பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐந்து பகைவர்

நடக்கிறோமா? நாமே நினைக்கிற எண்ணத்திற்கு நாமே கெளரவம் கொடுத்து நடக்கிறோமா? இங்கிருந்து ஆகாயத்தில் பறந்து போகவேண்டுமென்று நினைத்தால், அது நம்முடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல். அதைச் செய்ய முடியாததற்குப் பல காரணம் சொல்லலாம். ஆனால் இங்கிருந்து கோயிலுக்குப் போய் வர முடியாதா? நாம் செய்ய வேண்டியதை நினைக்கிறோம்; செய்யக் கூடியதை நினைக்கிறோம். ஆனால் நினைத்தபடி செய்வதில்லை. மனத்திண்மை உடையவர்கள் நினைத்தபடி செய்வார்கள். தங்கள் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவர்கள் நினைக்க மாட்டார்கள். மனத்திலே தோன்றிய எண்ணம் மனத்திற்குத் திண்மை இருந்தால் செயலாக விளையும். ஆகவே மனம் திண்மை உடையதாக இருக்க வேண்டும். திண்மை உடையவன் தன் மனத்திலே தோன்றுகிற எண்ணங்களைச் செயலாக மாற்றுவான்.

நினைத்தவை அனைத்தையும் செயலாக மாற்றுபவர்கள் மனத்திண்மை உடையவர்கள். நினைத்ததில் சிலவற்றைச் செயலாக மாற்றுபவர்கள் முயற்சி உடையவர்கள். நினைத்தவற்றில் பலவற்றைச் செயலாக மாற்ற இயலாதவர்கள் மனத்திண்மை அடியோடு அற்றவர்கள்.

மனத்திண்மை உடையவன் செய்கிறதை நினைப்பான்; அநாவசியமாக ஆசைப்பட மாட்டான். எனக்குப் பத்துக் கார் வேண்டுமென்று நினைக்க மாட்டான். எனக்கு நடக்கக் காலில் பலம் வேண்டுமென்று நினைப்பான். தன் சக்திக்கு அப்பாற்பட்டதையும், சக்திக்கு உட்பட்டதையும் நினைத்துத் தன் சக்திக்கு உட்பட்ட காரியத்தைக்கூடச் செய்யும் திண்மை அற்றவன் அதமன். தன் சக்திக்கு அப்பாற்பட்டவற்றையும் நினைத்துத் தன் சக்திக்கு உட்பட்ட காரியத்தைச் செய்கிறவன் மத்திமன். தன் சக்திக்கு உட்பட்டு இருக்கிற காரியங்களையே நினைத்து அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்கிறவன் உத்தமன்.

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்"

என்று பேசுகிறார் வள்ளுவர். எண்ணியதை எண்ணியபடி செயலிலே செய்வதற்கு மனத்திலே திண்மை வேண்டும்; அவர்கள் தங்களால்

145