பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

மென்று சொல்ல இயலாது. அவ்வளவு விரிவான குற்றங்களை அவர் சொல்லியிருக்கிறார். அவ்வளவையும் அருணகிரிநாதப் பெருமான் தம் வாழ்நாளில் புரிந்தார் என்றால் அதனை நம்ப முடியாது. அவை ஒரு வாழ்நாளில் செய்யக் கூடியவை அல்லவே! இருந்தாலும் அவற்றையெல்லாம் தம் வாழ்நாளில் தாமே புரிந்ததுபோல அவர் சொல்லியிருக்கிறாரே என்றால், அப்படிச் சொல்வது பெரியவர்களின் வழக்கம். இதை 'நைச்சி யானுசந்தானம்' என்று சொல்வார்கள்.

மகாத்மாக்கள்

ந்தப் பெரியவர்கள் தம்மை மாத்திரம் நினைந்து பாடுவதில்லை. உலகம் முழுவதிலும் இருக்கின்ற மக்கள் புரிகின்ற பாவங்களை, படுகின்ற துன்பங்களை, தாமே செய்தவை போலவும், தாமே அநுபவிப்பன போலவும் இறைவனிடத்தில் விண்ணப்பித்துக் கொள்வது அவர்களுடைய வழக்கம். ஒரு வக்கீல் தாம் செய்யாத குற்றத்தைப் பற்றிய சமாதானத்தைத் தம் கட்சிக்காரன் சார்பில் நின்று எடுத்துச் சொல்வது போலக் கருணை நிரம்பிய பெரியவர்கள் உலகத்தினர் படும் துன்பங்களையெல்லாம் தாம் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு, இறைவனிடத்தில் மன்றாடி நிற்கிறார்கள். "நான் பல பாவங்களை புரிந்திருக்கிறேன்; நான் பல துன்பங்களை அடைந்து துயருறுகிறேன்" என்று அவர்கள் சொல்லும்போது உலகத்திலுள்ள மக்கள் வேறு, தாம் வேறு என்ற நினைவும் அவர்களுக்கு இருப்பதில்லை. எவ்வுயிரும் தம் உயிர்போல நினைக்கின்ற இயல்பினால் அம்மகான்கள் அப்படிச் சொல்லுகிறார்கள். அவர்கள் மகாத்மாக்கள்; மற்றவர்கள் அல்பாத்மாக்கள்.

மகாத்மா என்றால் பெரிய உயிர் என்றும் அல்பாத்மா என்றால் சின்ன உயிர் என்றும் பொருள். சின்ன உயிர் பெரிய உயிர் என்று மக்கள் இப்போதும் சொல்வதைக் கேட்கிறோம். சின்ன உயிர் என்று கொஞ்ச நாள் இருந்துவிட்டு மறைகின்றவர்களையும், பெரிய உயிர் என்று அதிக நாள் உயிரோடு இருக்கின்ற வயது முதிர்ந்தவர்களையும் குறித்துச் சொல்லுகிறோம். மகாத்மாக்கள், அல்பாத்மாக்கள் என்பவற்றிற்கும் அத்தகைய பொருளைக் கொள்ளக்கூடாது.

க.சொ.l-2

9