பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/347

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சேவற் பதாகை
படைபட்ட வேலவன் பால்வந்த
வாகைப் பதாகைஎன்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக்
கொள்ளச் சலதிகிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம்;
உதிர்ந்தது உடுபடலம்;
இடைபட்ட குன்றமும் மாமேரு
வெற்பும் இடிபட்டவே.

(ஆயுதமாக அமைந்த வேலையுடைய முருகனிடம் வந்த வெற்றியையுடைய கொடி என்று பலரும் பாராட்டும், தடை அழிந்த சேவலானது, தன் சிறகை அடித்துக் கொள்ள, அதனால் கடல் கிழிய, அண்டச் சுவர் உடைபட்டது; நட்சத்திரப் படலம் உதிர்ந்தது; நடுவில் உள்ள மலைகளும் மகாமேரு கிரியும் இடிபட்டன.

படைபட்ட - ஆயுதமாக உண்டான, படையாக அமைந்த. சூர சங்காரத்துக்குப் பின் அவன் கையில் வந்து அமர்ந்தமையின் 'வந்த' என்றார். வாகை - வெற்றி; ஆகுபெயர். பதாகை - கொடி. தடைபட்ட - தடைகள் அழிந்த, அடிக் கொள்ள - அடிக்க. சலதி - கடல். அண்டகடாகம் - பிரபஞ்சப் பரப்பு. உடுபடலம் - நட்சத்திரப் பரப்பு. இடைபட்ட - நடுவிலே உள்ள.)

முன் பாட்டில் மயிலின் வேகத்தினால் மேரு அசைய எண்திசை வரைகளும் தூள்பட்டனவென்று பாடினார். இந்தப் பாட்டிலும் அந்த இரண்டும் பட்ட பாட்டைச் சொன்னார்.