அதிகமாகிக் கொண்டு வந்தன. கூட்டத்திலே இருந்த சில உற்சாக புருஷர்கள் வீட்டின் கூரை மீதும் வாசற்கதவின் மீதும் கல்லை விட்டு எறிந்தார்கள். கல், கதவின் மேல் விழுந்து படார் சப்தம் உண்டாக்கிய போது கூட்டத்தில் கேலிச் சிரிப்பு பீறிட்டு எழுந்தது. அன்று மாலை திடீரென்று அப்பெருங் கூட்டத்தில் ஒருகணம் நிசப்தம் ஏற்பட்டது. அந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு பறைகொட்டும் சப்தம் கேட்டது. பறைச் சப்தம் நின்றதும் இடி முழக்கம் போன்ற ஒரு குரல், "சக்கரவர்த்தி கோட்டைக்குள் வந்து விட்டார்! பல்லவர் படையைத் துவம்ஸம் செய்து வெற்றிக் கொடி நாட்டப் போகிறார். எல்லாரும் அவரவர்கள் வீட்டுக்குப் போங்கள். ஆயுதம் எடுக்கத் தெரிந்த ஆண் பிள்ளைகள் அனைவரும் அரண்மனை வாசலுக்கு வந்து சேருங்கள்!" என்று முழங்கிற்று.

உடனே அந்த ஜனக் கூட்டத்தில், "வாதாபிச் சக்கரவர்த்தி வாழ்க! பல்லவ மாமல்லன் நாசமடைக!" என்று குதூகல கோஷம் எழுந்தது. கொம்மாளமாக இரைச்சல் போட்டுக் கொண்டு ஜனங்கள் கலைய ஆரம்பித்தார்கள். ஏதோ இந்திரஜாலத்தினால் நடந்தது போல் கண்மூடித் திறக்கும் நேரத்தில் சிவகாமியின் மாளிகை வாசலில் ஒருவரும் இல்லாமற்போயினர். அவ்விதம் வெறுமையான இடத்தில் சிறிது நேரத்துக்கெல்லாம் சளுக்க வீரர்கள் இருபது பேர் வந்து நின்றார்கள். சிவகாமியின் மாளிகை வாசலையும் வீதியின் இருபுறங்களையும் அவர்கள் காவல் புரியத் தொடங்கினார்கள்.

சிவகாமி தன்னுடைய தோழிப் பெண்ணின் மூலம் மேற்கூறிய சம்பவங்களுக்குக் காரணங்களை அறிந்த போது அவளுடைய மனம் ஒருவாறு நிம்மதியடைந்தது. புலிகேசி உயிர் பிழைத்துக் கோட்டைக்குள் வந்து விட்டபடியால், இனி யுத்தந்தான்; சந்தேகமில்லை. தன்னுடைய சபதம் நிறைவேறும் காட்சியைக் கண்ணால் பார்த்தால் போதும்; மற்றபடி எது எப்படியானாலும் ஆகிவிட்டுப் போகட்டும். மூர்க்க வாதாபி ஜனங்களாலோ ராட்சஸப் புலிகேசியினாலோ தனக்கு ஏதாவது அபாயம் நேரக்கூடும். நேர்ந்தால் நேரட்டும்; அதை எதிர்பார்த்துச் சிவகாமி கையில் கத்தி ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தாள். தன்னுடைய கற்புக்குப் பங்கம் வரும்படியான காரியம் ஏற்படுவதாயிருந்தால் பிராணத் தியாகம் செய்து கொள்வதென்று வெகு காலமாக அவள் உறுதிகொண்டிருந்தாள். கையிலே கத்தி இருக்கிறது; கொல்லைப்புறத்துக் கிணறு இருக்கவே இருக்கிறது!

