அலை ஓசை/புயல்/ரஜினிபூர் பைத்தியக்காரி

விக்கிமூலம் இலிருந்து

போலீஸார் வந்த பிறகு சற்று நேரம் வாசலிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். சில நிமிஷங்களுக்கெல்லாம் ராகவனும் ஒரு போலீஸ் உத்தியோகஸ்தரும் உள்ளே வந்தார்கள். ராகவன் தாரிணியைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பெண்மணிதான் " என்று சொன்னான். "முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது, ரொம்பவும் பயந்து போயிருக்கிறார். பயப்படக் காரணம் இல்லையென்று நான் சொல்லவில்லை. இருந்தாலும்.. கையிலே இரத்தக் கறையைக் கூட இன்னும் கழுவவில்லை போலிருக்கிறதே!" என்று போலீஸ் அதிகாரி கூறினார். "கழுவலாமோ, கூடாதோ என்று சந்தேகமாயிருந்தது. நீங்கள் வருவதற்குத்தான் காத்திருந்தேன்" என்றாள் தாரிணி. "குரல் எப்படி நடுங்குகிறது பார்த்தீர்களா? இந்தப் பெண்மணியை உத்தேசித்துத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரே கார் ஓட்டிக்கொண்டு வரவில்லை. எப்படியாவது இவருடைய பெயரைச் சம்பந்தப்படுத்தாமல் இருந்தால் நல்லது." "என்னால் முடிந்த வரையில் பார்க்கிறேன். இவருடைய விலாசம் தெரியுமல்லவா? ஒருவேளை இவருடைய சாட்சியம் அவசியம் தேவையாயிருந்தால்...?" "தேவையாயிருந்தால், எப்போது சொன்னாலும் நானே அழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் பார்த்துக்கொண்டால் நல்லது." "பார்க்கலாம்! நீ ஒன்றும் பயப்படாதே, அம்மா! போய்க் கைகளைச் சுத்தமாய் அலம்பிக்கொள். இந்த மாதிரிக் காரியங்களில் ஸ்திரீகள் தலையிடவே கூடாது. இது உனக்கு ஒரு பாடமாயிருக்கட்டும் இந்தச் சம்பவத்தைப்பற்றி யாரிடமும் பேசாதே! உனக்குத் தெரியும் என்பதாகவே காட்டிக் கொள்ளாதே!"

இவ்விதம் தாரிணியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போலீஸ் அதிகாரி ராகவனைப் பார்த்து, "நாம் போகலாம் வாருங்கள்! இப்போதே ஒருவேளை, 'டூலேட்' ஆகிப் போயிருக்கலாம்!" என்று சொன்னார். "சீதா! நான் போய் வருகிறேன் தாரிணி இன்றைக்கு இங்கேயே இருக்கட்டும்!" என்றான். போலீஸ் உத்தியோகஸ்தர் தாரிணியிடம் பேசியதும் சீதாவுக்கு அரை குறையாகத்தான் புரிந்தது. தாரிணியை மட்டும் காப்பாற்றிவிட்டுத் தன்னுடைய கணவன் ஏதோ ஆபத்துக்கு உட்படப் போவதாக அவளுக்குத் தோன்றியது. "எங்கே போகப் போகிறீர்கள்? நானும் உங்களுடன் வருகிறேன்!" என்று நடுங்கிய குரலில் கூறினாள். போலீஸ் உத்தியோகஸ்தர் இதற்குள் அவளுடைய பயத்துக்குக் காரணத்தைத் தெரிந்து கொண்டார். "இவர்தான் உங்கள் மனைவியா...? பயப்பட வேண்டாம் அம்மா! உன் புருஷனைக் கைது செய்து கொண்டு போகவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு வாக்குமூலம் எழுதி வைக்க வேண்டும் அவ்வளவுதான். அரை மணி நேரத்தில் திரும்பி வந்து விடுவார்!" என்றார். அது உண்மைதானா என்று அறிந்துகொள்ள வேண்டிச் சீதா ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவன் சிறிது முக மலர்ச்சியுடனேயே, "ஆமாம், சீதா! எனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. நானும் சூரியாவும் அரை மணியில் திரும்பி வந்து விடுவோம். தாரிணி! சீதாவிடம் எல்லாம் சொல்லிவிடு. அவள் வீண் பீதி அடைந்திருக்கிறாள்!" என்று சொல்லிப் போலீஸ் அதிகாரியைத் தொடர்ந்தான்.

