திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதித் தலைவர்கள் (நீதிபதிகள் ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
நீர்நிலையில் பருகியோருள் முந்நூறு பேரை கிதியோன் தேர்ந்தெடுக்கிறார் (நீத 7:4-8). கலைஞர்: கிறிஸ்டியான் எட்வர்ட் பேச்சர். ஆண்டு: 1908. காப்பிடம்:நியூயார்க் பொது நூலகம்.

நீதித் தலைவர்கள் (The Book of Judges) [1][தொகு]

முன்னுரை


நீதித் தலைவர்கள் என்னும் இந்நூல் இஸ்ரயேலை கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றியதாகும். இக்காலக் கட்டத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்குத் தாம் தெரிந்துகொண்டோர் மூலமாக விடுதலை அளித்து அவர்களைப் பாதுகாத்து வந்தார். இவர்களுள் பெரும்பாலோர் வலிமைமிகு வீரர்களாகவும் படைத் தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர்.

இஸ்ரயேலரின் வாழ்வும் வெற்றியும் கடவுளிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைப் பொறுத்தே அமைந்திருந்தது என்பதையும் அவர்களது நம்பிக்கையின்மை அவர்களுக்கு அழிவையே கொணர்ந்தது என்பதையும் இந்நூல் வலியுறுத்திக் கூறுகின்றது. அவர்கள் இறைவனைக் கைவிட்டு அவதியுற்ற காலத்திலும் மனம்மாறி அவரிடம் திரும்பிவந்தால், அவர் தம் மக்களைத் தவறாது பாதுகாத்து அவர்களுக்கு விடுதலை அளிப்பார் என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.


நீதித் தலைவர்கள்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. யோசுவாவின் இறப்புவரை நிகழ்ந்தவை 1:1 - 2:10 364 - 366
2. இஸ்ரயேலின் நீதித் தலைவர்கள் 2:11 - 16:31 366 - 393
3. பல்வேறு நிகழ்ச்சிகள் 17:1 - 21:25 393 - 402

நீதித் தலைவர்கள்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 16 வரை

அதிகாரம் 1[தொகு]

அதோனி பெசக்கின்மீது இஸ்ரயேலின் வெற்றி[தொகு]


1 யோசுவா இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், "யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்?" என்று கேட்டனர்.


2 ஆண்டவர், "யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்" என்றார்.


3 யூதாவின் மக்கள் தம் சகோதரராகிய சிமியோனின் மக்களிடம், "எங்களுடன் எங்கள் நிலப்பகுதிக்குள் வாருங்கள். கானானியருக்கு எதிராக நாம் போரிடுவோம். நாங்களும் உங்கள் நிலப்பகுதிக்குள் உங்களுடன் வருவோம்" என்றனர். சிமியோனின் மக்கள் அவர்களுடன் சென்றனர்.


4 அவ்வாறே யூதா போரிடச் சென்றபொழுது ஆண்டவர் கானானியரையும் பெரிசியரையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் பெசக்கில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.
5 அதோனிபெசக்கைப் பெசக்கில் கண்டுபிடித்து, அவனை எதிர்த்துப் போரிட்டுக் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் வீழ்த்தினர்.


6 தப்பி ஓடிய அதோனிபெசக்கை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து, அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களைத் துண்டித்தனர்.


7 அப்பொழுது, அதோனிபெசக்கு, "கை, கால்களின் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்ட எழுபது அரசர்கள் என் உணவு மேசையிலிருந்து சிதறியவற்றைப் பொறுக்கினார்கள். நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார்" என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவன் அங்கே இறந்தான்.

யூதா குலம் எருசலேமையும் எபிரோனையும் கைப்பற்றல்[தொகு]


8 யூதாவின் மக்கள் எருசலேமுக்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாள்முனையால் மக்களை வெட்டிவீழ்த்தி, நகரை நெருப்புக்கு இரையாக்கினர்.
9 பின்னர் யூதாவின் மக்கள் மலைநாட்டிலும், நெகேபிலும், மலை அடிவாரங்களிலும் வாழும் கானானியருக்கு எதிராகப் போர்புரியச் சென்றனர்.
10 யூதாவின் மக்கள் 'கிரியத்து அர்பா' என்று முன்னர் அழைக்கப்பட்ட எபிரோனில் வாழ்ந்த கானானியருக்கு எதிராகச் சென்றனர் என்பதாகும். அவர்கள் சேசாய், அகிமான், தல்மாய் இனங்களைத் தோற்கடித்தனர்.

ஒத்னியேல் தெபீர் நகரக் கைப்பற்றல்[தொகு]


11 அங்கிருந்து தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றனர். தெபீரின் முன்னாள் பெயர் கிரியத்து-சேபேர் என்பதாகும்.
12 காலேபு, "கிரியத்து-சேபேரைத் தாக்கிக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாக அளிப்பேன்" என்றார்.
13 காலேபின் இளைய சகோதரனும், கெனாசின் மகனுமாகிய ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். எனவே காலேபு அவருக்குத் தம் மகள் அக்சாவை மனைவியாக அளித்தார்.
14 அவள் வந்தபோது, அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார்.[1] எனவே அவள் கழுதையைவிட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று அவளைக் கேட்டார்.
15 அவள் அவரிடம், "எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர். எனக்கு நீரூற்றுகளையும் தாரும்" என்றாள். எனவே காலேபு அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.

