பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

எழு பெரு வள்ளல்கள்

பேகன் அரண்மனையை அடைந்தான். அவனுடன் சென்றிருந்த காவலர்கள் அவன் மயிலுக்குப் போர்வையை அளித்த அதிசயத்தை யாவரிடமும் சொல்லிச் சொல்லி வியந்தார்கள். புலவர்களிடம் புகன்றார்கள். புலவர்களுக்கு ஒரு செய்தி தெரிந்தால் வாளா இருப்பார்களா? தம்முடைய பாவினால் பேகன் புகழை முழக்கினார்கள்.

பரணர் அந்த அரிய செயலைப் பாராட்டினுர். “மயில் மேலாடையை உடையாக உடுக்குமா? அன்றி மேலே போர்வையாகத்தான் போர்த்துக் கொள்ளுமா? இது பேகனுக்குத் தெரியாதா? தெரியும். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் கருணை உள்ளம் உருகியது. தன் படாத்தை மயிலுக்கு அளித்துவிட்டான்” என்று பாடினார்.

இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டிராமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் கொடை மடம் என்று சொல்வார்கள். மடம் என்பதற்கு அறியாமை என்று பொருள். இது சரியா, தவறா என்று ஆராயும் அறிவுக்கு இடம் கொடாமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே கொடை மடம் உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள். பேகன் மயிலின் இயல்பை அப்போது சிந்தித்துப் பார்க்கவில்லை; போர்வையை வழங்கிவிட்டான். இந்தக் கொடை மடத்தைப் பரணர் பாராட்டினர். “தண்ணீரே இல்லாமல் போன குளத்திலும் மழை பெய்கிறது; அகன்ற வயலிலும் பொழிகிறது; சிறிதும் பயன்படாத உப்பு நிலத்திலும் பெய்கிறது. இங்கேதான் பெய்ய வேண்டும், இங்கே பெய்யக் கூடாது என்று அது