பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரி

15

மலையின்மேல் ஏறுவதற்குக் குறுகிய வழிகள் சில இருந்தன. ஆனால் அந்தப் பெரும்படை முழுவதும் எளிதில் அவற்றின் வழியே ஏற இயலாது. அன்றியும், பகைப்படை அடிவாரத்துக்கு வந்துவிட்டதை அறிந்த பாரியின் படைவீரர்கள் மேலிருந்து கற்களை உருட்டினர்கள். அவை கீழேயிருந்த படைகளின் மேல் வந்து தாக்கின. மலையின்மேல் ஏறுவது எளிதாகத் தோற்றவில்லை. கீழிருந்து அம்பை எய்தார்கள். அம்புகளை யாரைக் குறிபார்த்து எய்வது? மேலுள்ள வீரர்கள் மறைந்து நின்று சிறிய துளைகளின் வழியே அம்பை எய்தார்கள். அவை பலரைக் கீழே வீழ்த்தின. தாம் நினைத்த வண்ணம் பாரியை எளிதில் வெல்வது இயலாத காரியம் என்பதை இப்போது முடிமன்னர்கள் உணர்ந்தார்கள்.

மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். மலையைச் சுற்றித் தங்கள் படையை நிறுத்தி முற்றுகையிடுவதென்றும், கீழிருந்து உணவுப் பொருள் மேலே செல்ல முடியாமல் தடுக்க வேண்டுமென்றும், நாளடைவில் உணவில்லாமல் மேல் உள்ளவர்கள் தாமே சரணடைவார்கள் என்றும் நினைத்தார்கள். அதன்படியே படைகள் நின்றன.

மேலே பாரியும் கபிலரும் படைவீரர்களும் இருந்தார்கள். அவர்கள் தம் கையில் சேமித்து வைத்திருந்த உணவுப் பண்டங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள். மலையின்மேல் மூங்கில்கள் முற்றியிருந்தன. அவற்றில் விளைந்த நெல்லைத் தொகுத்து அரிசியாக்கிச் சோறு சமைத்தார்கள். இனிய பலாப்பழங்களை உண்டு பசியாறினார்கள். பலாக்கொட்டைகளை மாவாக்கி அதிலிருந்து உணவுப் பண்டங்களைச் செய்து உண்டார்