பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேவற் பதாகை

கோழி இறக்கையை அடித்துக் கொண்ட மாத்திரத்தில் பிறவிக் கடல் கிழிந்து போய்விட்டது; இந்தப் பிறவியில் உண்டான பிரபஞ்ச வாசனையும் உடைந்து போய்விட்டது, இனி இறந்தபின் கிடைக்குமென்ற தேவலோக இன்ப வாழ்க்கையும் உதிர்ந்து போய்விட்டது. இனி அடுத்தது என்ன?

அகங்கார மமகாரங்கள்

இடைபட்ட குன்றமும் மாமேரு
வெற்பும் இடிபட்டவே.

ஒரு பெரிய மலை; அந்த மலையைச் சுற்றிப் பல குன்றுகள் இருக்கின்றன. இவ்வளவு மலைகள் இருப்பதனாலே இவற்றுக்கு நடுவில் தம்பமாக இருக்கிற மலை மிக வலிவு உள்ளதாகத்தானே இருக்கும்? மிக வலியைப் படைத்த ஒன்றுதான் கடைசியில் அழிந்து போகும். மகா மேரு மலை கிடு கிடுப்பதற்கு முன்னால் இடையிலுள்ள குன்றங்கள் எல்லாம் இடிபட்டன. கடைசியில் மாமேரு வெற்பும் இடிபட்டது. இதன் பொருளையும் சற்றே பார்க்கலாம்.

அகங்காரமானது, மமகாரத்தைச் சுற்றிலும் பெற்று, மிக்க வலிவுடையதாக, தம்பமாக, நிற்கிறது; மேருவைப் போல நிற்கிறது. இந்த அகங்காரம் என்ற ஒன்று, நான், நான் என்ற குரலை எழுப்பி இந்த உலகத்தில் பிறவிப் பிணியில் சிக்க வைக்கிறது. நான் என்ற ஒன்றைச் சுற்றி எனது என்ற மமகாரம் விரிந்து கொண்டே போகிறது. நான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. நான் என்பது மனிதன். எனது என்பது மனிதனோடு சம்பந்தப்பட்ட, பிணைக்கப்பட்ட, மற்ற எல்லாம். நான் என்ற தம்பம் ஒன்று. எனது என்ற குன்றுகள் பல. நான் என்ற புள்ளியை மையமாகக் கொண்டு எனது என்ற வட்டம் விரிந்து கொண்டே போகிறது. இவை எல்லாம் நாம் போக வேண்டிய மார்க்கத்தில் தடையாக இருக்கின்றன.

நாம் இறைவனை நோக்கிய நெறியில் செல்லவேண்டும். அதற்குத் தடையாக இருப்பவை பிறவிக் கடல், இந்தப் பிரபஞ்ச வாசனை, தேவலோக இன்பம். இவை மூன்றும் முதலில் அற்றுப் போக வேண்டும். இவற்றுக்கும் மேலாக மமகாரம், அகங்காரம் என்பவை இருக்கின்றன.

339