பல்லவ சைனியம் வாதாபிக் கோட்டையைத் தாக்க ஆரம்பித்த அன்று சாயங்காலம், அந்த நகருக்குள்ளே சூறைக் காற்றும் பெருமழையும் சேர்ந்து அடிக்கும் போது நடுக்கடலில் என்னவிதமான பயங்கர ஓசை எழுமோ அம்மாதிரி ஓசை எழுந்தது. நூற்றுக்கணக்கான யுத்த பேரிகைகளின் முழக்கம், ஆயிரக்கணக்கான தாரை, தப்பட்டை, சங்கம் முதலியவைகளின் ஒலி, பதினாயிரக்கணக்கான வீரர்களின் ஜயகோஷம், இலட்சக்கணக்கான மக்களின் ஆரவார இரைச்சல்; இந்த ஓசைகளெல்லாம் கோட்டை மதில்களிலும் மண்டபங்கள் கோபுரங்களிலும் மோதும் போது எழுந்த பிரதித்வனி எல்லாம் சேர்ந்து இன்னதென்று விவரித்துச் சொல்ல முடியாத பேரொலியாகத் திரண்டு எழுந்து கேட்போரின் உடல் நரம்புகளை யெல்லாம் முறுக்கிவிட்டு உள்ளங்களை வெறிகொள்ளச் செய்தன. அன்று சூரியாஸ்தமன நேரத்தில் அந்த மாநகரில் வாழ்ந்த பத்து லட்சம் ஜனங்களும் ஏறக்குறையப் பித்துப் பிடித்தவர்கள் போலாகித் தாம் செய்யும் காரியம் இன்னதென்று தெரியாமல் செய்கிறவர்களும், தாம் பேசுவது இன்னதென்று தெரியாமல் பேசுகிறவர்களும் ஆனார்கள். இத்தகைய வெறி சிவகாமியையும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகவே ஆட்கொண்டது.

ஒருகண நேரமாவது அவளால் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆனால், வீட்டை விட்டு வெளியே போவதென்பது அவளுக்கு இயலாத காரியம். சிறிது நேரம் வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்தாள். பிறகு பலகணியின் வழியாக வாசலில் எட்டிப் பார்த்தாள். ஜனங்கள் தலைதெறிக்கக் கிழக்கேயிருந்து மேற்கேயும் மேற்கேயிருந்து கிழக்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வீட்டின் மேல் மச்சில் ஏறிப் பார்த்தாள். நகரின் அலங்கோலக் காட்சி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது. அவளுடைய மாளிகையின் பின்புறத்தில் கோட்டை மதில் வெகு சமீபத்தில் இருந்தபடியால் அதன் மீது ஏறிப் போருக்கு ஆயத்தமாக நின்ற வீரர்களின் காட்சியை நன்றாகப் பார்க்க முடிந்தது. மற்றும் வீதிகளில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த போர் வீரர் படைகளையும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த ஜனங்களின் காட்சியையும் பார்க்க முடிந்தது.

மறுபடியும் கீழிறங்கி அவளுடைய தோழிப் பெண்ணைத் தெரு வாசலில் போய் விவரம் அறிந்து கொண்டு வரும்படி ஏவினாள். அவ்விதமே தோழி வெளியே போய் விட்டு வந்து அன்றிரவு பல்லவர் படை கோட்டையைத் தாக்கப் போவதாகச் செய்தி கொண்டு வந்தாள். அது மட்டுமல்ல; தான் அன்றிரவு சிவகாமிக்குத் துணையாக இருக்க முடியாதென்றும், யுத்த நிலைமை என்ன ஆகுமோ என்ற பீதி ஏற்பட்டிருப்பதால் தன்னுடைய சொந்த வீட்டுக்குப் போய் உறவினரோடு இருக்க விரும்புவதாகவும் கூறினாள். சிவகாமி அவளை எவ்வளவு கேட்டுக் கொண்டும் பயனில்லை. மற்றொரு வேலைக்காரியையும் அழைத்துக் கொண்டு அவள் போய் விட்டாள். அவ்விருவரும் போகும் போது மாளிகையின் கதவு திறந்த சமயம், வாசலில் காவல் புரிந்த வீரர்கள் பொறுமை இழந்து தாங்கள் மட்டும் எதற்காக அங்கு நின்று அந்த வீட்டைக் காவல் புரிய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தது சிவகாமியின் காதிலே விழுந்தது. 'கதவைக் கெட்டியாகச் சாத்தித் தாழ்கள் எல்லாவற்றையும் போட்டாள். அந்த மாளிகையின் வாசற் கதவுகள், கோபுர வாசல் கதவுகளைப் போன்ற பெரிய கதவுகள். ஒரு கதவில் திட்டி வாசல் ஒன்று இருந்தது. அதாவது ஒரு பெரிய மனிதர் உள்ளே நுழையக் கூடிய அளவு துவாரமும் அதற்கு ஒரு தனிக் கதவும் தாழ்ப்பாளும் இருந்தன. தோழியும் வேலைக்காரியும் அந்தத் திட்டி வாசல் வழியாகத்தான் வெளியே சென்றார்கள்.