சில நிமிஷத்துக்கெல்லாம் வாசலிலிருந்து மோட்டாரும் மோட்டார் சைக்கிளும் புறப்பட்டுச் சென்றன. சீதா வாசற் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்தாள். "இனிமேல் நான் இந்தக் காரில் ஏறவே மாட்டேன். என் குழந்தையையும் ஏறவிடமாட்டேன். காரை உடனே விற்றுவிட்டு வேறு வாங்க வேண்டியதுதான்" என்றாள். "ஆமாம்; இந்தக் காரில் என்னை ஏறச் சொன்னால் கூட இனிமேல் ஏறமாட்டேன். நீ இவ்வளவு தைரியமாயிருப்பதே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றாள் தாரிணி. "என் மாமியார் இந்தச் சமயம் இங்கே இருந்திருந்தால் ஒரே ரகளையாகப் போயிருக்கும். அவருக்கு வேறே வைத்தியம் செய்யும்படி ஆகியிருக்கும். நல்லவேளையாகக் குழந்தை வஸந்தியும் தூங்கிப் போய்விட்டாள்." "சீதா! உன் குழந்தையைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது. முதலில் கைகளைக் கழுவிக் கொள்கிறேன். கை அலம்புவது மட்டும் என்ன? ஸ்நானமே செய்தாலும் நல்லது தான். குழாய்த் தண்ணீரில் ஸ்நானம் செய்தால் மட்டும் போதாது. கங்கைக்குப் போய் ஸ்நானம் செய்ய வேண்டும்!" என்று சொன்னாள். "இப்போதைக்குக் குழாயில் ஸ்நானம் செய்து வையுங்கள். கங்கா ஸ்நானம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என்று சீதா சொல்லி, வீட்டின் முன்புறத்தில் இருந்த ஸ்நான அறைக்கு அழைத்துச் சென்றாள். வீட்டின் பின்பக்கம் போவதற்கே அவளுக்குத் தைரியம் வரவில்லை.

ராகவனும் சூரியாவும் திரும்பி வந்தபோது சீதாவும் தாரிணியும் சமையலறையில் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களுக்கு இந்தக் காட்சி மிகவும் சந்தோஷம் அளித்தது. "பசியே இல்லை" என்று அவர்கள் சத்தியம் செய்துவிட்டு, "நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு ரொட்டி தயாரித்திருப்பதால் கொஞ்சம் சாப்பிடுகிறோம்" என்றார்கள். தாரிணி குளித்திருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களும் குளித்து வரச் சென்றார்கள். சூரியா கொல்லைப் பக்கத்து ஸ்நான அறைக்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்தான். "அத்தங்கா, ஸ்நான அறைக்கு எதிரே ஒரு அறை பூட்டிக் கிடக்கிறதே? அதில் என்ன இருக்கிறது? ஏதோ சத்தம் கேட்டது?" என்றான். சீதா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, "பெருச்சாளி ஓடியிருக்கும்" என்றாள். "இல்லை; உள்ளேயிருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது" என்றான் சூரியா. "ஒருவேளை பூனை பிராண்டியிருக்கும்" என்றாள் சீதா. "தாரிணி! ஸ்நான அறையில் உங்கள் கைக்குட்டையைப் போட்டுவிட்டு வந்தீர்கள் போலிருக்கிறது, ஒரே இரத்தக் கறையாயிருந்தது! அதை நான் நன்றாக அலம்பி உலர்த்தினேன்?" என்று சொன்னான் சூரியா. "இல்லையே! நான் போடவில்லையே!" என்று சொல்லித் தாரிணி சீதாவின் முகத்தைப் பார்த்தாள். சீதாவும் தாரிணியின் முகத்தைப் பார்த்தாள். "ஞாபக மறதியாய்ச் சொல்கிறீர்கள்?" என்றான் சூரியா. சீதா பேச்சை மாற்ற விரும்பி, "இந்தக் காரை விற்றுவிட வேண்டும்; தெரியுமா? இனிமேல் நான் இந்தக் காரில் ஏற மாட்டேன்" என்றாள். "நான் அப்போதே தீர்மானித்துவிட்டேன். நாளைக்கு முதல் காரியம் காரை விற்கப் போகிறேன்.. இரண்டாவது, ரிவால்வர் லைசென்ஸ் வாங்கப் போகிறேன். காலம் எப்படிக் கெட்டுப் போய்விட்டது! சாலையோடு போகிறவனைக் குத்திக் கொல்வது என்றால்?...அதுவும் இந்தப் புது டில்லியில்?" என்றான் ராகவன்.

