பக்கம்:அங்கும் இங்கும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


இதோ என் கல்லூரி மாணவப் பருவம் நினைவிற்கு வருகிறது. ஆண்டு. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து எட்டு. நான் படித்தது சென்னை மாநிலக் கல்லூரியில். படித்த வகுப்பு இண்டர் மீடியட் அப்போது மாநிலக் கல்லூரியிலும் இண்டர் மீடியட் வகுப்பு உண்டு. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசினர் ஒரு குழுவை இந்தியாவிறகு அனுப்பி வைத்தனர். இந்தியாவில் பல நகரங்களுக்குச் சென்று, இந்தியாவிலுள்ள பல பெரியவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இந்தியர்களுக்கு எந்த அளவு தன்னாட்சி உரிமை கொடுக்கலாம் என்பதை அக்குழு பரிந்துரைக்க வேண்டும். இந்த ஆணையோடு வந்த குழுவிற்குப் பெயர் சைமன் குழு.

சைமன் குழு அமைக்கப்பட்டதும் பொங்கி யெழுந்தார் நாட்டின் தந்தை. உரிமைப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவர், மகாத்மா காந்தி. 'எங்கள் உரிமையைப் பறித்தது அநீதி, எவ்வளவு உரிமை கொடுக்கலாமென்று விசாரிக்க வருவது அவமானப்படுத்துவதாகும். ஆகவே சைமன் குழுவை பகிஷ்கரியுங்கள்' என்று கட்டளையிட்டார் காந்தியார். கட்டளையை நிறைவேற்ற துடித்தனர் நாட்டுப்பற்றுடையோர். பகிஷ்காரக் கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் நாடு முழுவதிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நிய அரசு சும்மா இருக்குமா ? கட்டவிழ்த்துவிட்டது அடக்குமுறையை. கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடைகள், அலைமேல் அலையாக வந்தன. கடல் பொங்கினும் கலங்காத ஜவகர்லால் நேரு, அலகாபாத்தில், சைமன் குழுவே திரும்பிப் போ என்று முழங்கிக்கொண்டு, தலைமை தாங்கிப் பகிஷ்கார ஊர்வலத்தை நடத்தினார். வேடிக்கையா பார்க்கும், ஞாயிறு மறையாத சாம்ராஜ்யம் ? நேரு கைது செய்யப்பட்டார்.

இச் செய்தி நாடு முழுவதும் பரவிற்று; விரைந்து பரவிற்று. சென்னைக்கும் வந்தது. மக்கள் கொதித்தனர்; மாணவர்கள்