சிவகாமி வாதாபியில் வசித்த காலத்தில் சாதாரணமாகவே சொற்ப நேரந்தான் தூங்குவது வழக்கம். அன்றிரவு அவள் கண்ணை மூடவில்லை; 'வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்ன நடக்கப் போகிறது?' என்று அறிந்து கொள்ள அவளுடைய உள்ளமும் உடம்பின் நரம்புகளும் துடித்துக் கொண்டிருந்தன. அடிக்கடி பெருமூச்சு எழுந்தது, நெஞ்சு 'தடக் தடக்' என்று அடித்துக் கொண்டது; அடி வயிற்றை என்னவோ செய்தது. நடுநிசி ஆன போது, நகரின் பல இடங்களில் வீடுகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்ததைச் சிவகாமி தன் மாளிகையின் மேல் மாடியிலிருந்து பார்த்தாள். ஒன்பது வருஷத்துக்கு முன்னால் தான் செய்த சபதம் நிறைவேற ஆரம்பித்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்டாள். அவளுடைய வாழ்க்கையில் அதுவரையில் அவள் அனுபவித்திராத திருப்தி அவள் மனத்தில் அப்போது ஏற்பட்டது. அதே சமயத்தில் காரணம் தெரியாத ஒருவித மனவேதனையும் உண்டாயிற்று.

நகரிலே நாற்புறமும் தீ பரவி வந்தது. அன்று சாயங்காலம் அந்நகரில் ஏற்பட்டிருந்த மகத்தான ஆரவாரம் இப்போது வேறு ஸ்வரூபத்தை அடைந்தது. குதூகலமான ஜயகோஷங்கள் அலறலும் ஓலமுமாக மாறின. மக்களின் பெருமித வீர நடை யானது பயப்பிராந்தி கொண்ட ஓட்டமாக மாறியது. வர வர ஸ்திரீகள், குழந்தைகளின் ஓலமும் ஓட்டமும் அதிகமாகி வந்தன. இதையெல்லாம் பார்க்கச் சிவகாமியின் மனத்தில் திருப்தி மறைந்து வேதனை அதிகமாயிற்று. கடைசியில் அந்தக் கோரக் காட்சிகளைப் பார்க்கச் சகியாமல் மேல் மாடியிலிருந்து கீழே இறங்கினாள். 'ஆகா! இது என்ன நம்மால் விளைந்த விபரீதம்? இதன் முடிவுதான் என்ன? இந்தப் பெரிய நகரம் முழுவதும் உண்மையாகவே எரிந்து அழிந்து விடப் போகிறதா? இதிலே வசிக்கும் இத்தனை இலட்சக்கணக்கான மக்களும் பெண்களும் குழந்தைகளும் செத்து மடியப் போகிறார்களா? ஐயோ! இது என்ன? என்னுடைய கதி என்ன ஆகப் போகிறது?' என்று அவள் உள்ளத்தில் ஆயிரக்கணக்கான சிந்தனை அலைகள் கொந்தளித்து எழுந்து உடனே மறைந்தன. அப்புறம் மேல் மாடிக்கே போக மனமில்லாமல் வீட்டுக் கூடத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அலைந்து அலைந்து கால்கள் களைத்து வலி எடுத்துப் போயின. வெறுந்தரையில் குப்புறப் படுத்துக் கொண்டாள். அழுகை வந்து கண்ணீர் பெருகினால் தேவலையென்று தோன்றியது. ஆனால், அழுகையும் வரவில்லை; கண்ணீர் சுரக்கும் இடத்தில் ஏதோ அடைத்துக் கொண்டு கண்ணீர் வரவொட்டாமல் செய்து விட்டது. பொழுது விடியும் சமயம் ஆயிற்று. முற்றத்தில் உதய நேரத்துக்குரிய மங்கலான வெளிச்சம் காணப்பட்டது. அச்சமயம் அந்த வீட்டு வாசலில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது.