பிறகு எல்லோரும் வட்டமான மேஜையைச் சுற்றிச் சாப்பிடுவதற்கு உட்கார்ந்தார்கள். "சீதா! உன் அம்மாஞ்சி இருக்கிறானே? அவன் மகா தைரியசாலி. காரிலே இருந்தபோது அவனுக்குக் கைகால் நடுங்கிக் கொண்டிருந்தது. கீழே இறங்கியதும் பேச்சுப் பிரமாதம்!" என்றான் ராகவன். "நான் பயப்பட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் உங்களைப்போல் தெருவில் ஒருவன் மரண காயம் பட்டுக் கிடக்கும்போது 'நமக்கென்ன' என்று போகமாட்டேன்?" என்றான் சூரியா. "போதும், போதும், இந்தப் பேச்சு! வேறு ஏதாவது பேசுங்கள்!" என்றாள் சீதா. "வேறு என்ன பேசுவது? நீதான் பேசேன்!" என்றான் ராகவன். "இவர்கள் இரண்டு பேரும் இத்தனை நாளாக ஏன் நம்முடைய வீட்டை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்று கேளுங்கள்." "எனக்கு ரொம்ப வேலை இருந்தது அத்தங்கா! மன்னித்துக் கொள்! இனிமேல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளைக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால்...?" "நீ வருவதில் எனக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும் சூரியா! நொண்டிச் சாக்குச் சொல்கிறாயா?" "அப்படிக் கேளுங்கள் நன்றாய்! சூரியா! நீ வருவதில் மாப்பிள்ளைக்கு எதற்காக ஆட்சேபம்? வேலையாம் வேலை! இந்த அக்காவைப் பார்க்கப் போவதற்கு மட்டும் வேலை ஒழிந்ததோ?"

"அத்தங்கா! இவரும் நானும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகையால் வேலை நிமித்தமாகவே நாங்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது." "அது என்ன கட்சியோ காட்சியோ எனக்குத் தெரியாது. நீங்கள் இரண்டு பேரும் இனிமேலாவது இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். "நான் வந்திருப்பேன், சீதா! உண்மைக் காரணத்தை இப்போது சொல்லி விடுகிறேன். உன் மாமியாருக்குப் பயந்து கொண்டுதான் வரவில்லை?" என்று தாரிணி கூறினாள். "என் மாமியாரைக் கண்டு, எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? நானே பயப்படுவதில்லையே? அவரைப் பற்றிச் சூரியா ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லியிருக்கிறான் போலிருக்கிறது! என் மாமியாரைப் போன்ற நல்ல மாமியாரே இந்தப் பூவுலகத்திலேயே காண முடியாது. பெற்ற பெண்ணுக்கு மேலாக என்னிடம் பிரியமாயிருக்கிறார்!" அந்தச் சமயம் சீதாவிடம் ராகவனுடைய அன்பு பூரணமடைந்தது. அன்பு மட்டுமா நன்றியுங்கூடத்தான். 'இப்போது என்ன சொல்கிறாய்?' என்ற பாவனையாகத் தாரிணியை ராகவன் பார்த்தான்; தாரிணியும் ராகவனைப் பார்த்தாள். அவர்கள் கண்களின் மூலமாகப் பேசிக்கொண்டதைச் சீதா கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அந்த நயன பாஷையின் பொருள் அவளுக்கு விளங்கியிராது. சாப்பிட்டு முடிந்து எல்லோரும் முன் அறைக்கு வந்ததற்கும் டெலிபோன் மணி அடித்ததற்கும் சரியாயிருந்தது. ராகவன் ரிஸீவரை எடுத்துக்கொண்டு பேசினான்.

"ஓகோ? உயிர் போய்விட்டதா? அடடா...'கத்திக் காயத்தினால் மரணம்' என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாரா! ரொம்ப சரி! யார்? வினாயகராவ் மதோங்கரா...உலகத்துக்கு ஒரு நஷ்டமுமில்லை!... ஆனாலும் கொலை, கொலைதானே? யாராயிருக்கும்? ஏதாவது ஊகம்.... ரஜினிபூர் பைத்தியக்காரியா?... கேள்விப்பட்டதில்லையே?... சரி சரி நான் பார்த்துக் கொள்கிறேன், ரொம்ப வந்தனம்!" டெலிபோன் ரிஸீவரை ராகவன் வைத்ததும் ஏககாலத்தில் மூன்று பேரும் "என்ன, என்ன?" என்று பரபரப்புடன் கேட்டார்கள். "அந்த விஷயமாகத்தான் சீதா பேசவே கூடாது என்கிறாளே?" "பரவாயில்லை; சொல்லுங்கள் சாப்பிடும்போது அந்தப் பேச்சு வேண்டாம் என்று சொன்னேன்" என்றாள் சீதா. "அப்படியானால் கேட்டுக்கொள் ஆஸ்பத்திரியில் நாங்கள் கொண்டு போய்விட்ட அரைமணிக்குள் உயிர் போய்விட்டதாம், கத்திக்குத்தினால் சாவு என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாராம். கொலையுண்டு செத்துப் போனவனின் பெயர் விநாயகராவ் மதோங்கர். ரஜினிபூரில், பழைய ரஜினிபூர் மகாராஜாவின் துர்மந்திரி என்று சொன்னேனே, அவன்தான். கொஞ்ச நாளாக இந்த ஊரில் இருந்தானாம். கிளப்பில் ரொம்பப் பேருக்கு அவனைத் தெரியுமாம்; குடித்துவிட்டு ரகளை செய்வானாம். ரஜினிபூர் பைத்தியக்காரி என்று பெயர் பெற்ற ஸ்திரீ அவனைச் சில நாளாக அடிக்கடி தொடர்ந்து போய் கொண்டிருந்தாளாம். போலீஸில் கூட மதோங்கர் புகார் செய்திருந்தானாம்.

