அலை ஓசை/எரிமலை/இருண்ட மண்டபம்

விக்கிமூலம் இலிருந்து

பதினான்காம் அத்தியாயம் இருண்ட மண்டபம்

மறுநாள் மாலை நேரத்தில் சூரியா மீண்டும் வெள்ளி வீதியின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பெரிதும் கலக்கமடைந்திருந்தது. முதல் நாள் இரவு உறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன. அன்று காலை பதினோரு மணிக்குச் சூரியா சீதாவுக்கு டெலிபோன் செய்தான். இரண்டு தடவை டெலிபோனில் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தபடியால் கிடைக்கவில்லை. மூன்றாவது தடவை சீதாவின் குரல் கேட்டது. "சூரியா! சற்று முன்னால் நீ என்னைக் கூப்பிட்டுப் பேசினாயா?" என்றாள் சீதா. "இரண்டு தடவை கூப்பிட்டேன்; ஆனால் நீ கிடைக்கவில்லை?" என்றான் சூரியா. "அரைமணிக்கு முன்னால் டெலிபோன் மணி அடித்தது. நீயாகத் தான் இருக்கும் என்று எடுத்தேன். ஆனாலும் முன் ஜாக்கிரதையாக 'யார்?' என்று கேட்டேன். 'நான்தான் சூரியா! எப்போது சந்திக்கலாம்'? என்று குரல் கேட்டது. அது உன் குரல் இல்லையென்று சந்தேகித்து டெலிபோனை வைத்து விட்டேன். இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றாள் சீதா. "ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படி யார் கேட்டிருப்பார்கள்? எதற்காக? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே? ஒருவேளை உன் அகத்துக்காரர் தானோ என்னமோ?" என்றான் சூரியா. "இல்லை; என் அகத்துக்காரர் குரல் இல்லை; இருந்தால் எனக்கு உடனே தெரிந்திருக்கும். அது போனாற் போகட்டும்; நான் இன்றைக்கு உன்னை அவசியம் சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்கலாம்?" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள்.