யூதா, பென்யமின் குலத்தாரின் வெற்றிகள்[தொகு]


16 மோசேயின் மாமனாரின் மக்களாகிய கேனியர், பேரீச்ச நகரிலிருந்து யூதா மக்களுடன், யூதா பாலைநிலத்திற்குச் சென்றனர். அது ஆராத்துக்குத் தெற்கே உள்ளது. அவர்கள் அங்குச் சென்று அங்கிருந்த மக்களுடன் வாழ்ந்தனர்.
17 யூதாவின் மக்கள் தம் சகோதரர் சிமியோனின் மக்களுடன் சென்றனர். அவர்கள் செப்பாத்தில் வாழும் கானானியரைக் கொன்று அந்நகரை முற்றிலும் அழித்தனர், நகரின் பெயரை ஒர்மா என்று அழைத்தனர்.
18 யூதாவின் மக்கள் காசாவையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் அஸ்கலோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் எக்ரோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் கைப்பற்றினர்.
19 ஆண்டவர் யூதாவின் மக்களுடன் இருந்தார். அவர்கள் மலைப்பகுதியை உரிமையாக்கிக் கொண்டனர். ஆனால் சமவெளியில் வாழ்ந்தவர்களை அவர்களால் விரட்ட முடியவில்லை. ஏனெனில் அவர்களிடம் இரும்புத் தேர்கள் இருந்தன.
20 ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விரட்டியடித்த காலேபுக்கு மோசே கூறியிருந்தவாறு, எபிரோன் கொடுக்கப்பட்டது.
21 எருசலேமில் வாழ்ந்த எபூசியரைப் பென்யமின் மக்கள் விரட்டவில்லை. இந்நாள்வரை எபூசியர் பென்யமின் மக்களுடன் எருசலேமில் வாழ்கின்றனர். [2]

எப்ராயிம், மனாசே குலங்கள் பெத்தேலைக் கைப்பற்றல்[தொகு]


22 யோசேப்பின் வீட்டார் பெத்தேலுக்கு எதிராகச் சென்றனர். ஆண்டவர் அவர்களுடன் இருந்தார்.
23 யோசேப்பின் வீட்டார் பெத்தேலை உளவு பார்த்தனர். இந்நகரின் முன்னாள் பெயர் 'லூசு' என்பதாகும்.
24 ஒற்றர்கள், ஓர் ஆள் நகரிலிருந்து வெளியே வருவதைக் கண்டனர். அவர்கள் அவனிடம், "தயவு செய்து நகரின் நுழைவாயிலைக் காட்டு. நாங்கள் உனக்குக் கருணை காட்டுவோம்" என்றனர்.
25 அவனும் அவர்களுக்கு நகரின் நுழைவாயிலைக் காட்டினான். அவர்கள் நகரை வாள்முனையில் தாக்கினர். ஆனால் அவர்கள் அந்த ஆளையும் அவன் குடும்பம் முழுவதையும் தப்பிச்செல்ல விட்டுவிட்டனர்.
26 அந்த ஆள் இத்தியரின் நாட்டுக்குச் சென்று ஒரு நகரைக் கட்டி எழுப்பினான். அதற்கு 'லூசு' என்று பெயரிட்டான். அப்பெயர் இந்நாள்வரை நிலவி வருகின்றது.

இஸ்ரயேலால் துரத்தியடிக்கப்படாத மக்கள்[தொகு]


