“சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பில் பல்வேறு சமயங்களைக் குறிப்பிட்டுப் பஞ்சபூதங்களாலாகியது இந்த உலகத்தின் தோற்றம் என்பதைச் சுட்டி, வைதிகச் சமயங்களாகிய வைணவம், சைவம் ஆகியவைபற்றியும் புறச்சமயங்களான சார்வாகம், சமணம், பௌத்தம் முதலியவைபற்றியும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கியுள்ளார்கள். வைதிகச் சமயங்கள் யாவும் இறைவன் படைப்பிற்கு இறைவனையே நிமித்த காரணமாய்க் கொள்வதையும், புறச்சமயங்கள் யாவும் அணுக்களிலிருந்துதான் உலகம் தோன்றியது என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
‘அறிவியல் நோக்கில் சமயம் தத்துவம்’ என்னும் தலைப்பில் அண்டங்களின் அமைப்பையும் அணுவின் அமைப்பையும் ஒப்பிட்டு விளக்கி, 'ஆதவனே ஆற்றலின் மூலம்' என்பதையும், அவ்வாற்றலை ஆருயிர்கள் பல்வேறு பொருள் வடிவங்களின் மூலம் நுகர்கின்றன என்பதையும், இதற்கு அறிகுறியாகத்தான் பொங்கல் திருநாளை உழவர்கள் “தமிழர் திருநாளாகக்” கொண்டாடுகிறார்கள் என்பதையும் விளக்கமாய்த் தெளிவாக்கியுள்ளார்கள்.
அணுவாற்றலே சக்தி தத்துவமாய் உருவெடுத்தது என்றும், அறிவியல் யுகத்தில் தோன்றிய பாரதியார் அறிவியல் அடிப்படையில் தம் பாடல்களைப் படைத்துள்ளார் என்றும் பெருமையுடன் சுட்டியுள்ளார்கள்.
இந்த அருமையான, அறிவியல் நோக்கில் - போக்கில் - அமைந்த பனுவலை உலகத் தத்துவ மேதை டாக்டர் T.M.P. மகாதேவன் அவர்கட்கு அன்புப்படையலாக்கியிருப்பது மேலும் இதற்குப் பெருமை சேர்ப்பதாய் அமைகின்றது. இச்சீரிய நூலைத் தமிழ்ப்பெருமக்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்பது என் விழைவு.
டாக்டர் ரெட்டியார் அவர்கள் மேலும் மேலும் தமிழ் மக்கட்குப் பயன்படுமாறு அறிவியல் சார்ந்த நூல்களை எழுதிக் கொண்டே பல்லாண்டுகள் மனவளமுடனும் உடல் நலத்துடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்.
- என். கிருட்டிணசாமி ரெட்டி