பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

கற்க வேண்டும். கற்க வேண்டுமென்று சொல்லாமல், இன்னும் கல்லாமல் இருக்கிறீர்களே" என்று இரங்குகிறார்.
   அயில்வேலன் கவியை அன்பால்
   எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்!

2

கற்றல்

ல்வியைக் கற்பது எப்படி என்று சற்று நின்று பார்க்க வேண்டும். ஒரு முறை படிப்பது, பலமுறை படித்து மனனம் பண்ணுவது, பொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அநுபவமாக மாறும் போது தான் அது முற்றுப் பெறும் என்று சொல்வர் பெரியோர். உண்மையான படிப்பு, படித்த உண்மையைத் தெளிந்து அடங்கும்போது தான் நிறைவேறும். ஆண்டவனுடைய புகழைக் கற்றுக் கேட்டு உணர்ந்து, அதனால் இன்பத்தை அநுபவிப்பது கல்வியால் ஆய பயன். அந்த அநுபவ நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

உலகில் மிகப் பெரிய ஞானிகள் பலர் இருந்திருக்கின்றார்கள். பழங்காலத்தில் சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர் என்று நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாதது, கேளாதது ஒன்றுமே இல்லை. நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை என்று சொல்லும் எல்லாவற்றையும் கற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்குச் சந்தேகம் நீங்கினபாடில்லை; அநுபவ நிறைவு ஏற்படவில்லை. அந்த ஐயத்தைத் தெளிவிக்க வேண்டுமெனப் பல பேர்களைக் கேட்டார்கள். அவர்கள் எல்லாம் புத்தகத்தில் இருக்கும் பொருள்களையே சொன்னார்கள். அவற்றை அவர்கள் முன்பே படித்தவர்களாதலால் அவற்றைக் கேட்டும் அவர்கள் சந்தேகம் நீங்கவில்லை. அவர்களுடைய கல்வி நிரம்பவில்லை. அந்த ஐயத்தைப் போக்குவதற்கு வழி என்ன? கடைசியில் இறைவன் அவர்களுடைய கல்வியையும், கேள்வியையும் பூரணமாக்கினான்; ஐயத்தைப் போக்கினான். கல்லாலமரத்தின் அடியில்

77