ஏற்கெனவே ரஜினிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சித்தவளாம். இவனைக் கொன்றவளும் அவளாய்த்தான் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறதாம். போதுமா? எத்தனையோ துப்பறியும் கதைகள் படித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இந்த உண்மைச் சம்பவம் தோற்கடித்து விடுகிறதா, இல்லையா? ஏன் எல்லோரும் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள்? சீதா, உனக்கு துப்பறியும் கதைகள் ரொம்பப் பிடிக்குமோ?" ரஜினிபூர் பைத்தியக்காரி என்றதும் சீதாவும் தாரிணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு பேருடைய பார்வையும் பயங்கரத்தையும் பரிதாபத்தையும் வெளியிட்டன. சீதாவைக் கூப்பிட்டு ராகவன் குறிப்பாகக் கேட்டதும், "இந்த மாதிரி விஷயமெல்லாம் கதையோடு இருந்தால் நன்றாயிருக்கும்! உண்மையில் நடக்கக் கூடாது!" என்றாள். "எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? ரஜினிபூர் பைத்தியக்காரியைப் போல் இன்னும் பலர் தோன்ற வேண்டும். அப்போதுதான் நம் நாட்டுச் சுதேச ராஜாக்களுக்கும் அவர்களுடைய துர்மந்திரிகளுக்கும் புத்தி வரும்!" என்றான் சூரியா. "சுதேச ராஜாக்களிடம் உனக்கு என்னடா அப்பா, அவ்வளவு கோபம்?" என்றான் ராகவன்.

அவர்களுக்குள் விவாதம் நடந்தபோது சீதாவின் மனமெல்லாம் கொல்லைப்புறத்துப் பூட்டிய அறையிலே இருந்தது. 'ரஜினிபூர் பைத்தியக்காரி' என்பவள் அந்த வீட்டிலேயே அப்போது இருக்கிறாள்! தான் அதை அங்குள்ளவர்கள் யாரிடமாவது சொல்ல வேண்டுமோ? சொன்னால் என்ன விபரீதம் வருமோ? சொல்லாவிட்டால் என்ன விபரீதம் நேருமோ? தாரிணியின் சொந்தத் தாயாரோ அல்லது வளர்ப்புத் தாயாரோ அவள்! தன் தாயார் கொலைகாரி என்பது தாரிணிக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? ஒருவேளை தெரிந்தேயிருக்குமோ? அவளைப் பார்த்துத் தன் பெற்றோர்கள் யார் என்பதைத் தாரிணி தெரிந்து கொள்ள விரும்பினாள் அல்லவா? அதற்கு இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்குமா? தாரிணியின் தாயார், உண்மையில் அந்தப் பைத்தியக்காரிதான்! இப்படிப்பட்ட காரியம் செய்ய உத்தேசித்திருந்தபடியினால் தாரிணியின் மனம் நோகாமலிருக்கும் பொருட்டு வளர்ப்புத் தாயார் என்று பொய் சொல்லி யிருப்பாள்.... சட்டென்று இன்னொரு விஷயம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அந்தப் பைத்தியக்காரி தன்னிடமும் தன் தாயாரிடமும் எதற்காக அவ்வளவு அபிமானம் காட்டினாள்? எதற்காகத் தனக்கு ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்தாள்? இதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை சீதாவின் மனதில் மற்ற எல்லா எண்ணங்களையும் அடக்கிக் கொண்டு மேலெழுந்தது. அதோடு அந்தக் கொலைகாரி அளித்த ரத்தின மாலையை இனிமேல் அணிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணமும் உதித்தது.