பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அக்கப்போர் ரீதியில், கொலை, தற்கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்துகள் முதலிய செய்திகளைப் பெரிதுபடுத்தி, எடுப்பாகக் கொடுத்துக் கொண்டிருப்பது மட்டுமே பத்திரிகைகளின் கடமை இல்லை.

மனித மாண்பு வெளிப்படுகிற செயல்களையும், சாதனை வீரர்களின் செயல் முறைகளையும், உலகத்தின் சகல பகுதிகளிலும் வசிக்கிற மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்துவதன் மூலம், மக்களின் அனுபவத்தையும் அறிவையும் விசாலப்படுத்த வேண்டியதும் பத்திரிகையாளர் பொறுப்பு தான்.

நாளிதழ்கள் கூட இப்படிப்பட்ட சிறப்புக் கட்டுரைகளைப் பிரசுரிக்கலாம். ஒரு சில இதழ்கள் இவ்வகையில் செயலாற்றுவது பாராட்டுதலுக்கு உரியது.

ஆனால், பொதுவாக, நாளிதழ்கள், எண்ணிக்கையில் அதிகரித்திருந்த போதிலும், நாட்டின் நிகழ்ச்சிகளையும், உலக சமாச்சாரங்களையும் ஒருவர் போதுமானபடி அறிந்து கொள்ளக் கூட உதவிபுரியவில்லை.

‘கட்சிப் பத்திரிகைகள்’ அந்த அந்தக் கட்சிகள், கட்சித் தலைவர்கள், சம்பந்தமான செய்திகளை மட்டுமே தருகின்றன.

மாவட்டம் தோறும் தனித் தனிப் பதிப்புகள் என்று ஆகிவிட்ட பிறகு, அந்தந்த மாவட்டச் செய்திகள் மட்டுமே, சம்பந்தப்பட்ட பத்திரிகைகளில் பிரசுரம் பெறுவது வழக்கமாகிவிட்டது. முக்கியமான செய்திகள் கூட சகல பதிப்புகளில் இடம் பெறுவதில்லை. இதர மாநிலச் செய்திகள், உலக விசேஷச் செய்திகள் இவற்றில் தலைகாட்டுவதேயில்லை.