பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

போய்விடு" என்று சொன்னால், பழக்கப்பட்ட வீட்டை விட்டு வெளியே போவதற்கு அதற்கு மனம் வருமா? ஒருவனுடைய வீட்டில் நான்கைந்து ஆண்டுகள் குடியிருந்துவிட்டாலே, வீட்டுக்காரன் வீட்டைக் காலி பண்ணு என்றால் குடியிருப்பவனுக்கு அதை விட்டுப் போக மனம் வருவது இல்லை. பல ஆண்டுகள், பிறந்ததிலிருந்தே, இந்த உடம்பில் இருந்து வாழும் உயிரை அதை விட்டுப் போ என்றால் போகுமா? போகாது. அதனை வெளியே வரும்படி செய்ய, ஓர் அதிகாரி வருகிறான். எருமைக் கடாவில் யமன் வந்து, தன் கையிலுள்ள பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனை நாம் பாவி, கூற்றன், யமன் என்கிறோம்.

காலன் தன்னுடைய ஊழியத்தைச் செய்கிறான். அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். ஆனால் பெரியவர்கள் அவனைத் தர்மராஜன் என்று சொல்வார்கள். அவர்கள் மரணத்தை வரவேற்கிறவர்கள். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றவனாதலால் தர்மராஜா என்கிறார்கள். நாமோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். அதனால் அவனை வைகிறோம்.

பயமும் பக்தியும்

யமன் எருமைக் கடாவின் மீது ஏறி வருவான். அவனுக்குக் கோரப் பற்கள் இருக்கும். அவன் பார்க்கும் போதே கண் அனல் கொப்புளிக்கும்; புகைவிடும். அவன் நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கப் பாசக் கயிற்றைக் கையில் வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொல்லும்போதே அது நமது உள்ளத்தில் பயத்தை உண்டாக்குகிறது. மரணம் பயமுடையதென்று எண்ணுகிற நமக்குக் காலனும் அச்சந்தரும் கோலத்துடன் இருக்கிறான்.

"மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட் வேண்டும்? மரணத்தை வரவேற்கும்படியாகச் சொல்லக் கூடாதா?" என்றால், மரணத்தில் பயம் ஏற்பட்டால்தான் மரணத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை தோன்றும். தப்பும்படி அருள்கின்ற இறைவனிடத்தில் பக்தி உண்டாகும். காலனால் உண்டாகும் பயத்தை எடுத்துச் சொல்லி, அந்தப் பயத்தைப் போக்குகின்ற

98