பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேகன்

29

அந்தப் பரிசிலை நீ அருளவேண்டும். நீ இப்போதே உன் தேரில் ஏறி, வருத்தத்தோடு உறையும் அப் பெருமாட்டியின் துன்பத்தைக் களையவேண்டும்” என்று பாடினார்.

பேகன் காதில் அதுவும் விழுந்தது. அவன் முகம் நிமிர்ந்து பார்க்கவில்லை. சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்த பரணர், "நான் போய் வருகிறேன்" என்று விடைபெற்றுக் கொண்டார்.

அன்று பிற்பகலிலும் பேகனை வேறு புலவர்கள் அணுகினார்கள். அரிசில் கிழார் சென்றார். அவரும்: பாணன் கூற்றாகவே பாடினார்; "நின் நல்ல நாட்டைப் பாடிய பாணனாகிய என்பால் அன்பு வைத்துப் பரிசில் தர வேண்டுமென்று நீ எண்ணினாயானால் இந்தப் பரிசில் தரவேண்டும் : நின்னைப் பிரிந்து வாடும் அரிவை மீண்டும் தன் கூந்தலை வாரிப் பின்னிப் பூவைச் சூட்டிக் கொள்ளும்படி நீ இப்போதே தேரில் குதிரையைப் பூட்டவேண்டும்" என்று கவி பாடினர். அவர் போனபிறகு பெருங்குன்றுார் கிழார் வந்தார். அவரும் அதே போக்கில் பாடினார்.

பெரும் புலவர்கள் சொல்வதைக் கேட்டும். மனம் இரங்காமல் இருப்பானா பேகன்? அவன் தான் செய்த செயலுக்காக மிகவும் வருந்தினான். அன்றே தன் மனைவியைத் தானே சென்று அழைத்து வந்தான். மறுநாள் புலவர்கள் நால்வரையும் அரண்மனைக்கு வரச் செய்தான். தன் மனைவியையும் உடன் வைத்துக்கொண்டு அந்த நால்வரையும். வரவேற்று உபசரித்தான். கண்ணகி அப் புலவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். அப்போதும் அவள் கண்ணில் நீர் வழிந்தது. நன்றியறிவினாலும் மகிழ்ச்சியினாலும் வந்த கண்ணீர் அது.