பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஒரு பெரிய காற்று அடிக்கும்போது முதலில் ஆலிலைப் பழுப்புக்கள் உதிர்கின்றன. அப்புறம் வீட்டின் கூரைகள் பறக்கின்றன. கடைசியில் வீடே இடிந்து விழுகிறது.

அதுபோல இறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்ட மாத்திரத்தில் பிறவிக் கடல் கிழிகிறது; பிரபஞ்ச வாசனை அற்றுப் போகிறது; தேவலோக இன்பப் பற்று உதிர்ந்து போகிறது. எனது எனது என்ற மமகாரங்களாகிய குன்றுகள் இடிபடுகின்றன. பிறகு, எனது என்ற மமகாரக் குன்றுகளுக்கு எல்லாம் மையமாக இருக்கிற நான் என்ற அகங்கார மேருவும் இடிபடுகிறது. அதுவே கடைசியில் இடிகிறது.

ஞான உதயம்

ம்மை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகச் சேவற் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான் எம்பெருமான். அது நமக்குச் சாதன அருளாக நிற்கின்றது. அறியாமை இருளில் தூங்கிக் கொண்டிருக்கிற ஆன்மாக்களுக்கு, ஞான சூரியனது உதயத்தை அறிவிப்பதற்காக அந்தக் கொடியிலுள்ள கோழிக் கூவுகிறது. அது கூவுவதற்கு முன்னே சிறகை அடித்துக் கொள்கிறது. சிறகை அடித்துக் கொள்ளும்போதே ஆன்மாக்களுக்கு மனப் பக்குவம் ஏற்பட்டுவிடுகிறது. கூவினால் இன்பம் பொங்கும். அது சிறகை அடித்துக்கொள்ளும் போது ஆன்மாக்களுடைய பிறவி ஒழிய, பிரபஞ்ச வாசனை போக, தேவலோக இன்பம் என்ற பற்று நீங்க, மமகாரம், அகங்காரம் எல்லாம் அழிந்து போகின்றன. அவை போகும் போது ஞானம் தோன்றுகிறது; இன்பம் உண்டாகிறது.

எம்பெருமான் திருவருளைப் பெற்று இன்பநலங்களைத் துய்க்க வேண்டுமானால் அதற்கு எற்ற மனப்பக்குவம் முதலில் நமக்கு வர வேண்டும். அந்தப் பக்குவம் சாதன அருளால் வரும்; அதனை ஏற்படுத்துவதற்காக அவன் திருக்கரத்தில் சேவல் கொடி இருக்கிறது. முதலில் அந்தக் கொடிக்கு ஒரு கும்பிடு போட வேண்டும்.

340