பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

போகிற வாழைப்பழத்தை வாங்கிக் கொடுக்க அதன் பெற்றோர்களிடம் காசு இல்லை. நம்மிடம் வாழைப்பழம் இருக்கிறது. 'அந்த ஏழைக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தந்தால் என்ன?’ என்ற நினைப்பு நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்த நினைப்பு உடனேயே செத்துப் போகிது. கருவுற்ற பிறகு அது நன்றாக வளர்ந்து வெளியே வந்தால் அது குழந்தை ஆகிறது. வயிற்றுக்குள்ளேயே செத்துப் போனால் என்ன பயன்? குறைப் பிரசவம் ஆகும். கரு வயிற்றிலேயே இறந்து விட்டால், பெரிய டாக்டர்களைக் கூப்பிட்டு, 'ஆபரேஷன்' செய்து அதனை வெளியே எடுக்க வேண்டிய அபாயம் வந்துவிடுகிறது. கருவும் கெட்டு, அதைத் தாங்கிய உடம்பும் கெடுகிறது.

அப்படியே மனத்தில் சில நல்ல எண்ணங்கள் கருவாகத் தோன்றுகின்றன. அந்த எண்ணங்களை வளர்த்துக் செயல் ஆக்குவதற்கு நம்மிடம் திடம் இல்லை. பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தர வேண்டுமென்ற எண்ணம் கருவாகத்தான் தோன்றுகிறது. அந்த வாழைப் பழம் ஆயிரம் ரூபாய் பெறுமானதன்று. நாம் கடைக்குப் போய் வாங்கி வரவேண்டுமென்பதுகூட இல்லை. நம் கையில் இருக்கிறது. இருந்தாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கும் மனோதிடம் நம்மிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. இது மண்ணைத் தங்கம் ஆக்குகிற வித்தை அல்லவே. நம் சக்திக்கு உட்பட்டது தானே? ஆனால் அந்த நினைப்பை, தோன்றிய மனத்திலேயே, குழி வெட்டிப் புதைத்துவிடுகிறோம். வாழைப் பழத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நினைப்பு மனத்திலே தோன்றுகிறது. "அதனை எடுத்துக் கொடு" என்று கைக்கு உத்தரவு போடும் திண்மை மனத்திற்கு இல்லாமல் போகின்றது. கொடுக்காமல் நின்றுவிடுகிறோம்.

வீட்டில் நம்மை யாரும் மதிக்கிறது இல்லை என்று சொல்கிறோம். பெண்டாட்டி நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறாள் என்று சிலர் சொல்கிறார்கள். பிள்ளை நம் கருத்துப்படி வேலை செய்வதில்லை என்று சொல்கிறோம். வேலைக்காரர்களிடம் நாம் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு ஒன்று செய்கிறார்கள் என்று சொல்கிறோம். அப்படிச்சொல்ல நமக்கு என்ன வாய் இருக்கிறது? நாம் நினைக்கிறபடி நாம் முதலில்

144