18
சின்னத்தாயி, வண்டிக்காரன் மனைவி கறுப்பாயி முதலியவர்கள் ‘சரியான உருப்படிகள்’ என்று பட்டது அவருக்கு. எப்பவுமே உணர்ந்தது தானே ! அவர்களை விலைக்கு வாங்கப் பணமும் பெரிய மனுஷப் பட்டமும் இருந்தன, அவருக்கு தெம்பு தர சீமைச் சாராயம் பாட்டில் பாட்டிலாக இருந்தன. அப்புறமென்ன!
பாவம், சிவகாமி!......
ஆனால், ‘ஐயோ பாவம்' என்று இரங்க வேண்டிய நிலையிலா இருந்தாள் அவள். மணமான புதிதில் வதங்கிய மலர் மீண்டும் புதுச் சோபை பெற்றது. தணியாத அரிப்பு பெற்று ஏங்கிய சிவகாமிக்குக் கிடையாமல் கிடைத்த பாக்கியம் காத்தலிங்கம். அதனால், இன்பம் ஊற்றாகப் பொங்கிப் பிரவகித்து அவளையே ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.
சமுதாயத்திலே விபசாரம் ‘இல்லாத ஒரு சில]ரது’ வயிற்றுப் பசியை தணிப்பதற்காக அவர்கள் செய்கிற உடல் வியாபாரம் என்று சொல்லப்படுகிறது. தரித்திரத்தினால் சதை காட்டிப் பிழைக்க நேர்ந்துள்ள தொழிற்காரிபலருக்குப் பொருந்தலாம் இந்தப் பேச்சு, ஆனால் தொழில் செய்யும் யுவதிகளாக மாறியவர்களில் பணத்துக்காக உடல் விற்பவர்கள் போக ‘சும்மா, ஜாலிக்காக, ரொமான்ஸ், அட்வென்ச்சர் என்பவைகளுக்காக’ விளம்பரச்சரக்குகளாகும் தளுக்குக்காரிகளும் உண்டு. தொழிலாகப் பயிலப்பெறுகிற, இந்த வர்க்கத்தினால் மட்டும் தான் விபசாரம் வளர்கிறதா? கட்டிய கணவனும் குடும்பமும் சொத்தும் இருக்கிற ‘பூர்ஷ்வா’ இனத்திலே அழகி அம்புஜா அடுத்த வீட்டு அழகனுடன் கொஞ்சுவதன் காரணம் இல்லாத குறையினாலா?