"எங்கே சந்திக்கிறது? சந்தித்தால் உன் வீட்டில் தான் சந்திக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வருகிறேன்!" என்றான் சூரியா. "முடியாது! முடியாது! இன்றைக்கு என்னைப் பார்க்காவிட்டால் அப்புறம் என்னை உயிருடன் பார்க்க மாட்டாய். இங்கே நீ வரவேண்டியதும் இல்லை வந்தால் பெரிய ஆபத்தாக முடியும். நான் பழைய டில்லிக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்?" "இது என்ன யோசனை, சீதா! நீ தனியாகப் புறப்பட்டு வருவாயா? அவருக்குத் தெரியாமல் இருக்குமா? அப்படித் தெரிந்தால் ஏற்கெனவே வீண் சந்தேகப்படுகிறவர்..." "யார் என்ன சந்தேகப்பட்டாலும் சரிதான், இன்று சாயங்காலம் உன்னை நான் பார்த்தேயாக வேண்டும். இவருக்கு இன்றைக்குப் பார்ட்டி இருக்கிறது. நேரங்கழித்துத்தான் வருவார்? அதற்குள் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவேன்." "அப்படியானால் நானே அவ்விடம் வந்துவிடுகிறேன்?" "கூடவே கூடாது இந்த வீட்டுப் பக்கமே இனிமேல் நீ வரக்கூடாது. சாயங்காலம் ஆறு மணிக்கு நான் பழைய டில்லி வந்து சேருகிறேன். எனக்குப் பயம் ஒன்றுமில்லை உன்னை எங்கே பார்க்கிறது?" சூரியாவுக்கு, டவுன் ஹாலுக்குப் பின்னால் உள்ள மைதானந்தான் உடனே நினைவுக்கு வந்தது; அங்கே வரும்படியாகச் சொன்னான். சீதாவும் சரியென்று சொல்லி டெலி போனைக் கீழே வைத்துவிட்டாள். அது முதல் சூரியாவின் உள்ளம், 'சீதாவிடம் ஏன் அப்படி சொன்னோம்.பிடிவாதமாக வரக்கூடாது என்று சொல்லாமற் போனோமே இதனால் சீதாவுக்கு மேலும் என்ன கஷ்டம் நேருமோ என்னமோ?' என்று கவலைப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தபடி தாரிணியையும் மற்ற நண்பர்களையும் பார்த்தாக வேண்டும்! அதற்காகத் தான் இப்போது சூரியா வெள்ளி வீதியில் போய்க்கொண்டிருந்தான். தாரிணியைப் பற்றி எண்ணியதும் முதல் நாள் மூன்று பேர் தாரிணியைப் பிடித்துக் கொடுத்தால் லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது நினைவு வந்தது. இந்த ஞாபகம் சூரியாவின் மனக்குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது. 'இரத்த வாசல்' என்று பெயர் பெற்ற பயங்கர சரித்திர சம்பவங்கள் நடந்த இடத்தைத் தாண்டிச் சென்றதும், ஆஜானு பாகுவான முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் பச்சைச் சட்டைக்காரர் சூரியாவின் பேரில் மோதிக் கொண்டு, "மாப்கீஜீயே! குவாதே ஆஜம் ஜிந்தாபாத்!" என்றார். அந்த ஆசாமி வேண்டு மென்றே தன் பேரில் மோதிக்கொண்டு விஷமத்துக்காக மன்னிப்புக் கோருகிறார் என்று எண்ணிய சூரியா கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான். ஆசாமியின் கண் சிமிட்டலைக் கண்டதும் நேற்று போலீஸ் உடையில் காட்சி தந்தவரே தான் என்று அறிந்து, "இதென்ன இன்றைக்கு இந்த வேஷம்?" என்றான் சூரியா. "தினம் ஒரே வேஷம் போட்டா பிழைப்பது எப்படி? உன்னைக் கூட ஜாக்கிரதை செய்யும்படி தலைவர் சொன்னார். நீ நேற்று மாதிரியே இன்றும் இருக்கிறாயே?" என்றார் முஸ்லீம் லீக் தொண்டர். "அதனால் என்ன? இங்கே என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லுவதற்கில்லை; உன்னைப்பற்றி சி.ஐ.டி. விசாரணை பலமாயிருக்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது." "தலைவர் ஜாகையில் இருக்கிறாரா?" "இருக்கிறார், நீ எனக்கு ஐம்பது அடிக்குப் பின்னால் தொடர்ந்து வா! ரொம்ப நெருங்கியும் வராதே; ரொம்பத் தூரமாகவும் போய்விடாதே!" என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமி விடுவிடு என்று மேலே நடந்தார்.

அவர் கூறியபடியே சூரியா பின் தொடர்ந்தான். ஜும்மா மசூதியின் வலது பக்கத்து வீதியிலிருந்து குறுக்கே பிரிந்து சென்ற ஒரு குறுகிய வீதியில் முஸ்லீம் தொண்டர் பிரவேசித்தார். அந்த வீதியிலிருந்து மறுபடியும் பிரிந்து சென்ற சந்துகளின் வழியாக மடக்கி மடக்கித் திரும்பி நடந்தார். கடைசியில், சூரிய வெளிச்சம் என்பதையே அநேகமாகக் கண்டிராத ஒரு குறுகிய தெருவில், முஸ்லீம் லீக் கொடி பறந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றார். சூரியா வந்து சேர்ந்ததும் இருவரும் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். முன் முகப்பு அறையில் முஸ்லிம் மௌல்வி போல் காணப்பட்ட ஒருவர் குரான் ஷெரிப்பைப் போல் தோன்றிய அரபு எழுத்துப் புத்தகம் ஒன்றைத் தடவித் தடவிப் படித்துக் கொண்டிருந்தார். வந்தவர்களை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌல்வி சாகிப் மறுபடியும் புத்தகம் படிப்பதில் ஆழ்ந்தார். 'இந்த மௌல்வி யார்? எங்கேயோ பார்த்திருக்கிறோமே?' என்று சூரியா எண்ணமிடுவதற்குள்ளே முஸ்லிம் தொண்டர் அவனுடைய கையைப் பிடித்து, ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வைத்திருந்த பழைய புத்தக அலமாரிக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார். அலமாரிக்கும் சுவருக்கும் மத்தியில் ஒருவர் சிரமப்பட்டு நுழைய இடைவெளி இருந்தது. அங்கே சுவரில் ஒரு கதவும் இருந்தது. தொண்டர் அந்தக் கதவைத் திறந்து சூரியாவை உள்ளே பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். சூரியா ஒரு நிமிஷம் இருட்டில் தடுமாறினான். அடுத்த நிமிஷம் ஒரு மிருதுவான பெண்ணின் கரம் அவனுடைய கையைப் பற்றியது. தாரிணியின் குரல், "என்னுடன் வாருங்கள்" என்று அவனை அழைத்தது. தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு இருளில் நடந்து சென்ற போது சூரியாவுக்குப் பழைய காலத்து இராஜமாளிகைக்குள்ளே இரகசிய குகை வழியாகப் பிரவேசிப்பது போல் உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள் அவன் மனம் அதிசயமான ஆகாசக் கோட்டைகளை எல்லாம் நிர்மாணித்தது.

