பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/348

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கிங்கிணி ஓசை

1

குழந்தைப் பருவம்

முருகனுடைய திருவிளையாடல்களை அழகுபடச் சொல்லி வரும் அருணகிரிநாதர், அவனுடைய குழந்தைப் பருவச்செயல்களைச் சொன்னார். பிள்ளைப் பருவத்தைப் பாராட்டும் ஒருவகைப் பிரபந்தத்துக்குப் பிள்ளைத் தமிழ் என்று பெயர். காப்புப் பருவம், தாலப்பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என்று பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்தையும் சிறப்பித்துப் பாடுவார் புலவர்.

அருணகிரியார் தனியே பிள்ளைத் தமிழ் என்று பெயர் வைத்து ஒன்றும் பாடவில்லை. ஆனாலும் பிள்ளைப் பருவ வருணனைகளை அவர் பாடலிற் காணலாம். பெரியாழ்வார் கண்ணபிரான் உடைய பால லீலைகளைப் பாடியிருக்கிறார். பிள்ளைத்தமிழ் என்று பெயரிட்டுச் சொல்லாவிட்டாலும் பிள்ளைப் பருவத்தைப் பற்றிய தமிழ்ப்பாடல்கள் அவை. அப்படியே முருகனுடைய பிள்ளைப் பருவத் திருவிளையாடல்களை அருணகிரிநாதர் அங்கங்கே சொல்லியிருக்கிறார். உமா தேவியாரின் பாலை அருந்திச் சரவணப் பொய்கையில் உள்ள தாமரையாகிய தொட்டிலில் ஏறித் துயின்றதையும், அழுததையும் "திருந்தப் புனவங்கள்" என்ற பாட்டில் வருணித்தார். தாலப் பருவத்துச் செயல்கள் அவை. துயிலுகின்ற முருகக் குழந்தை விழித்துக் கொண்டு காலை உதைத்து விளையாடுகிறது. அதன் உடம்பு அசைகிறது. அப்போது அதன் இடையிலுள்ள சலங்கை குலுங்குகிறது. அந்த ஒசையினால்