பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


சாதகமாகவே இருக்கும், கமலாட்சி!...உன் அப்பாவுடைய மிதமிஞ்சின சீக்கைப்பத்தி உனக்குத் தெரிவிச்சா, நீ புழுவாத் துடி துடிச்சுப் போவியேன்னு, இதுநாள் பரியந்தம் மறைச்சேன். கடைசிலே இன்னிக்கு காலம்பறத் தான் கடுதாசி போட்டேன். இடிக்குமேல் இடியா வரச் செஞ்சு இப்படி நம்மளை பகவான் சோதிக்கிறாரு. நாம அற்பங்க!...தேவியோட விளையாட்டுக்கு ஈடுகொடுத்து நிற்க நம்மாலே முடியுமா? எல்லாம் தாயோட கிருபை தான்!...நீ வாம்மா, சாப்பிட!...டாக்டர் சொன்னதை கேட்கலையா? எல்லாம் சரியாகிப் போயிடும். சமயம் புரிஞ்சு மாப்பிள்ளையை நீ கொண்டாந்ததே பெரிய சமர்த்துத்தான்!...நீ வாம்மா!"

தொண்டைக் குழியில் நிரம்பி வழிந்த பாசத்தின் சுழிப்பில் தோய்ந்தெழுந்த ஆறுதல் மொழிகள் மகளுக்கு மட்டுமே கேட்கும் அளவுக்குச் சன்னமாக ஒலித்தன. புதல்வியின் கண்களைத் துடைத்தாள். இரண்டொரு நீர்மணிகள் சிதறி, பாலமுதம் உண்ட குழவியின் நெற்றி மேட்டில் விழுந்தன. அகிலாண்டம் மகளின் கரம் பற்றிக் கூப்பிட்டபோது, கமலாட்சியின் நோக்கல் தன் ஆருயிர்க்கணவரின் கட்டிலில் குறிபாய்ந்திருக்க கண்டாள். ‘அம்மா, இவர் ரொம்ப ரொம்பத் தங்கமானவர். இவர் கையினாலே எனக்குத் தாலிப்பாக்கியம் கிடைக்கிறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்க வேணும் அம்மா! மெய்தான் அம்மா!' என்று கமலாட்சி திருமணமான புதிதில் மனம் நிறைந்து சொன்ன நடப்புக்கள் சிலையோடின. 'ஈஸ்வரா! மாப்பிள்ளையைக் காப்பாற்று. என் ஒரே ம்களின் தாலியைக் காத்துக்கொடு, அம்பிகே!' அங்க அசைவு துளியும் இன்றி, கட்டைபோல கிடந்த மாப்பிள்ளையைக் கண்ட அவளுக்கு, உலகம் பாழ்வெளியாய் விட்டதைப் போன்று. ஓர் எண்ணம் தோன்றியது. வினாடிக்கு வினாடி பூஜைக்