மிக மங்கலான வெளிச்சமுள்ள ஒரு பழைய காலத்து மண்டபத்துக்குள்ளே சூரியா வந்து சேர்ந்தான். அந்த மண்டபத்தின் கல் தூண்கள் பழமையைக் குறிப்பிட்டன. மேல் தளம் மிகவும் தாழ்வாக, ஆள் நின்றால் மேலே ஒரு அடிதான் பாக்கியிருக்கும்படி அமைந்திருந்தது. ஆனால் மண்டபம் விஸ்தாரமாக இருந்தது. நாதிர்ஷா, ஆமத்ஷா முதலிய கொடிய கொள்ளைக்காரர்களுக்கு டில்லி அடிக்கடி இரையாகி வந்த காலங்களில் வெள்ளி வீதியின் செல்வம் மிகுந்த வியாபாரிகள் சிலர் இந்த மண்டபத்தில் தங்களுடைய விலை உயர்ந்த பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்தி வந்தார்கள். அந்த இருண்ட மண்டபம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கு வழி தெரிந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பது மிகவும் பிரயாசையான காரியமாதலால், அதில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டன. அந்தப் பழைய இரகசிய மண்டபம் இப்போது புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைமை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கியது. மண்டபத்தில் அச்சமயம் சுமார் இருபது பேர் இருந்தார்கள். சிலர் தனியே படுத்துப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கும்பல் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் படுத்துத் தூங்கினார்கள். அவர்களுடைய உடைகள் விதவிதமாக இருந்தன. சுவரில் ஒரு ஆணியில் போலீஸ் தலைப்பாகையும் உடைகளும் தொங்குவதைச் சூரியா கவனித்தான். நேற்றுத் தன்னைத் தாரிணி இருக்குமிடம் அழைத்துச் சென்ற ஆசாமி அணிந்திருந்த உடை தான் அது என்பதையும் தெரிந்து கொண்டான்.

தனியே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஒருவரைத் தாரிணி சுட்டிக்காட்டி, "அதோ தலைவர்!" என்றாள். சூரியா அவரிடம் சென்று, "இன்குலாப் ஜிந்தாபாத்!" (புரட்சி வாழ்க) என்று கோஷித்தான். புது ஆசாமி வந்திருப்பதைக் கண்டதும் எல்லாரும் வந்து கும்பலாகத் தலைவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். "எங்கெங்கே போயிருந்தீர்? போன இடங்களில் எல்லாம் நாட்டின் நிலைமை எப்படியிருக்கிறது?" என்று சூரியாவைத் தலைவர் கேட்டார். "மத்திய மாகாணத்துக்கும், ஆந்திர தேசத்துக்கும் மதராசுக்கும் போயிருந்தேன். கிட்டத்தட்ட மதுரை வரையில் போனேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஜனங்களின் உள்ளம் எரிமலை போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்த நிமிஷமும் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கத் தொடங்கலாம். அந்த அக்கினிப் பிரவாகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி சாம்பலாகப் போகப் போகிறது." "உம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமென்ன? எதைக் கொண்டு சொல்லுகிறீர்?" "சென்னையில் பென்ஷன் வாங்கும் மாஜி சப் ஜட்ஜ் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஹிட்லர் ஜயித்து இந்தியாவுக்குள் பிரவேசிக்கப் போகும் தினத்தை நிர்ணயிக்க ஜோசிய சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். தேவபட்டணத்தில் திவான் பகதூர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நெடுங்காலம் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்திருந்தவர். 'ஜப்பான் காரன் வந்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம்' என்றார். எங்கெங்கே போனாலும் சாதாரண ஜனங்கள் 'இங்கிலீஷ்காரன் யுத்தத்தில் கட்டாயம் தோற்பான்; இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து போகும்' என்ற ஆசையுடன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்."