27 பெத்சானையும், அதன் சிற்றூர்களையும், தனாக்கையும், அதன் சிற்றூர்களையும், தோர்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், இபிலயாம்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், மெகிதோ வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும் மனாசேயின் மக்கள் முறியடிக்கவில்லை. கானானியர் அந்நிலத்தில் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.
28 இஸ்ரயேலர் வலிமை பெற்றதும், கானானியரை அடிமை வேலைக்கு அமர்த்தினர். ஆனால் அவர்களை முற்றிலும் விரட்டவில்லை. [3]
29 எப்ராயிமின் மக்கள் கெசேரில் வாழ்ந்த கானானியரை விரட்டவில்லை. கானானியர் கெசேரில் அவர்களிடையே வாழ்ந்தனர். [4]
30 கிற்றரோன்வாழ் மக்களையோ, நகலோல் வாழ் மக்களையோ செபுலோனின் மக்கள் விரட்டவில்லை. கானானியர் அவர்களிடையே வாழ்ந்தனர். அவர்கள் அடிமைகள் ஆயினர்.
31 அக்கோ வாழ் மக்களையும், சீதோன், அக்லாபு, அக்சீபு, எல்பா, அப்பீகு, இரகோபு வாழ் மக்களையும் ஆசேரின் மக்கள் விரட்டவில்லை.
32 ஆசேரின் மக்கள் அந்நாட்டில் வாழும் கானானியரிடையே வாழ்கின்றனர். ஏனெனில் அவர்கள் அவர்களை விரட்டவில்லை.
33 நப்தலியின் மக்கள் பெத்சமேசுவாழ் மக்களையும், பெத்தனாத்து வாழ் மக்களையும் விரட்டவில்லை. அந்நாட்டில் வாழும் கானானியர், பெத்சமேசுவாழ் மக்கள், பெத்தனாத்துவாழ் மக்கள் ஆகியோரிடையே வாழ்கின்றனர்.
34 எமோரியர், தாண் மக்களைச் சமவெளிக்கு இறங்கவிடாமல் தடுத்து, மலைநோக்கிச் செல்லுமாறு நெருக்கினார்கள்.
35 எமோரியர் கர்கரேசிலும், அய்யலோனிலிருந்த சாலபிமிலும் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். யோசேப்பு வீட்டாரின் கை ஓங்கியது. எமோரியர் அடிமைகள் ஆயினர்.
36 எமோரியரின் எல்லை அக்ரபிம் ஏற்றத்திலிருந்து, சேலாவுக்கு வடக்கே மேல் நோக்கிச் சென்றது.

குறிப்புகள்

[1] 1:14 'அவர் அவளைத் தூண்டினார்' என்பதற்கு, எபிரேயத்தில் 'அவள் அவரைத் தூண்டினாள்' என்பது பாடம்.
[2] 1:21 = யோசு 15:63; 2 சாமு 5:6; 1 குறி 11:4.
[3] 1:27-28 = யோசு 17:11-13.
[4] 1:29 = யோசு 16:10.

அதிகாரம் 2[தொகு]

பொக்கிமில் ஆண்டவரின் தூதர்[தொகு]


1 ஆண்டவரின் தூதர் கில்காலிலிருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது: "நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் தந்தையருக்கு வாக்களித்த நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தேன். உங்களுடன் செய்துகொண்ட எனது உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன்.
2 'நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது. அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்தெறியுங்கள்' என்று கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? [1]
3 ஆகவே இப்பொழுது கூறுகின்றேன்: நான் அவர்களை உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடமாட்டேன். அவர்கள் உங்களுக்கு முன்னாக இருப்பார்கள். அவர்கள் தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருப்பார்கள்".
4 ஆண்டவரின் தூதர் இவ்வார்த்தைகளை எல்லா இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும், மக்கள் தங்கள் குரலை எழுப்பி அழுதனர்.
5 அவ்விடத்தின் பெயரைப் 'பொக்கிம்' என அழைத்தனர். அங்கு ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

யோசுவாவின் இறப்பு[தொகு]


6 யோசுவா இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிட, அவர்கள் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தாகிய நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளச் சென்றனர்.
7 யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும் யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த முதியோரின் நாள்களிலும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலருக்குச் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் அம்முதியோர் கண்டிருந்தனர்.
8 நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப் பத்து. [2]
9 காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில் அவரது உரிமை நிலத்தின் எல்லையிலிருந்த திம்னத்கெரேசில் அவரை அடக்கம் செய்தனர்.
10 அத்தலைமுறையினரும் தம் மூதாதையரைப்போல இறந்தனர். அவர்களுக்குப்பின் வந்த தலைமுறையினர் ஆண்டவரையோ அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்ததையோ அறிந்திருக்கவில்லை.

இஸ்ரயேல் ஆண்டவரை விட்டு விலகுதல்[தொகு]


11 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.
12 அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச்சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
13 அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.
14 இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால் அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற்போயிற்று.
15 ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர்.
16 ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச்செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர்.
17 ஆயினும் அவர்கள், தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை; ஏனெனில் அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து நடந்த நெறியைவிட்டு விரைவில் விலகினர்.
18 ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில் துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.
19 ஆனால் அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டகலவில்லை.
20 எனவே இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. அவர், "இம்மக்களின் மூதாதையர் கைக்கொள்ளுமாறு கட்டளையிட்ட என் உடன்படிக்கையை இவர்கள் மீறிவிட்டனர். என் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.
21 ஆகவே நானும் யோசுவா இறக்கும்பொழுதுவிட்டு வைத்த வேற்றினத்தாரை இவர்கள் முன்னிருந்து இனியும் விரட்டமாட்டேன்.
22 ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்ததுபோல், இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக்கொண்டு நான் சோதிக்கின்றேன்" என்றார்.
23 எனவே, ஆண்டவர் இந்த வேற்றினத்தாரை யோசுவாவிடம் ஒப்படைக்காமலும் விரைவில் விரட்டாமலும் விட்டு வைத்தார்.

குறிப்புகள்

[1] 2:2 = விப 34:12-13; இச 7:2-5.
[2] 2:9 = யோசு 19:49-50.


(தொடர்ச்சி): நீதித் தலைவர்கள்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை