வ.உ.சிதம்பரம்
7
வ.உ.சிதம்பரனார், காந்தி பெருமானிடம் தளராத பற்றும், நம்பிக்கையும், பாசமும் – பண்பும் கொண்டவர்தான் என்றாலும் கூட, காந்தீயத்தால் இந்திய நாட்டிற்கு ஏராளமான தீமைகளே ஏற்படும் என்று, வைராக்கியமாக, விடாப்பிடியாக, ஓய்வு ஒழிச்சலின்றிப் பிரச்சாரம் செய்து வந்தார்:
அதனால்தான் தனது இறுதிக் காலத்தில் அரசியல் தொண்டிலே தனக்குத் தானே வீழ்ச்சியை விளைவித்துக் கொண்ட பிடிவாதக் குணக்குன்றாக சிதம்பரனார் நின்றார்.
யாராக இருந்தாலும் சரி, தனது கொள்கைகளுக்கு உடன் படாதவர்களது உண்மைத் தன்மைகளை, வ.உசியார் உளமார உவந்து அவர்களை வரவேற்று; ‘நம்பியவர்களுக்குத் துரோகம் செய்யாதே’, என்ற உயர்வான நோக்கத்தை அவரவர்களுக்குப் போதித்தார் என்பதை நோக்கும் போது - அவரது பண்பாடு பாராட்டக் கூடியதாக உள்ளது.
பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் அதிகார, ஆணவக் கோட்டையைத் தகர்த்தெறியப் புறப்பட்டு விட்ட ஒரு பெரும் படையின் சக்திக்கு; தென்னகத்தின் தளபதியைப் போல, தமிழன் சிதம்பரம் பிள்ளை, வெறியுடனும், மனக் களிப்புடனும் தேச விடுதலைக் களவீரராக காட்சியளித்தார்!
ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய நாட்டை விட்டே விரட்டுவதில் முரட்டுத்தனம் காட்டியவர். ஆனால், இளகிய மனமும் இனிய குணமும் உடையவர். அதே நேரத்தில் தன்னைச் சூழ்ந்த தொண்டர்களிடத்திலும், தன்னை நம்பிப் பின்பற்றி வரும் பொதுமக்களிடத்திலும், நலமாகவும் நாகரிகமாகவும், அவர் நடந்து கொண்டவரே அல்லாமல், எவரிடத்திலும், எங்கும், அற்பத்தனமான மரியாதை