சட்டென்று சிவகாமியின் மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. ஒருவேளை மாமல்லர்தான் வருகிறாரோ? தன் சபதத்தை நிறைவேற்றித் தன்னை அழைத்துக் கொண்டு போவதற்காக வருகிறாரோ? அப்படியானால் ரொம்ப நல்லது. இந்த மாநகரின் படுநாசத்தை இப்போதாவது தடுக்கலாம். அவர் காலில் விழுந்து, "பிரபு! போதும் நிறுத்துங்கள்!" என்று கெஞ்சலாம். இப்படி எண்ணியவளாய்ச் சிவகாமி பரபரவென்று எழுந்து ஓடினாள். கதவண்டை சென்றதும் மனம் தயங்கிற்று. எல்லாவற்றிற்கும் திட்டி வாசற் கதவைத் திறந்து பார்க்கலாம் என்று திறந்தாள். அங்கே தோன்றிய காட்சி அவளைத் திகைத்துப் பீதியடையச் செய்தது. மாமல்லரையோ பல்லவ வீரர்களையோ அங்கே காணவில்லை. கோபங்கொண்ட வாதாபி ஜனக் கூட்டந்தான் காணப்பட்டது. அந்தக் கூட்டத்தாரில் சிலர் வீட்டைக் காவல் புரிந்த சளுக்க வீரர்களுடன் ஏதோ வாதாடிக் கொண்டிருந்தார்கள்.

சிவகாமியின் முகம் திட்டி வாசலின் மூலம் தெரிந்ததும் அந்த ஜனக் கூட்டத்தில் பல நூறு சிறுத்தைப் புலிகளின் உறுமல் சப்தம் போன்ற ரோமம் சிலிர்க்கச் செய்யும் சப்தம் உண்டாயிற்று. கூட்டத்திலே பலர் காவல் புரிந்த வீரர்களைத் தள்ளிக் கொண்டு வீட்டு வாசற்படியை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள். சிவகாமிக்கு நிலைமை ஒருவாறு புலப்பட்டது. சட்டென்று திட்டி வாசலை மூடினாள். அவசரத்தினாலும் பயத்தினாலும் அதைத் தாழிட மறந்து போனாள். உடனே அங்கிருந்து மாளிகையின் பின்கட்டை நோக்கி விரைந்து சென்றாள். திட்டமான யோசனையுடன் செல்லவில்லை. அந்தச் சமயம் அந்த மூர்க்கங்கொண்ட ஜனங்களிடமிருந்து தப்ப வேண்டுமென்று இயற்கையாகத் தோன்றிய எண்ணம் அவளுடைய கால்களுக்குப் பலத்தை அளித்து வீட்டின் பின்கட்டை நோக்கி விரைந்து ஓடச் செய்தது.