"ஆசையும் நம்பிக்கையும் இருந்து என்ன பிரயோஜனம்? பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதற்கும் சுயராஜ்யம் அமைப்பதற்கும் ஜனங்கள் எந்த விதத்தில் உதவி செய்யத் தயாராயிருக்கிறார்கள்? சென்ற வருஷத்தைப் போல இந்த ஆகஸ்டு 9-ந் தேதி தேசமெங்கும் புரட்சி இயக்கம் சுடர் விட்டு ஓங்கும் என்று எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லையே!" "அந்த விஷயம் தான் ஏமாற்றமாயிருக்கிறது ஜெர்மெனியோ, ஜப்பானோ படை யெடுத்து வந்து இந்தியாவுக்கு விடுதலை கிட்டும் என்று பெரும்பாலோர் ஆசைப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இன்னும் பலர் சுபாஷ் பாபு மலாய் நாட்டிலிருந்து சைன்யம் திரட்டிக் கொண்டு பர்மா வழியாக வரப் போகிறார் என்று எதிர் பார்க்கிறார்கள். சுதந்திரத்துக்காக நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் பெரும்பாலோர் மனதில் படவில்லை. பெயரும் செல்வாக்கும் இல்லாத தொண்டர்கள் சிலர் அங்கங்கே புரட்சிக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேல் போலீஸார் பிரயோகிக்கும் பயங்கர முறைகள் பொது ஜனங்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன. போலீஸ் பயங்கரத்துக்கு ஓர் உதாரணத்தை நானே பார்த்தேன்.." தேவபட்டணத்தில் வக்கீல் ஆத்மநாதய்யர் வீட்டில் ஆண்டு நிறைவுக் கலியாணத்தின் போது நடந்த போலீஸ் அட்டூழியத்தைப்பற்றிச் சூரியா விவரித்துக் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் புரட்சித் தலைவர் சொன்னார்: "மற்ற நாடுகளில் சுதந்திரப் போர் நடத்தியவர்கள் இதைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு பயங்கரங்களை அனுபவித்திருக்கிறார்கள். நீண்ட அன்னிய ஆட்சியின் பயனாக நம் ஜனங்கள் அடியோடு தீரத்தை இழந்து கோழைகளாகி விட்டார்கள். ஆனாலும் அங்கங்கே ஒரு சிலராவது பிடிவாதமாயிருக்கும் வரையில் நம்பிக்கை உண்டு. மக்களின் மனதிலுள்ள மனக்கசப்பு திடீரென்று ஒரு சமயம் பொங்கி எழாமற் போகாது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் வரையில் புரட்சித் தீ அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியா! உன்னுடைய வருகையைப்பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விசாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீ இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது. கல்கத்தாவுக்குப் போகிறாயா? அங்கே முக்கிய காரியம் இருக்கிறது?" என்றார் தலைவர். "ஓ! போகிறேன்!" என்றான் சூரியா. ஒருவேளை சீதா பிடிவாதம் பிடித்தால் அவளையும் கல்கத்தாவில் கொண்டுபோய் விடுவதற்குச் சௌகரியமாயிருக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். கல்கத்தாவில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தலைவர் அவனுக்கு விவரமாகக் கூறினார்.