31
இதுவரை ஆளாகியிராத புதிய குழப்பத்தின் தலை வாயிலில் நிறுத்தப்பட்டார் திருவாளர் திருவம்பலம்.
“வள்ளி தேவானை ரெண்டையும் கலந்து பேசி ஜாதகம் பார்த்து முடிவு செய்யவேண்டிய விஷயம் இது. எனக்கு ஒரு கிழமை தவணை குடுங்க. இந்தத் தையிலே கட்டாயம் பையன் எங்க வீட்டு மாப்பிள்ளையாகிடுவாங்க; வீணா நீங்க மனசைப்போட்டு உளப்பிக்கிடாதீங்க, அத்தான்!” என்றார் திருவம்பலம்.
பாக்கு வெற்றிலைப் பெட்டியின் கனம் கொஞ்சம் இறங்கியது.
✽✽✽
இளங்காலைப் பொழுது. மண்ணைப் பொன்னாக்கும் ரஸவாத வித்தையில் ஈடுபட்டிருந்தான் செஞ்சுடர்ச் செல்வன்.
திருவம்பலச் சேர்வையின் மாட்டுத் தொழுவத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் கழுநீர் கொணர்ந்து ஊற்றினாள் வள்ளிந பிண்ணாக்குத் துண்டங்களைத் துகள்களாக்கி உதிர்த்துப்போட்டாள் தேவானை. வெள்ளைக் காளையை அவிழ்த்துவிட்ட பெருமை வள்ளிக்கு; செவலை மாட்டுக்குத் தொட்டித் தண்ணீர் காட்டிப் புண்ணியம் சேகரித்துக்கொண்ட செருக்கு தேவானைக்கு.
அது சமயம், “ஓ! மாப்பிள்ளையா? வாங்க மாப் பிள்ளை” என்ற குரல் கேட்டது.
வடித்த தண்ணீரில் தவிட்டைக் கொட்டிக் கலக்கிக் கொண்டிருந்த அதே கோலத்தில் தலை நிமிர்ந்தாள் வள்ளி கையில் அப்பியிருந்த தவிட்டுப்பொடிகளைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் ‘விடு விடு’ வென்று முன்னே அடியெடுத்து வைத்து நடக்கலானாள். மறுகணம் அவளின் களை பொருந்திய முகம் சாம்பியது.