வீட்டுப் பின்கட்டின் வாசற்படியைத் தாண்டித் தாழ்வாரத்தை அடைந்ததும், உதய நேரத்தின் மங்கிய வெளிச்சத்தில் அங்கு ஓர் உருவம் கபாலங்களையும் எலும்புகளையும் மலையாகப் பூண்ட கோரமான ஸ்திரீ உருவம் நிற்பதைச் சிவகாமி பார்த்தாள். அவளுடைய உடம்பில் இரத்த ஓட்டம் ஒரு நிமிஷம் நின்று விட்டது. தேகமாத்தியந்தம் ரோமங்கள் குத்திட்டு நின்றன. சிவகாமியைப் பார்த்ததும் அந்தப் பெண் பேய் கலகலவென்று சிரித்தது. பிறகு, 'அடி அழகி சிவகாமி! கலைவாணி சிவகாமி! மாமல்லனையும் நாகநந்தியையும் மோக வலைக்கு உள்ளாக்கிய நீலி! உன் அழகெல்லாம் இப்போது என்ன செய்யும்? உன் கண் மயக்கும், முகமினுக்கும் உன்னை இப்போது காப்பாற்றுமா?" என்று அந்தப் பெண் பேய் கேட்டு விட்டு மறுபடியும் சிரித்தது. "அடி சிவகாமி! நானும் உன்னைப் போல் ஒரு சமயம் கண்டவர் மயங்கும் மோகினியாகத்தான் இருந்தேன். உன்னாலே இந்தக் கதிக்கு ஆளானேன். அதற்குப் பழிவாங்கும் சமயத்திற்காக இத்தனை காலம் காத்திருந்தேனடி!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவண்ணம் காபாலிகை தன் மடியில் செருகியிருந்த கத்தியைச் சட்டென்று எடுத்து ஓங்கினாள்.

சிவகாமிக்கு அப்போது சிந்தனை செய்யும் சக்தியோ, தப்பித்துக் கொள்ள யுக்தி செய்யும் சக்தியோ, சிறிதும் இல்லை. அவள் உள்ளம் ஸ்தம்பித்துப் பிரமை கொண்டிருந்தது. எனினும், எத்தகைய ஆபத்திலிருந்தும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யும் இயற்கைச் சுபாவத்தை ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவன் அளித்திருக்கிறான் அல்லவா? அந்த சுபாவம் காரணமாகச் சிவகாமி ஓர் அடி பின்னால் நகர்ந்தாள். அந்தக் கணத்தில் காபாலிகைக்குப் பின்புறத்தில் அவள் அறியாமல் ஓர் உருவம் திடீரென்று தோன்றியது. பின்கட்டின் வாசற்படி வழியாக நுழைந்த அந்த உருவம் காபாலிகையின் கத்தி பிடித்த கையைச் சட்டென்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

அந்தப் பிடியின் பலத்தினால் காபாலிகையின் கைவிரல்கள் விரிந்து கத்தி தரையில் விழுந்தது. அளவில்லாத குரோதத்துடன் காபாலிகை திரும்பிப் பார்த்தாள். "அட பாவி! நல்ல சமயத்தில் வந்து விட்டாயா?" என்றாள். அப்படி அதிசயமாகத் திடீரென்று தோன்றித் தன் உயிரைக் காத்த உருவத்தைச் சிவகாமியும் அப்போது உற்றுப் பார்த்தாள். அந்த உருவம் வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசிதான் என்று தெரிந்த போது சிவகாமிக்கு உண்டான வியப்பும் திகைப்பும் எல்லையற்றவையாயின. ஆகா! சக்கரவர்த்தி செத்துப் போனதாகச் சொன்னார்களே! ஒருவேளை அவருடைய ஆவி, வடிவமா? அல்லது, அல்லது.... முன்னொரு சமயம் செய்ததைப் போல் ஒருவேளை பிக்ஷுதான் சக்கரவர்த்தி வேஷம் பூண்டு வந்திருக்கிறாரோ?